நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி மாணவிகளிடம், ஹோலி கொண்டாட்டத்தின் பேரில், +2 மாணவிகளை ஆபாசமாக கட்டிப்பிடித்து, அருவருக்க தக்க வகையில் அவர்கள் மீது ஹோலி பவுடர் பூசி பாலியல் தொல்லைக் கொடுத்த தலைமையாசிரியரைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் புட்டபர்த்தி நகரில் தனியாருக்கு சொந்தமான, பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் வெங்கடபதி. இந்த பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹோலி கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது மாணவிகள் ஹோலி கொண்டாட்டத்தில் சந்தோஷமாக ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் தலைமை ஆசிரியரான வெங்கடபதி ஹோலி என்ற பெயரில் மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொண்டார். இதனை அக்கம் பக்கத்து வீட்டிலுள்ள பெண்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து மாணவிகளின் பெற்றோருக்கு உடனடியாக அனுப்பி வைத்தனர்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று வெங்கடபதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெற்றோர்கள் வீடியோக்களுடன் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், அந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பள்ளி தலைமை ஆசிரியரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்குப்பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.