திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசைன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் கார்த்திக், அக்பர்ஷா உள்ளிட்டோர் சரணடைந்துள்ளனர்.
இந்த நிலையில், காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசைன் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:- "திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசேன், காலையில் தொழுகை முடித்து வரும் வழியில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
பணி ஓய்வுக்குப் பிறகு, சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வந்த அவர், வக்பு வாரிய நிலங்களை ஆக்கிரமித்தவர்களை எதிர்த்துக் குரல் கொடுத்ததை அடுத்து, அவருக்குக் கொலை மிரட்டல்கள் இருந்து வந்ததாக, சில நாட்களுக்கு முன்பு அவர் பேசிய காணொளி வெளியாகி உள்ளது.
ஒரு ஓய்வு பெற்ற காவல் அதிகாரிக்கே கொலை மிரட்டல் விடுத்து, அவரைப் படுகொலை செய்யுமளவுக்குத் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. சாமானிய மக்களின் புகார்களைக் காவல்துறை கண்டுகொள்வதில்லை.
திமுக அரசை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மட்டுமே காவல்துறை பயன்படுத்தப்படுகிறது. இந்த கையாலாகாத திமுக அரசால், இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுக்கப் போகிறோம்? என்றுத் தெரிவித்துள்ளார்.