சிறந்த நண்பர்களான நிகோல் ஃபராஜ் மற்றும் டெலனே டோனி, கல்லூரியில் பட்டம் பெற்று தங்களுடைய முதல் ஃபிளாட்டில் குடியேறியபோது, மிக மோசமான உடல்நல பாதிப்பால் தங்களது வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும் என்று அவர்கள் சிறிதும் நினைத்துப் பார்க்கவில்லை.
இருபதுகளில் இருந்த அந்த இரண்டு பெண்களும் லாஸ் ஏஞ்சலிஸில் உள்ள தங்களது புதிய வீட்டில் குடியேறிய சில வாரங்களில் சுவாசப் பிரச்னைகள், உடல் நடுக்கம், கடும் தலைவலி, தூக்கமின்மை, சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டனர்.
ப்ரெய்ன் ஃபாக் (Brain fog) எனும் மூளை சோர்வடைவதன் தாக்கத்தைப் பற்றி பிபிசியிடம் தெரிவித்த டெலனே "நான் மயக்க மருந்தின் ஆதிக்கத்தில் இருந்ததைப் போல் உணர்ந்தேன்" எனத் தெரிவித்தார்.
"நான்கு நாட்களில் எனக்கு சுமார் இரண்டு மணிநேரம் தூக்கம் கிடைக்கும். அது என்னை மிகவும் பலவீனப்படுத்தியது" என்கிறார்.
முதலில் தங்களுக்கு ஏற்பட்ட அறிகுறிகளுக்கு மன அழுத்தமே காரணம் என்று அவர்கள் நினைத்தனர். சிறிது சிறிதாகத் தாங்கள் நஞ்சை உட்கொண்டு வருவதை அந்தப் பெண்கள் அறியவில்லை. ஆனால், அவர்களுக்கே தெரியாமல் அவர்களது பிளாட்டின் தரைப் பகுதிக்குக் கீழேயும் சுவர்களுக்கு உள்ளேயும் பூஞ்சை வளர்ந்துகொண்டிருந்தது.
'பூஞ்சை மிகவும் அபயாகரமானதாக மாறலாம்'"பூஞ்சையை நுகர்வது நமது நுரையீரலுக்கு மிகவும் தீங்கானதாக இருக்கக்கூடும்" என 'ஆஸ்துமா அண்ட் லங் யுகே' என்ற தன்னார்வ நிறுவனத்தின் தலைமை மருத்துவர் ஆண்டி விட்டாமோர் பிபிசியிடம் தெரிவித்தார். "அது சுவாச நோய்தொற்று, ஒவ்வாமை அல்லது ஆஸ்துமாவை உண்டாக்கலாம்."
பூஞ்சை பொதுவாக அதிக வெளிச்சமும் காற்றும் இல்லாத கூரைகள், சுவர்கள், தரைப் பலகைகளுக்கு அடியில் செழித்து வளர்கின்றன.
உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி சில பூஞ்சைகளால் உருவாக்கப்படும் நச்சுகள், தீவிர நஞ்சாக்கல், ஆஸ்துமா உள்ளிட்ட நீண்ட கால ஆரோக்கியப் பிரச்னைகளையும் சிலருக்கு புற்றுநோயையும்கூட ஏற்படுத்தலாம்.
ஒரு வீட்டில் கவனிக்கப்படாமல் இருந்தால் பூஞ்சை மிகவும் அபயாகரமானதாக மாறலாம். "ஆஸ்துமா இன்னமும் மக்களைப் பலி கொள்கிறது. ஈரப்பதம் மற்றும் பூஞ்சை சூழ யாரேனும் வாழ்ந்து வந்தால், உயிருக்கு அபாயம் விளைவிக்கும் ஆஸ்துமாவால் அவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்," என்றார் விட்டாமோர்.
தனது படுக்கை அறையின் மையப் பகுதியில் சில தண்ணீர்த் துளிகளை நிகோல் கவனித்த பிறகுதான், இருவரும் ஆய்வு செய்து தங்களது பிளாட் முழுவதும் பூஞ்சை வளர்வதைக் கண்டுபிடித்தனர்.
"அந்த வித்துகள் கண்ணுக்குத் தெரியாதவையாக இருந்து, பிளாட் முழுவதும் பயணித்து எங்கள் ஆரோக்கியத்தைப் பாதித்துக் கொண்டிருந்தன," என்கிறார் நிகோல்.
பூஞ்சை என்பது ஈரமான மற்றும் ஈரப்பதமான சூழல்களில் வளரும் நுண்ணுயிர். அது கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் காற்றில் காணப்படும் நுண்ணுயிர் வித்துகள் மூலம் பரவுகிறது.
சுவர்களில் பஞ்சு போன்ற கருப்பு, வெள்ளை அல்லது பச்சை நிறத் திட்டுகள் இருப்பது, முடை நாற்றம் உள்ளிட்டவை ஒரு கட்டடத்தின் உள்ளே பூஞ்சை வளர்வதன் அடையாளம்.
'கிளினிகல் மற்றும் எக்ஸ்பிரிமெண்டல் அலர்ஜி' என்ற ஆய்விதழில் 2013இல் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி ஈரமான பகுதிகள் அல்லது வீட்டுக்குள் வளரும் பூஞ்சை, வீடுகளில் 47% வரை இருக்கின்றன. ஐரோப்பாவில் இது 21% வீடுகளையும், அமெரிக்காவில் 47% வீடுகளையும் பாதிக்கிறது.
வெப்பமண்டலப் பகுதிகளில் இருக்கும் நாடுகளில் மிகக் குறைவான ஆய்வுகளே நடத்தப்பட்டிருந்தாலும், அண்மையில் தென் இந்தியாவின் 710 வீடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று வீடுகளில் ஈரப்பதம் இருந்ததாகத் தெரிவித்துள்ளது. அதே நேரம் வடக்கு தாய்லாந்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் 28.2% வீடுகளில் தண்ணீர் கசிவு இருந்ததும் தெரிய வந்துள்ளது.
மருத்துவர் ஜில் கிறிஸ்டாவின் கூற்றுப்படி, மக்கள் அவர்கள் அறியாமலேயே வீட்டில் பூஞ்சையின் தாக்கத்திற்கு உள்ளாகலாம் என்பதுதான் மிகப்பெரிய அபாயம்.
"தங்கள் உடலில் நஞ்சு ஏறுவதைக்கூட பலரும் தெரிந்திருக்க மாட்டார்கள்," என்கிறார் 'பிரேக் தி மோல்ட்' என்ற அமெரிக்க புத்தகத்தின் எழுத்தாளரான அவர். பூஞ்சை பெருமளவு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு இருப்பதாகவும், இந்தப் பிரச்னை அடையாளம் காணப்படாமல் இருப்பதாகவும் அவர் கருதுகிறார்.
பூஞ்சை பெரும்பாலும் பார்வையில் படாத சுவர்களின் பின்புறம், தரைக்கு அடியில் அல்லது சாமான்களுக்குப் பின்புறம் போன்ற பகுதிகளில் வளரும். அதன் தாக்கம் பல மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்குக்கூட கவனிக்கப்படாமல் இருக்கலாம்.
நிகோல், டெலனே இருவரின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள கிட்டத்தட்ட ஓர் ஆண்டு ஆனது.
"வேலையில் இருந்தபோது ஒரு தொலைபேசி அழைப்பில் பேசியது எனக்கு நினைவு இருக்கிறது," என்கிறார் நிகோல். "யாரோ என்னிடம் ஒரு எண்ணை எழுதுவதற்காகச் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் நான் கேட்பது என்ன என்பதையும் எதை எழுதுகிறேன் என்பதையும் என்னால் ஒருங்கிணைத்துப் பார்க்க முடியவில்லை."
அப்போதுதான் ஏதோ சரியில்லை என்பதை அவர் உணர்ந்தார். "அது மிகவும் அச்சமூட்டுவதாக இருந்தது. இறுதியில் நான் என் வேலையை விட வேண்டியிருந்தது," என்கிறார் நிகோல்.
நிகோலும் டெலனேவும் பல மருத்துவர்களைப் பார்த்தனர். ஆனால் யாராலும் அவர்களது பிரச்னையைச் சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. "(ஒரு மருத்துவமனையின்) அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்றபோது, நான் நலமாக இருப்பதாக மருத்துவர் கூறியது எனக்கு நினைவிருக்கிறது," என்கிறார் நிகோல்.
"அது எங்கள் மீது எங்களுக்கு இருந்த நம்பிக்கையை தகர்த்தது. அது உண்மைதானா என்று கேள்வி எழுப்பத் தொடங்கினோம்."
குறிப்பாக பூஞ்சையின் நஞ்சை அடையாளம் காண்பது கடினமாக இருக்க காரணம், அதன் அறிகுறிகள் பல சாதாரண பிரச்னைகளான ஃப்ளூ மற்றும் ஒவ்வாமையை ஒத்திருப்பதுதான்.
அது உங்கள் ஆரோக்கியத்தின் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது, பூஞ்சை தொடர்பான நோய்களுக்கு எப்படி சிகிச்சையளிப்பது என்பது குறித்து ஆய்வாளர்கள் இப்போதுதான் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர்.
கடந்த 2024இல் ஆஸ்துமா அண்ட் லங் யுகே என்ற தன்னார்வ அமைப்பு நுரையீரல் பாதிப்பால் அவதிப்படும் 3,652 பேரிடம் ஆய்வு நடத்தியதில், சிறார்களில் கால்வாசிப் பேரும், வயது வந்தவர்களில் கிட்டதட்ட பாதிப் பேரும் ஈரப்பதமும், பூஞ்சையுமே தங்களது ஆஸ்துமா அறிகுறிகளை தூண்டியதாகத் தெரிவித்தனர்.
குறிப்பாக குழந்தைகளுக்கு அபாயம் அதிகமாக இருப்பதாக எச்சரிக்கிறார் மருத்துவர் விட்டாமோர்.
"குழந்தைகளின் நுரையீரல்க இன்னமும் வளர்ச்சியடைந்து கொண்டிருப்பதால் அவர்கள் பூஞ்சை போன்ற தூண்டல்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. அவர்கள் வேகமாக சுவாசிக்கிறார்கள், எனவே வயதுக்கு வந்தவர்களைவிட அதிக அளவு வித்துகளை அவர்கள் நுகரும் வாய்ப்பு அதிகம்," என்றார் அவர்.
பிரிட்டனில் கட்டுமானங்களில் பூஞ்சைகளை அகற்றுவது மற்றும் தடுப்பதில் தனித்துவம் பெற்ற நிறுவனமான ஏர்ஃபிரெஷில் இயக்குநராக இருப்பவர் டாம் கால்கன். பூஞ்சையைக் குறைக்க மக்கள் செய்யக்கூடிய சில சாதாரண விஷயங்கள் உள்ளன.
இவை போக, தங்கள் இடத்தில் பூஞ்சை இருப்பதைப் பார்த்தவுடன் மக்கள் பெரும்பாலும் உடனடியாக அதன் மீது ரசாயனங்கள் தெளிப்பதாக கால்கன் கூறுகிறார். இது பிரச்னையை மேலும் மோசமடையச் செய்யலாம் என்பதால் அதைச் செய்ய வேண்டாம் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
"அதைச் செய்யும்போதுதான் பூஞ்சையின் உயிர் பிழைத்திருக்கும் உள்ளுணர்வு செயல்படுகிறது. அது வித்துகளைப் பரப்பி, பிழைத்திருப்பதற்குப் புதிய பகுதிகளில் பரவுகிறது," என்கிறார் அவர்.
அதிக காற்று வசதியில்லாத பகுதிகளில் ஈரத் துணிகளைக் காய வைப்பது பூஞ்சை வளர்ச்சிக்கு வித்திடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
காலநிலை மாற்றம் மழைப் பொழிவு மற்றும் ஈரப்பதத்தை அதிகரிக்கக் கூடும் என்பதால், அதனுடன் தொடர்புடைய தண்ணீரால் வீடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் பூஞ்சை நோய்கள் அதிகரிக்கக் காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பூஞ்சை என்பது வீடுகளில் தவிர்க்கக்கூடிய பிரச்னை. ஆனால் மோசமாகக் கட்டப்பட்ட கட்டடங்களில் வசித்துக்கொண்டு, பூஞ்சை பாதிப்புகளைச் சரிசெய்வதற்குப் போதிய பணமின்றி இருப்பவர்களுக்கு அபாயம் அதிகம்.
நிகோல் மற்றும் டெலனே குணமடைய ஆறு ஆண்டுகள் ஆனது. "பூஞ்சையின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததால், மிக அதிக பாதிப்பு ஏற்படுத்தியிருந்தது," என்கிறார் நிகோல்.
நீண்ட காலம் அதன் தாக்கத்திற்கு உள்ளானதால் அவரது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்து மற்ற ஆரோக்கியப் பிரச்னைகள் ஏற்பட காரணமாக அமைந்துவிட்டதாக மருத்துவர்கள் அவரிடம் தெரிவித்தனர்.
அவர்களுடைய நண்பர்கள் வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டும், வெளியே சென்று மகிழ்ந்து கொண்டிருந்தபோது, இந்த இணைக்கு சராசரியாகச் செயல்படுவதற்குத் தேவையான ஆற்றலே குறைவாகத்தான் இருந்தது என்கிறார் அவர்.
"நாங்கள் எங்கள் இருபதுகளை இழந்ததை நினைத்து துக்கம் கொள்ள நேரிட்டது. நாங்கள் மோசமாக நோய்வாய்ப்பட்டு இருந்ததால் அந்த ஆண்டுகள் எங்களிடம் இருந்து பறிக்கப்பட்டன," என்கிறார் டெலனே.
"ஒருவர் மற்றொருவருக்காக இருந்ததுதான் எங்களைத் தொடர்ந்து இயங்கச் செய்தது," எனக் கூறுகிறார் நிகோல்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு