தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரிய பதில் கிடைக்கும் வரையில் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் போராடுவோம் என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்' என்ற வாசகம் அடங்கிய டி-சர்ட் அணிந்து அவைக்கு சென்றது குறித்து திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. உரிய பதில் கிடைக்கும் வரையில் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் போராடுவோம். எதிர்க்கட்சிகளே இல்லாமல் அவையை நடத்த வேண்டும் என மனநிலையில் உள்ளனர்.
ஆளுங்கட்சியினர் தங்கள் கருத்துகள், நம்பிக்கைகள் அடங்கிய வாசகங்களை கொண்ட சால்வை, மாஸ்க்கை அவைக்கு அணிந்து வரும்போது, அதை யாரும் எதுவும் சொல்வதில்லை. தமிழ்நாட்டு உறுப்பினர்கள் அவ்வாறு வாசகம் அடங்கிய உடையை அணிந்து வந்தால் மட்டும், அதை மாற்ற வேண்டுமென சபாநாயகர் அறிவுறுத்துகிறார். தொகுதி மறுவரையறைக்கு எதிரான வாசகம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து வரக் கூடாது என புதிய உத்தரவை மக்களவையில் சபாநாயகர் பிறப்பித்துள்ளார் என கூறினார்.