கணவனை கொன்றுவிட்டு காதலனுடன் சிம்லா டூர்; கணவரின் போனிலிருந்து சாட்டிங் -வெளியாகும் பகீர் தகவல்கள்
Vikatan March 20, 2025 10:48 PM

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த செளரப் ரஜபுத் என்பவர் கப்பலில் வேலை செய்து வந்தார். அவரை அவரது மனைவி முஸ்கான் என்பவர் தனது காதலன் சாஹிலுடன் சேர்ந்து படுகொலை செய்து உடலை பல துண்டுகளாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலையை இருவரும் சேர்ந்து செய்த பிறகு உடலை பல துண்டுகளாக வெட்டி டிரம் ஒன்றில் போட்டு அதில் சிமெண்ட் போட்டு மூடிவைத்துவிட்டு ஜாலியாக சிம்லாவிற்கு சென்று மகிழ்ச்சியை கொண்டாடி இருக்கின்றனர்.

சிம்லாவிற்கு முஸ்கான் தனது கணவரின் மொபைல் போனையும் எடுத்து சென்றுள்ளார். அங்கிருந்து கொண்டு போலீஸார் மற்றும் கணவரின் குடும்பத்தை கவனத்தை திசை திருப்புவதற்காக கணவரின் போனில் இருந்து கணவரின் சகோதரியுடன் சாட்டிங்கில் ஈடுபட்டுள்ளார்.

கணவரின் மொபைலில் இருந்து சாட்டிங்

ரஜபுத்தின் சகோதரி சிங்கியுடன் வாட்ஸ் ஆப் மூலம் சிம்லாவில் இருந்து கொண்டு சாட்டிங் செய்துள்ளார். அந்த சாட்டிங் விபரங்கள் இப்போது வெளியாகி இருக்கிறது. அதில் `ஹோலிக்கு மீரட்டில் இருப்பாயா?’ என்று சிங்கிக்கு ரஜபுத் போனில் இருந்து ஒரு மெசேஜ் வந்தது. உடனே சிங்கி `ஆம்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

உடனே `தான் வெளியில் இருப்பதாகவும், ஹோலி முடிந்த பிறகுதான் வருவேன்’ என்று ரஜபுத் போனில் இருந்து சிங்கிக்கு வாட்ஸ் அப் மெசேஜ் வந்தது. ஆனால் மெசேஜ் மட்டுமே வந்து கொண்டிருந்தது. மார்ச் 8ம் தேதி மீண்டும் சிங்கி தனது சகோதரனுக்கு `ஏன் மகளை அழைத்து செல்லவில்லை?’ என்று கேட்டு மெசேஜ் அனுப்பினார்.

புகார் அளித்த உறவினர்கள்

உடனே சிம்லாவில் அதிக குளிர் என்றும், அங்கு மகளை அழைத்து வந்தால் உடல்நலம் பாதிக்கப்படும் என்று ரஜபுத் போனில் இருந்து மெசேஜ் வந்தது. ஹோலி முடிந்த பிறகு 15ம் தேதி சிங்கி மீண்டும் தனது சகோதரனுக்கு மெசேஜ் செய்தார். அதில் எப்போது மீரட் திரும்புவாய் என்றும், நான் கிளம்புகிறேன் என்றும் குறிப்பிட்டு இருந்தார். அதற்கு நான் எப்போது வருவேன் என்று உறுதியாக சொல்ல முடியாது என்றும், பார்ட்டி ஒன்று இருக்கிறது என்றும் குறிப்பிட்டு இருந்தார். அடுத்த நாள் அதாவது மார்ச் 16ம் தேதி சிங்கி தனது சகோதரனுக்கு கால் செய்தார். ஆனால் போன் எடுக்கப்படவில்லை. அடுத்த நாளும் தொடர்ந்து போன் செய்தார். ஆனால் போனை எடுத்து பேசவில்லை. இதனால் ரஜபுத் குடும்பத்தினர் சந்தேகம் அடைந்தனர்.

அவருக்கு என்ன ஆனது என்று தெரியாததால், இது குறித்து ரஜபுத் குடும்பத்தினர் போலீஸில் புகார் செய்தனர். ரஜபுத் லண்டனில் இருந்து வந்த பிறகு தினமும் தனது மகளை பள்ளிக்கு அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால் அவர் கொலை செய்யப்பட்ட பிறகு ரஜபுத்தை காணவில்லை. இதனால் பக்கத்து வீட்டுக்காரர்கள் ரஜபுத் எங்கே என்று கேட்டனர். அதற்கு அவர் விடுமுறையை கழிக்க மலைப்பகுதிக்கு சென்று இருப்பதாக முஸ்கான் சொல்லி சமாளித்தார். அதோடு சிம்லா சென்ற பிறகு அங்கிருந்து கொண்டு ரஜபுத் போன் மூலம் அவரது சோசியல் மீடியா பக்கத்தில் சிம்லா தொடர்பாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து முஸ்கான் பகிர்ந்து கொண்டிருந்தார்.

ரஜபுத் உயிரோடு இருக்கிறார் என்பதை தெரிவிப்பதற்காக இது போன்று முஸ்கான் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். ஆனால் முஸ்கான் சிம்லாவில் இருந்து வந்த பிறகு ரஜபுத்தை கொலை செய்ததை தனது தாயாரிடம் தெரிவித்தார். அவரது தாயார் உடனே தனது மகளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். தனது மகளை அவர் செய்த காரியத்திற்காக தூக்கிலிடுங்கள் என்று முஸ்கான் தாயார் அழுதுகொண்டே தெரிவித்தார். முஸ்கானின் மகள் இப்போது முஸ்கான் பெற்றோருடன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.