அட கொடுமையே... மாலைப் போட்டு.. ஒப்பாரி வைத்து... பெண் சடலத்தின் கழுத்திலிருந்து 5 சவரன் செயின் திருட்டு!
Dinamaalai March 21, 2025 11:48 AM

இப்படியெல்லாம் கூட நடக்குமா? என்று ஏரல் பகுதி மக்கள் வாய் பிளக்கிறார்கள். மாலைப் போட்டு, இறுதியஞ்சலி செலுத்தி, ஒப்பாரி வைத்து இளம்பெண்ணுக்கு அஞ்சலி செலுத்துவது போல சடலத்திற்கு அத்தனை மரியாதையும் செய்து, பெண் சடலத்தின் கழுத்தில் இருந்து 5 சவரன் தங்க செயினைத் திருடியவரைப் போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வண்டிக்கார தெருவைச் சேர்ந்தவர் முரசொலிமாறன் (42). இவர் பேட்மா நகரத்தில் உள்ள கல்குவாரியில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி மகேஸ்வரி (30) கடந்த 12-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். மறுநாள் மகேஸ்வரிக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன. அவரை அடக்கம் செய்யும்போது, கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலிச் செயினை கழற்றுவதற்கு பார்த்தபோது, அதனை காணவில்லை. இதனால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஏரல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், ஏரல் அருகே உள்ள கணபதி சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கொழுந்துவேல் (38) என்பவர் மகேஸ்வரி கழுத்தில் கிடந்த நகையை திருடியது தெரியவந்தது.

மகேஸ்வரியின் சடலத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் போது, அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை திருடியது தெரிய வந்தது. கொழுந்துவேலைக் கைது செய்து, அவரிடமிருந்த 5 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.