சேப்பாக்கத்தில் சிஎஸ்கே-வுக்கு எதிராக தொடரும் ஆர்சிபி-யின் 16 ஆண்டுகால தோல்வி முடிவுக்கு வருமா?
BBC Tamil March 28, 2025 01:48 PM
Getty Images

சென்னை சேப்பாக்கத்தில் 16 ஆண்டுகள் தலைநிமர முடியாத அளவுக்கு தோல்விகள், 17 ஆண்டுகள் கோப்பையை வெல்ல முடியாத தவிப்பு ஆகியவற்றோடு இன்று(மார்ச் 28) சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியுடன் மோதுகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

ஆர்சிபி-சிஎஸ்கே இடையிலான பரம்பரைப் போட்டியாகப் பார்க்கப்பட்டாலும், மிகப்பெரிய ஆளுமைகளான எம்.எஸ்.தோனி, விராட் கோலி இடையிலான போட்டியாகவே கடந்த காலங்களில் இருந்துள்ளது.

இரு கிரிக்கெட் ஜாம்பவான்களும் ஒருவருக்கொருவர் தங்களின் அணிக்காக, வெற்றிக்காக வியூகங்களை வகுத்துப் போராடுவதுதான் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கிறது. ஆர்சிபி-சிஎஸ்கே போட்டியாகப் பார்க்கப்படுவதைவிட கோலி-தோனி இடையிலான ஆட்டமாகவே இதை ரசிகர்கள் பார்க்கிறார்கள்.

16 ஆண்டுகள் தலைகுனிவு Getty Images

சென்னையில் 2008, மே 20ஆம் தேதி கடைசியாகவும், முதல்முறையாகவும் சிஎஸ்கே அணியை 14 ரன்களில் ஆர்சிபி அணி வென்றது. அதன் பிறகு கடந்த 16 ஆண்டுகளாக 8 முறையும் சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியை ஆர்சிபியால் அசைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

இந்த முறை ஆர்சிபி அணி பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங்கில் நல்ல ஃபார்மில் இருப்பதால், நிச்சயமாக சேப்பாக்கம் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கலாம்.

அதிலும் 2011ஆம் ஆண்டு பைனலில் சிஎஸ்கேவிடம் அடைந்த தோல்வி ஆர்சிபிக்கு மறக்க முடியாத ரணமாக இருந்தது. அதனால்தான் கடந்த சீசனில் முக்கியமான கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை வென்று ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றவுடன் கோப்பையை வென்றதைப் போன்ற கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியது. எல்கிளாசிகோ எனப்படும் சிஎஸ்கே-மும்பை இந்தியன்ஸ் ஆட்டத்துக்கு சற்றும் குறைவில்லாத பரம்பரைப் போட்டியை ஆர்சிபி-சிஎஸ்கே ஆட்டம் வெளிப்படுத்தும்.

இதுவரை ஆர்சிபி – சிஎஸ்கே மோதல்

ஆர்சிபி, சிஎஸ்கே அணிகள் இதுவரை 33 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் சிஎஸ்கே அணி 21 முறை வென்றுள்ளது, ஆர்சிபி 11 முறை வெற்றி பெற்றுள்ளது. கடந்த கால வரலாற்றில் சிஎஸ்கே அணியின் ஆதிக்கமே பரந்து கிடக்கிறது.

கடந்த சீசனை எடுத்துக்கொண்டால் ஆர்சிபி தொடக்கத்தில் தோல்விகளைச் சந்தித்தாலும் பிற்பகுதியில் அடுத்தடுத்து தொடர் வெற்றிகளைப் பெற்றது. 14 போட்டிகலில் 7 வெற்றிகள், 8 தோல்விகளுடன் 46% வெற்றி சதவீதத்தைப் பெற்றது. அதேநேரத்தில் சிஎஸ்கே அணி 14 போட்டிகளில் 7 வெற்றி, 7 தோல்விகளுடன் 50 சதவீத வெற்றிகளைப் பெற்றது. ஏறக்குறைய சிஎஸ்கேவுக்கு இணையாக எந்தவிதத்திலும் குறைவில்லாத ஃபார்மில்தான் ஆர்சிபி இருக்கிறது.

ஆர்சிபி, சிஎஸ்கே அணியில் வலுவான பேட்டர்கள், துல்லியமான நெருக்கடி கொடுக்கும் வேகப்பந்துவீச்சாளர்கள், சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தாலும், சிஎஸ்கேவில் எம்எஸ் தோனியின் வியூகம் கடைசி நேரத்தில் பிரமாஸ்திரமாக மாறிவிடுகிறது. அங்குதான் ஆர்சிபியின் பலவீனப் புள்ளி வெளிப்படுகிறது.

அஸ்வின் வருகை பலமாக அமையுமா? Getty Images

கடந்த 2024 ஐபிஎல் ஏலத்துக்குப் பின் இரு அணிகளிலும் பல வீரர்கள் மாறியுள்ளனர். குறிப்பாக சிஎஸ்கே அணியில் அஸ்வின் 12 ஆண்டுகளுக்குப் பின் இணைந்துள்ளது சுழற்பந்துவீச்சைப் பலப்படுத்துகிறது. ஏற்கெனவே ஜடேஜா இருக்கும் நிலையில் அஸ்வின், ஆப்கன் வீரர் நூர் அகமது ஆகியோரின் மும்முனைத் தாக்குதல் சிஎஸ்கே அணிக்குப் பெரிய பலமாக இருக்கும்.

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் நூர் முகமது 4 விக்கெட்டுகளை வீழ்த்தித் தனது பந்துவீச்சின் தரத்தை நிரூபித்துள்ளார். இந்த ஆட்டத்தில் 11 ஓவர்களை சுழற்பந்துவீச்சாளர்கள் வீசி 70 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதில் ரச்சின் ரவீந்திராவுக்கு ஓவர் வழங்கப்படவில்லை. அவரும் இணையும் பட்சத்தில் சுழற்பந்துவீச்சு வலுவாக இருக்கும்.

ஆர்சிபி அணியில் குர்னல் பாண்டியா, லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தல் என வலிமையான சுழற்பந்துவீச்சாளர்களும் உள்ளனர். இதில் கொல்கத்தா அணிக்கு எதிராக குர்னல் பாண்டியா அருமையான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். சுழற்பந்துவீச்சோடு ஒப்பிடுகையில் ஆர்சிபியைவிட சிஎஸ்கே வலுவாக இருக்கிறது.

கடந்த சீசனில் சேப்பாக்கம் ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாக அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த சீசனில் சிஎஸ்கே அணியில் சுழற்பந்துவீச்சாளர்கள் அதிகம் இருப்பதால் சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றார்போல் ஆடுகளத்தை அமைக்கும் எனத் தெரிகிறது.

கோலியின் எச்சரிக்கை SPORTZPICS

பேட்டிங்கை பொருத்தவரை இரு அணிகளுமே சம வலிமையில் இருக்கிறார்கள். ஆர்சிபி அணியில் விராட் கோலி, பில் சால்ட், ரஜத் பட்டிதார், லியாம் லிவிங்டன், டிம் டேவிட், தேவ்தத் படிக்கல், குர்னல் பாண்டியா, ஜிதேஷ் ஷர்மா எனப் பட்டியல் நீள்கிறது.

அதேபோல கெய்க்வாட், திராபாதி, ரவீந்திரா, கான்வே, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சாம்கரன், அஸ்வின், தோனி என 9வது வரிசை வரை ஓரளவு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள் இருப்பது அந்த அணிக்குப் பெரிய பலம். இரு அணிகளுமே தங்களின் பேட்டர்களை எவ்வாறு பயன்படுத்தப் போகிறார்கள் என்பதில்தான் வெற்றியின் தாத்பரியம் இருக்கிறது.

விராட் கோலி சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சுமாராகவே ஆடுவார், அச்சப்படுவார் என்ற வாதங்கள் முன்பு வைக்கப்பட்டன. ஆனால், சாம்பியன்ஷிப் போட்டித் தொடரைப் பார்த்த பிறகு விராட் கோலியின் சுழற்பந்துவீச்சுக்கு எதிரான ஆட்டம் நன்றாக இருக்கிறது. குறிப்பாக கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சை கோலி எதிர்கொண்ட விதம், ஆடிய ஸ்வீப் ஷாட்கள், ஸ்வீப்பில் அடித்த சிக்சர் "கிளாசிக் கோலியை" நினைவூட்டியது.

ஆதலால் இன்றைய ஆட்டத்தில் கோலியின் ஆட்டம், சிஎஸ்கே சுழற்பந்து வீச்சாளர்களுக்குப் பெரிய சவாலாக இருக்கும்.

சிஎஸ்கேவுக்கு தலைவலியாகும் சால்ட், பட்டிதார்

ஆர்சிபியின் தொடக்க வீரர் பில் சால்ட், கேப்டன் பட்டிதார் ஆட்டம் சிஎஸ்கே அணிக்குப் பெரிய தலைவலியாக இருக்கும். இருவரையும் நிலைத்து ஆடவிட்டால், சிஎஸ்கே பந்துவீச்சுக்குப் பலத்த பதிலடி கிடைக்கலாம். களத்தில் நின்றுகொண்டே சிக்சர் அடிப்பதில் பட்டிதார் வல்லவர்.

அதிரடியான தொடக்கத்தை பில் சால்ட் வழங்குவதில் உலகளவில் ஐசிசி தரவரிசையில் 2வது இடத்தில் இருக்கிறார். இரு வலிமையான பேட்டர்கள், கோலி என டாப் ஆர்டரை சமாளிப்பது சிஎஸ்கேவுக்கு மலையைப் புரட்டுவது போல் இருக்கும். இவர்களோடு லிவிங்ஸ்டன், ஜிதேஷ் ஷர்மாவின் ஆட்டமும் சேர்ந்துவிட்டால் ஸ்கோர் உச்சத்துக்குச் சென்றுவிடும்.

புவி, பெத்தல், பதிராணா வருகை

சேப்பாக்கம் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான மைதானம் என்பதால், டிம் டேவிட்டுக்கு பதிலாக ஜேக்கப் பெத்தலை ஆர்சிபி களமிறக்கலாம். இடதுகை சுழற்பந்துவீச்சாளரான பெத்தல், பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்படக் கூடியவர்.

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் உடற்தகுதியின்மை காரணமாக, வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் பங்கேற்கவில்லை. ஒருவேளை உடற்தகுதி பெற்றால் ராசிக் சலாமுக்கு பதிலாக புவனேஷ் களமிறங்கினால் பந்துவீச்சு பலப்படும்.

சிஎஸ்கே அணியைப் பொருத்தவரை மும்பை அணிக்கு எதிராக நடுவரிசை படுத்துவிட்டது. ஷிவம் துபே, சாம் கரன், தீபக் ஹூடா ஆகியோர் சொதப்பிவிட்டனர். ரச்சின் ரவீநதிரா மட்டும் நிலைத்து ஆடாவிட்டால், ஆட்டம் வேறு மாதிரி திரும்பியிருக்கும். ரச்சின் ரவீந்திரா, கெய்க்வாட் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள்.

மதிஷா பதிராணா உடற்தகுதி காரணமாக முதல் ஆட்டத்தில் பங்கேற்கவில்லை, ஒருவேளை உடற்தகுதி பெற்றால் நேதன் எல்லீஸுக்கு பதிலாக பதிராணா களமிறங்குவார்.

சிஎஸ்கேவை வெல்ல என்ன செய்ய வேண்டும்?

ஆர்சிபி-சிஎஸ்கே இடையிலான ஆட்டங்கள் குறித்து ஆர்சிபி அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளரும், இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கர் பிபிசி தமிழ் கேட்ட கேள்விகளுக்கு ஜியோ ஹாட்ஸ்டாரில் பதிலளித்தார்.

அப்போது, அவரிடம் சிஎஸ்கேவை வெல்ல ஆர்சிபி என்ன செய்ய வேண்டும் என்று கேட்டபோது, "ஆர்சிபி அணி கடந்த 4 சீசன்களாகவே நிலைத்தன்மையுடன் ஆடி வருகிறது. சிஎஸ்கேவுக்கு எதிரான பல போட்டிகள் மிகவும் நெருக்கடியாகச் சென்றுதான் ஆர்சிபி தோற்றுள்ளது. ஆதலால் சிஎஸ்கே-ஆர்சிபி இடையிலான இடைவெளி குறைந்து விட்டதாகவே பார்க்கிறேன், மற்ற சீசனைவிட இந்த சீசனில் ஆர்சிபி பேட்டிங் வலுவாக இருப்பதால் ஆர்சிபிக்கு வாய்ப்புள்ளது," என்று அவர் விளக்கினார்.

ஆர்சிபி-சிஎஸ்கே இடையிலான மோதலின் முக்கியத்துவம் குறித்து சஞ்சய் பங்கர் கூறுகையில், "சிஎஸ்கே அணியில் தோனி, ஆர்சிபியில் விராட் கோலி ஆகிய இரு ஆளுமைகள் இருக்கும்போது போட்டி இயல்பாகவே சுவாரஸ்யமாகவே இருக்கும். இருவரையும் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். இரு அணிகளுக்குமே ரசிகர்கள் அதிகம். இரு ஆளுமைகள் ஒருவருக்கொருவர் தோற்கடிக்க அணி வீரர்களுடன் முயலும்போது ஆட்டத்தில் முக்கியத்துவம் அதிகரிக்கிறது," எனத் தெரிவித்தார்.

முதல் ஆட்டத்தில் விராட் கோலி சுழற்பந்துவீச்சாளர்களைக் கையாண்ட விதத்தைப் பார்த்த பிறகு சேப்பாக்கத்தில் சிஎஸ்கே எப்படிக் கையாளும் என்ற கேள்விக்கு சஞ்சய் பங்கர் கூறுகையில், "ஆர்சிபி அணியில் நல்ல தொடக்கம் கிடைத்தால் அதிரடியாக மற்றொரு தொடக்கவீரர் ஆடினால், கோலி நிதானமாக ஆட வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்து கோலி எதிர்வினையாற்றுவார். அணியின் சூழலுக்கு ஏற்ப கோலியின் ஆட்டம் மாறுவது சிறப்பானது," எனத் தெரிவித்தார்.

Getty Images கோப்புப் படம்

இந்த சீசனில் ஆர்சிபி அணியின நிலை குறித்து சஞ்சய் பங்கர் கூறுகையில், "கடந்த நான்கைந்து சீசன்களைவிட ஆர்சிபி அணியில் இந்திய வீரர்கள் அதிகம் இருக்கிறார்கள். படிக்கல், கோலி, புவனேஷ்வர் குமார், குர்னல் பாண்டியா, ஜிதேஷ் ஷர்மா ஆகியோர் இந்திய அணியில் விளையாடியவர்கள். யஷ் தயால் மட்டும் அன்கேப்டு வீரர்.

ஆறு இந்திய அணி வீரர்கள் இருப்பதே ஆர்சிபிக்கு பெரிய பலம். வேகப்பந்துவீச்சில் ஹேசல்வுட், புவி இருப்பது வலிமை, சுழற்பந்துவீச்சின் தன்மை போட்டிகள் செல்லும் போது தெரியவரும். ஆதலால் இந்த முறை ஆர்சிபியின் ஃபார்மை பார்த்தால் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது," எனத் தெரிவித்தார்.

ஆர்சிபி வீரர்கள் விவரம்

விராட் கோலி, ரஜத் பட்டிதார், யஷ் தயால், ஜோஷ் ஹேசல்வுட், பில் சால்ட், ஜிதேஷ் ஷர்மா, புவனேஷ்வர் குமார், லியாம் லிவிங்ஸ்டோன், ராசிக் தார், குர்னல் பாண்டியா, சூயஷ் ஷர்மா, ஜேக்கப் பெத்தல், ரோமாரியோ ஷெப்பார்ட், டிம் டேவிட், தேவ்தத் படிக்கல், நுவான் துஷாரா, இங்கிடி, ஸ்வப்னில் சிங், மனோஜ் பந்தகே, ஸ்வஸ்திக் சிகாரா, அபிநந்தன் சிங், மோகித் ரதே

சிஎஸ்கே அணி விவரம்

ருதுராஜ் கெய்க்வாட்(கேப்டன்), மகேந்திர சிங் தோனி, மதீஷா பதிரணா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, டேவன் கான்வே, ராகுல் திரிபாதி, ரச்சின் ரவீந்திரா, ரவிச்சந்திரன் அஸ்வின், கலீல் அகமது, நூர் அகமது, விஜய் சங்கர், சாம் கரன், ஷேக் ரசீத், அன்சுல் கம்போஜ், முகேஷ் சௌத்ரி, தீபக் ஹூடா, குர்ஜப்நீத் சிங், நேதன் எல்லீஸ், ஜேமி ஓவர்டன், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ணா கோஷ், ஸ்ரேயாஸ் கோபால், வன்ஷ் பேடி, அந்த்ரே சித்தார்த்.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.