இந்தியாவின் பல பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளது. இதனையடுத்து வெப்பத்தினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர்களையே கோடை வெயில் படாதபாடு படுத்திவிடும். நோயாளிகள், எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், நீர்ச்சத்து குறைவாக இருப்பவர்களை குறித்து பேசவே தேவையில்லை.
கோடை வெயிலில் சிறிது நேரம் நின்றாலே அவர்கள் கிறங்கிவிடுவார்கள். கோடை காலங்களில் ஹீட் ஸ்ட்ரோக் என்ற பாதிப்பு சில சமயங்களில் உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்திவிடுகிறது. ஹீட் ஸ்ட்ரோக் என்பது தமிழில் வெப்ப பக்கவாதம் என அழைக்கப்படுகிறது. மனித உடலின் சராசரி வெப்பம் 98.6 டிகிரி பாரன்ஹீட் ஆக உள்ளது. வெப்ப பக்கவாதம் என்பது உடல் வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட் அல்லது அதற்கு மேல் உயரும் போது ஏற்படும் ஒரு அவசர மருத்துவ நிலையாக பார்க்கப்படுகிறது. பொதுவாக உடல் அதிக வெப்பம் அடையும்போது வியர்வை ஏற்பட்டு, உடல் வெப்பம் சமநிலைக்கு கொண்டு வரப்படுகிறது. உடல், இதனை செய்ய தவறும் போது வெப்ப பக்கவாதம் ஏற்படுகிறது.
பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள், குழந்தைகள், இதய செயலிழப்பு நோயாளிகள், கல்லீரல் செயலிழப்பு நோயாளிகள், உடல் எடை அதிகம் உடையவர்கள், வெயிலில் அதிக நேரம் கட்டாயம் உழைக்க வேண்டியவர்களுக்கு (உதாரணம்: விவசாயிகள், போக்குவரத்து போலீசார்) அதிகம் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம். இதன் முக்கியமான அறிகுறி உடல் வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட் அல்லது அதற்கு மேல் இருத்தல். மேலும் தலைவலி, குமட்டல், வாந்தி, தசை பிடிப்பு, இதயத்துடிப்பு அதிகரித்தல், ரத்த அழுத்தம் குறைதல், சிறுநீரக செயலிழப்பு, வலிப்பு, கோமா(ஆழ் மயக்கம்) போன்ற அறிகுறிகளை இது ஏற்படுத்தலாம்.
இதை தடுப்பதற்கு
1. வெப்பம் சுட்டெரிக்கும் போது வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
அவசியம் செல்ல வேண்டிய சூழ்நிலையில் குடை எடுத்து செல்வது நல்லது.
2. மது அருந்துவதை தவிர்த்தல்.
3. ஏசி அறையில் தங்குதல், மின்விசிறி கீழே இருத்தல் அல்லது நிழலில் ஓய்வெடுத்தல்.
4. போதுமான அளவு தண்ணீர் குடித்தல்.
5. உலர்ந்த பருத்தி ஆடைகளை அணிதல்
6. இறுக்கமான அல்லது ஜீன்ஸ் போன்ற தடிமனான ஆடைகள் அணிவதை தவிர்த்தல்