திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு மங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாம்சன். இவரது மனைவி மெர்சி பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் மெர்சி ஆர்.எஸ் மங்காபுரத்தில் இருக்கும் பெற்றோர் வீட்டில் குழந்தைகளை விடுவதற்காக சென்றுள்ளார். அங்கு குழந்தைகளை விட்டு இன்று காலை மோட்டார் சைக்கிளில் பட்டாபிராம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அவர் முருக்கம்பட்டு பகுதியில் சென்ற போது எதிரே வந்த லாரியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மெர்சியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக அவர் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே மெர்சி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.