‘வங்கி ஏ.டி.எம் பரிவர்த்தனைகளுக்கான கட்டணம், வரும் மே 1-ம் தேதி முதல் உயர்த்தப்படும் என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிகளின் ஏ.டி.எம்-களில் 5 பரிவர்த்தனைகளும், பிற வங்கிகளின் ஏ.டி.எம்-களில் 3 பரிவர்த்தனைகளும் கட்டணமின்றி மேற் கொள்ளலாம். அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 2021-ல் ரூ.15 வசூலிக்கப்பட்டது. பின்னர், ரூ.17 என உயர்த்தப்பட்டது. தற்போது ரூ.19-ஆக உயர்த்தப்படவிருக்கிறது. ஜி.எஸ்.டி-யுடன் ரூ.21 வரை வசூலிக்கப்படலாம்.
‘அதிகரித்துவரும் செலவுகள் மற்றும் நவீனமயமாக்கல் தேவைகளை நிர்வகிக்கவும், ஏ.டி.எம் சேவைகளை மேம்படுத்தித் தொடர்ந்து வழங்கவும்தான் கட்டண உயர்வு’ என்கிறது இந்திய ரிசர்வ் வங்கி.
ஏ.டி.எம் சேவைகளுக்குக் கட்டணங்கள் விதிக்கப்பட்டபோது, ‘ஆன்லைன் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், ஆஃப்லைன் பரிவர்த்தனைகளைக் குறைக்கவும்தான்’ என்று கூறப்பட்டது. அதன்படியே ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகரித்துவிட்டது. ரொக்கப் பரிவர்த்தனையும் தொடர்ந்தாலும், பெரும்பாலும் முறைசாரா துறைகளிலும்... கிராமப்புற மக்கள், படிப்பறிவற்ற மக்கள், வயதானவர்கள் ரொக்கப் பரிவர்த்தனைகளில்தான் ஈடுபடுகின்றனர். ஏ.டி.எம்-மில் பணம் எடுத்தால் கட்டணம், பேலன்ஸ் பார்த்தாலும் கட்டணம் என்பது போன்ற விதிமுறைகளெல்லாம் இவர்களில் பலருக்கும் தெரியாது.
இவர்கள், மொத்தமாகப் பணம் எடுத்து வைத்துக்கொள்ளும் அளவுக்கு வசதியானவர்கள் இல்லை. நலத்திட்டம் எனும் பெயரில் அரசு நேரடியாக வங்கியில் வரவு வைக்கும் சொற்பத் தொகை, உழைத்துச் சேர்த்து வைத்திருக்கும் சில ஆயிரங்கள்... இவையெல்லாம்தான் இவர்களுடைய வங்கி இருப்பு. இதிலிருந்து அவ்வப்போது 100, 200 என்று ஏ.டி.எம் மூலமாக எடுப்பதைத்தான் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இதனாலேயே அதிக பரிவர்த்தனை காரணமாக, அபராதக் கட்டணம்; மினிமம் பேலன்ஸ் பாதிப்பதால், அபராதக் கட்டணம் என செலுத்துபவர்கள் அவர்களாகவே இருக்கிறார்கள். ஏ.டி.எம், எஸ்.எம்.எஸ் கட்டணங்கள் தனி.
கடந்த 5 ஆண்டுகளில் ஏ.டி.எம் சேவைகளுக்காக மட்டுமே 2,043 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா. அபராதக் கட்டணமாக கடந்த 5 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் 8,500 கோடி ரூபாய் வசூலித்திருக்கின்றன. சராசரியாக, ஆண்டுக்கு 2,000 கோடி ரூபாய். இதில் கணிசமான தொகை... முறைசாரா துறை, கிராமப்புற படிப்பறிவற்ற, ஏழை, எளிய மக்களுடைய பணமே.
ஒவ்வோர் ஆண்டும் பெருமுதலாளிகளின் பல லட்சம் கோடி ரூபாய் வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. அவ்வப்போது நடக்கும் முறைகேடுகளால் பல லட்சம் கோடி ரூபாய் பறிபோகின்றன. இவற்றையெல்லாம் சர்வசாதாரணமாகக் கடக்கும் அரசும் ரிசர்வ் வங்கியும்... சாமானிய மக்களிடம் இருந்து ஏ.டி.எம் பரிவர்த்தனை என்கிற பெயரில் பணம் பார்ப்பது, கொடுமையே!
- ஆசிரியர்