''ஹிந்தி தேசிய மொழி, டெல்லியில் தகவல் தொடர்புக்கு ஹிந்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்,'' ஆந்திர முதல்வர்..!
Seithipunal Tamil March 18, 2025 08:48 AM

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு தமிழக அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அத்துடன், ஆளும் பா.ஜ.க. அரசு தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சி செய்வதாக தி.மு.க. அரசு குற்றம் சாட்டுகிறது. மேலும் மத்திய அரசுக்கு எதிராககண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகிறது.

ஆனால், மும்மொழிக் கொள்கையில் இந்தி கட்டாயம் கிடையாது என பா.ஜ.க. கூறி வருகிறது. இந்நிலையில், டெல்லியில் இந்தி பயன்படுவதால் அனைவரும் அதை கற்றுக்கொள்ள வேண்டும் என ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 

இது குறித்து ஆந்திர சட்டசபையில் அவர் பேசியதாவது;-

"நாம் நமது தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதே சமயம், டெல்லியில் தகவல் தொடர்புக்கு பயனுள்ளதாக ஹிந்தி இருப்பதால் ஹிந்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். ஹிந்தி தேசிய மொழி, ஆங்கிலம் சர்வதேச மொழி.'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவர் மேலும் குறிப்பிடுகையில், ''வாழ்வாதாரத்திற்காக நாம் எத்தனை மொழிகளையும் கற்றுக்கொள்வோம். ஆனால், தாய்மொழியை நாம் மறக்க மாட்டோம். மொழி தொடர்புக்கு மட்டுமே. அதிக மொழிகளை கற்றுக்கொள்வது சிறந்தது.'' எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், '' சிலர் ஆங்கில மொழியை அறிவு நினைக்கிறார்கள். மொழி என்பது தொடர்புக்கு மட்டுமே. அது அறிவைக் கொண்டுவராது. தாய்மொழியை கற்றுக்கொள்வது எளிதானது. தாய்மொழியில் படிக்கும்போது கல்வி அறிவு மேம்படும்." என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.