பதில் கிடைக்கும் வரை போராடுவோம் - எம்.பி கனிமொழி ஆவேசம்.!
Seithipunal Tamil March 21, 2025 07:48 AM

நாடாளுமன்றத்தின் மக்களவையில் எதிர்க்கட்சிகள் 'தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்' என்ற வாசகம் அடங்கிய டி-சர்ட் அணிந்து அவைக்கு சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:-

"ஆளுங்கட்சியினர் தங்கள் கருத்துகள், நம்பிக்கைகள் அடங்கிய வாசகங்களை கொண்ட சால்வை, மாஸ்க்கை அவைக்கு அணிந்து வரும்போது, அதை யாரும் எதுவும் சொல்வதில்லை; அதுவே தமிழ்நாட்டு உறுப்பினர்கள் அவ்வாறு வாசகம் அடங்கிய உடையை அணிந்து வந்தால் மட்டும், அதை மாற்ற வேண்டுமென சபாநாயகர் அறிவுறுத்துகிறார்.

இதற்கு முன்பு எத்தனையோ உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு வாசகம் பொறித்த முகக் கவசங்களை அணிந்து வந்திருக்கிறார்கள். சபாநாயகரின் உத்தரவு ஜனநாயகத்துக்கு விரோதமான செயலாகவேவுள்ளது.

தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த கோரிக்கை வைத்து வருகிறோம்; ஆனால் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. உரிய பதில் கிடைக்கும் வரையில் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் போராடுவோம். எதிர்க்கட்சிகளே இல்லாமல் அவையை நடத்த வேண்டும் என்ற மனநிலையில் உள்ளனர்" என்றுத் தெரிவித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.