‘கடுமையான விதிமுறைகள், சட்டதிட்டங்கள், வலுவான கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள்’ என இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான ‘செபி’ பற்றி பெருமையாகச் சொல்வார்கள். ‘செபியை மீறி எந்த ஒரு தவறும் நடக்கவே நடக்காது... முதலீட்டாளர்கள் நூறு சதவிகிதம் பாதுகாப்பாக இருப்பார்கள்’ என்றெல்லாம் பெருமையோடு சொல்வார்கள். ஆனால், பங்குச் சந்தையை மையம் கொண்டு அடிக்கடி நடக்கும் அசாதாரண நிகழ்வுகளைப் பார்க்கும்போது ‘செபி’ மீதான நம்பகத்தன்மையே கேள்விக்குறியாகி வருகிறது.
கௌதம் அதானி, சந்தை முறைகேடு வழக்கிலிருந்து விடுவிக்கப்படும் தீர்ப்பு கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகியுள்ளது. ‘சந்தையில் முறைகேடான வர்த்தகம் மூலம் ரூ.380 கோடி வருவாய் ஈட்டினார்கள்’ என்று கௌதம் அதானி மீதும், நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் அதானி மீதும் 2012-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது, தீவிர மோசடிகளை விசாரிக்கும் அமைப்பான எஸ்.எஃப்.ஓ.ஐ. 12 ஆண்டுகளாக வழக்கு இழுபட்ட நிலையில், தற்போது இருவருமே விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2017-ல் பங்குச் சந்தையை உலுக்கிய, என்.எஸ்.இ கோ-லொகேஷன் முறை கேட்டில், தேசிய பங்குச் சந்தையான என்.எஸ்.இ அமைப்பின் செயல் அதிகாரி யான சித்ரா ராமகிருஷ்ணன், ரவி நரேன் மீது பதியப்பட்ட வழக்குகளை, கடந்த 2024 செப்டம்பரில் என்.எஸ்.இ தரப்பிடமிருந்து ரூ.643 கோடி செட்டில்மென்ட் தொகையாக வாங்கிக்கொண்டு அப்படியே தள்ளுபடி செய்துவிட்டது ‘செபி.’ கடந்த ஆண்டில், அதானி மீது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் முன்வைத்த குற்றச்சாட்டுகளிலும் இதே நிலைதான். இந்த விவகாரத்தை விசாரிக்கும் பொறுப்பை ‘செபி’யிடமே கொடுத்தது நீதிமன்றம். காலதாமதம் செய்துகொண்டே இருந்த ‘செபி’, ‘எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை’ எனக் கிட்டத்தட்ட ஃபைலையே மூடிவிட்டது.
‘செபி’ அமைப்பின் முன்னாள் தலைவர் மாதபி பூரி புச் மீதான ஊழல், சந்தை முறைகேடு புகார்கள் தொடர்பான வழக்கும் உறுதியாக விசாரிக்கப்படவே இல்லை. என்ன உண்மை என்பதும் இன்றுவரையிலும் வெளிவரவில்லை. சந்தை முறைகேடுகள் தொடர்பாக வெடிக்கும் விவகாரங்கள், ஆரம்பத்தில் நாட்டையே உலுக்கும் தலைப்புச் செய்திகளாக வெளிவருகின்றன. நாளடைவில் பெட்டிச் செய்திகளாக நீர்த்துப் போய்விடுகின்றன. எந்த ஒரு பிரச்னையிலும் சரியான நேரத்தில், சரியான நோக்கில் விசாரணை நடத்தி, உடனடித் தீர்வு காணப்படுவ தில்லை. அதனாலேயே உண்மைகளும் மொத்தமாகப் புதைக்கப்பட்டுவிடுகின்றன.
‘செபி’ போன்ற அமைப்புகளின் மீதான நம்பிக்கையில்தான் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள், கோடிக்கணக்கான ரூபாய்களை முதலீடு செய்கிறார்கள். ஆனால், அதிகார பலம், பண பலம், அரசியல் பலம் கொண்டவர் கள் தொடர்ந்து முறைகேடுகள் செய்வதாக புகார்கள் வெடிப்பதும், விசாரணை முறையாக நடக்காமலிருப்பதும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் எளிதில் தப்பி விடுவதும் தொடர்கதையாகவே இருப்பது... தொடர் நஷ்டத்தைச் சந்திக்கும் அப்பாவி முதலீட்டாளர்களை யோசிக்கவே வைக்கும். ஒரு கட்டத்தில் ஒருவருமே இருக்க மாட்டார்கள்-நஷ்டமடைவதற்கு!