சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் தங்கியிருந்த 9 மாதங்களில் என்ன செய்தார்?
BBC Tamil March 19, 2025 04:48 PM
Getty Images சுனிதா வில்லியம்ஸ் (கோப்புப் படம்)

சர்வதேச விண்வெளி நிலையத்தில் நீண்ட காலம் தங்கியிருக்க வேண்டிய சூழலை எதிர்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் தங்களை தொடர்ந்து இயங்கச் செய்ய என்ன செய்தனர்? ஈர்ப்பு விசையற்ற சூழலில் உடற்தகுதியைப் பேண தொடர்ச்சியான உடற்பயிற்சி, வாக்களித்தல், உற்சாகமான கிறிஸ்துமஸ் உணவு இவைதான் பூமியிலிருந்து 400 கி.மீ. தொலைவில் அவர்கள் தொடர்ச்சியாக செய்தது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் நாசா விண்வெளி வீரர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது, அவர்கள் நேரத்தை எப்படிக் கடத்தினார்கள்?

நிச்சயமாக அவர்களது நேரத்தை முழுமையாக பயன்படுத்த விண்வெளி பணிகள் ஏராளமாக இருந்தன.

59 வயதான சுனிதா வில்லியம்சும் 62 வயதான வில்மோரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நடந்த பயணங்களுக்கான பராமரிப்பு மற்றும் சோதனைகளில் உதவினர். இருவரும் விண்வெளி நடைகளை (Space Walk) மேற்கொண்டனர்.

Getty Images

ஜனவரி நடுப்பகுதியில் சக விண்வெளி வீரர் நிக் ஹேக்குடன் சுனிதான வில்லியம்ஸ் பழுது பார்க்கும் பணிக்காக விண்வெளி நிலையத்தை விட்டு வெளியே சென்றார். அதே மாதத்தின் இறுதியில் சுனிதாவும் வில்மோரும் இணைந்து விண்வெளி நடையை மேற்கொண்டனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தின் நோக்குநிலையை நிர்வகிக்கும் கருவிகளை சரிசெய்தல், NICER எக்ஸ்-ரே தொலைநோக்கியில் ஒளி வடிகட்டிகளைச் சேர்ப்பது மற்றும் டாக்கிங் அடாப்டரில் பிரதிபலிப்பு சாதனத்தை மாற்றுவது ஆகியவை அவர்கள் செய்த பணிகளில் அடங்கும்.

பூமியில் வாழ்ந்த வாழ்க்கையை பிரதிபலித்தல் Getty Images

சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபடியே, கடந்த செப்டம்பரில் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். அப்போது, "எதிர்பாராததை எதிர்பார்க்க" பயிற்சி பெற்றிருந்ததாக அவர்கள் கூறினர்.

அவர்கள் தங்கள் சொந்த ஊர் வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கவும், பூமியில் உள்ளவர்களை விட அதிகமான சூரிய உதயங்கள் மற்றும் சூரிய அஸ்தமனங்களைப் பார்க்கவும் வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

சர்வதேச விண்வெளி நிலையம் நாளொன்றுக்கு 16 முறை பூமியைச் சுற்றி வருவதால் அது 16 சூரிய உதயங்கள் மற்றும் சூரிய அஸ்தமனங்கள் வழியாக பயணிக்கிறது, இதனால், அதனுள் இருக்கும் விண்வெளி வீரர்கள் ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கும் ஒரு சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனத்தைப் பார்க்கலாம்.

"இது உங்களை சற்று வித்தியாசமாக சிந்திக்கச் செய்யும் வாய்ப்பைத் திறக்கிறது. இது(பூமி) நம்மிடம் உள்ள ஒரே கிரகம், அதை நாம் கவனித்துக் கொள்ள வேண்டும்," என்று சுனிதா வில்லியம்ஸ் கூறினார்.

"பூமியில் ஏராளமான மக்கள் எங்களுக்கு செய்திகளை அனுப்புகிறார்கள், இது அனைவருடனும் வீட்டில் இருப்பது போல் உங்களை உணர வைக்கிறது." என்றார் அவர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களித்தல்

சுனிதா, வில்மோர் மட்டுமின்றி, அவர்களுடன் இருந்த 2 அமெரிக்கர்களான டான் பெட்டிட், நிக் ஹேக் ஆகிய 4 பேரும் கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பைப் பெற்றனர்.

"குடிமக்களாக நமக்கு இருக்கும் மிக முக்கியமான கடமை இது," என்று சுனிதா வில்லியம்ஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.

தேர்தல்களில் வாக்களிப்பதை நாசா "மிகவும் எளிதாக்கியுள்ளது" என்று புட்ச் வில்மோர் கூறினார்.

அவர்கள் வாக்களிப்பதை எளிதாக்க, ஹூஸ்டனில் உள்ள மிஷன் கண்ட்ரோல் சென்டர், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மின்னஞ்சல் வழியாக வாக்குச் சீட்டுகளை அனுப்பியது. விண்வெளி வீரர்கள் அவற்றை நிரப்பி செயற்கைக்கோள் தகவல் தொடர்பு வாயிலாக நியூ மெக்ஸிகோவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து, தரைவழி இணைப்புகள் வாக்குச் சீட்டுகளை மிஷன் கண்ட்ரோலுக்கு அனுப்பின. பின்னர் அவர்கள் மின்னணு முறையில் அவற்றை விண்வெளி வீரர்களின் சொந்த கவுண்டி அலுவலர்களுக்கு அனுப்பினர்.

ஈர்ப்பு விசையற்ற நிலையில் உடல் நலனை பராமரித்தல் NASA

வில்மோரை பொருத்தவரை, ஒவ்வொரு நாளும் காலை 04:30 மணிக்குத் தொடங்குகிறது. சுனிதா வில்லியம்ஸைப் பொருத்தவரை, அவர் ஒவ்வொரு நாளையும் காலை 06:30 மணிக்கு தொடங்குகிறார்.

விண்வெளியில் வாழ்வதால் ஏற்படும் எலும்பு அடர்த்தி இழப்பை சமாளிக்க தினமும் இரண்டு மணி நேரத்திற்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதை இருவரும் வழக்கமாக கொண்டிருந்தனர்.

"உங்கள் மூட்டுகள் வலிக்காது, இது மிகவும் நன்றாக இருக்கிறது" என்று புட்ச் வில்மோர் கூறியுள்ளார்.

பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் வாழ்வதன் விளைவை எதிர்கொள்ள 3 வெவ்வேறு இயந்திரங்கள் உதவுகின்றன.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் NASA

கிறிஸ்துமஸை முன்னிட்டு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்வெளி வீரர்கள் பண்டிகை செய்தியை வெளியிட்டனர், அதில் அவர்கள் பூமியில் உள்ள தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

சாண்டா தொப்பிகள் மற்றும் கலைமான் கொம்புகளை அணிந்த குழு, மெதுவாக சுழலும் மைக்ரோஃபோனை ஒருவருக்கொருவர் வீசி பேச, இனிப்புகள் அவர்களை ச் சுற்றிலும் மிதந்தன.

ஈர்ப்பு விசையே இல்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில், வீரர்கள் தங்களது தலைமுடியை கீழ்நோக்கி இருக்கச் செய்ய இது ஒரு வாய்ப்பாக இருந்தது. ஆனால் சுனிதா வில்லியம்ஸ் விஷயத்தில் அது நடக்கவில்லை. அப்போதும் அவரது தலைமுடி 'மேலே' மிதப்பது போன்ற நிலையில் இருந்தது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரின் இறுதி கடமைகளில் ஒன்று, அவர்களுக்குப் பிறகு அங்கே சென்ற புதிய குழுவினரை சிறப்பாக உணர வைப்பதாகும்.

மார்ச் 16-ஆம் தேதி ஒரு புதிய குழுவினரை ஏற்றிக் கொண்டு ஸ்பேஸ்எக்ஸ் காப்ஸ்யூல் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றது. இருவருக்குமே இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். ஏனெனில் அதுவே அவர்கள் இருவரும் பூமிக்கு மீண்டும் திரும்ப வழி வகுத்தது.

சுனிதா வில்லியம்ஸ் புதிய குழுவைச் சேர்ந்த விண்வெளி வீரர் அலெக்ஸி ஓவ்சினினிடம் பணிகளை ஒப்படைத்தார்.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இந்திய நேரப்படி, செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) காலை 10.35 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டு சுமார் 17 மணி நேர பயணம் மேற்கொண்டு புதன்கிழமை (மார்ச் 19-ம் தேதி) அதிகாலை 3.27 மணிக்கு பூமியை வந்தடைந்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.