விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியை அடுத்திருக்கும் கடப்பேரிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சரண்ராஜ். இவர் தன்னுடைய நண்பர்களான குணசேகரன் மற்றும் செந்திலுடன் பிப்ரவரி 12-ம் தேதி புதுச்சேரி துத்திப்பட்டு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, நின்றிருந்த லாரியில் மோதினர். அதில் மூவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவரான செந்திலின் சகோதரர் முத்து, வில்லியனூர் போக்குவரத்துப் போலீஸாரிடம் எஃப்.ஐ.ஆர் கேட்டிருக்கிறார்.
அப்போது, ``ரூ.1 லட்சம் கொடுத்தால் எஃப்.ஐ.ஆர் தருகிறேன்” என்று போக்குவரத்து எஸ்.ஐ பாஸ்கரன் கேட்டிருக்கிறார். அதில் அதிர்ச்சியடைந்த முத்து, ``விபத்தில் என் தம்பி இறந்துவிட்டான். அந்த எஃப்.ஐ.ஆரைத்தானே நான் கேட்கிறேன். அதற்கு ஏன் நான் பணம் தர வேண்டும்” என்று கேட்க, ``பணம் கொடுத்தால் உனக்கு எஃப்.ஐ.ஆர். இல்லையென்றால் இடத்தை காலி பண்ணு” என்று கறார் காட்டியிருக்கிறார். அதை அப்படியே தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்த முத்து, டி.ஜி.பி ஷாலினியிடம் புகாரளித்திருக்கிறார். அதையடுத்து உடனே அவரை ஆயுதப்படைக்கு மாற்றிய டி.ஜி.பி ஷாலினி, தற்போது சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார்.