கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அசோக் நகரில் பிரவீன்(20) என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் பெங்களூர் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். பிரவீன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கிருசத்தியன்(24), சூர்யா(21) ஆகிய இருவருடன் இணைந்து பிரவீனும் இடையார்பாளையம் சாலையில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது மது தீர்ந்து விட்டதால் மீண்டும் மது வாங்குவதற்கு யார் பணம் கொடுப்பது? என்பது தொடர்பாக நண்பர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த கிருசத்தியாவும், சூர்யாவும் சேர்ந்து பிரவீனை பலமாக தாக்கியுள்ளனர். மேலும் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றனர்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த பிரவீனை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்து போலீசார் பிரவீனிடம் விசாரணை நடத்தினர். பிரவீன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சூர்யா, கிருசத்தியன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.