கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் 13 மற்றும் 14 வயதில் இரண்டு சிறுமிகள் வசித்து வருகின்றனர். கடந்த 2014-ஆம் ஆண்டு இந்த சிறுமிகள் திடீரென காணாமல் போய்விட்டனர். இதனையடுத்து ஒரு வாரம் கழித்து வீட்டிற்கு திரும்பி வந்த சிறுமிகளிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார்(39) அவரது மனைவி தமிழரசி(39) ஆகியோர் தங்களை கடத்தி சென்றதாக சிறுமிகள் கூறியுள்ளனர். மேலும் நெய்வேலி, வடலூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக சிறுமிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சதீஷ்குமார், தமிழரசி உள்ளிட்ட 22 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். கடந்த 2016-ஆம் ஆண்டு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்ட வழக்கில் 17 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் நம்மாழ்வார், செந்தில்குமார் ஆகியோர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தனர். ஆனால் 7 ஆண்டுகளாக சதீஷ்குமார், தமிழரசி தம்பதியினர் தலைமறைவாக இருந்தனர். இந்த நிலையில் கருமத்தம்பட்டியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த சதீஷ், திருவண்ணாமலையில் வீட்டு வேலை பார்த்த தமிழரசி ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.