மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், கீழக்கரை கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், கீழக்கரை கிராமத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் கடந்த 16.03.2025 அன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுபிடி வீரராக பங்கேற்ற வாடிப்பட்டி வட்டம். மேலக்கால் கிராமம். உட்கடை கச்சிராயிருப்பு கிராமத்தைச் சேர்ந்த திரு.மகேஷ்பாண்டி (வயது 24) த/பெ. முத்துப்பாண்டி என்பவர் மாடு முட்டியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை அளிக்கப்பட்டதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்த திரு.மகேஷ்பாண்டி அவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.