மதுரை மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கழிவுநீர்க் குழியில் விழுந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு தி.மு.க. தலைவரும் தமிழகத்தின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன் நிவாரண உதவியும் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி வட்டம், டி.ஆண்டிப்பட்டி கிராமத்தில் வசித்துவரும் சந்தனகருப்பு – கிருஷ்ணவேணி தம்பதியரின் இரண்டு குழந்தைகள் கேசவன் மற்றும் ரோஷன் உள்ளிட்ட இருவரும் கடந்த 15.3.2025 அன்று மாலை 4.00 மணியளவில் வீட்டினருகே விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அருகிலிருந்த கழிவுநீர்க் குழியில் விழுந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் நீரில் தத்தளித்த ரோஷன் அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்ட நிலையில் மற்றொரு குழந்தை கேசவன் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த குழந்தை கேசவனின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்றுத் தெரிவித்துள்ளார்.