சபரிமலையில் பங்குனி உத்திரம் திருவிழா கோலாகல தொடக்கம்!
Dhinasari Tamil April 02, 2025 01:48 AM

#featured_image %name%

பங்குனி உத்திரம் ஆராட்டு விழாவிற்காக, சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் இன்று நடை திறக்கப்பட்டு, ஐயனின் திருநடையில் மேல்சாந்தி நெய்தீபம் ஏற்றிவைத்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.

புகழ் பெற்ற சபரிமலை நடை திறக்கப்பட்ட நிலையில், 19 நாட்கள் தரிசனத்திற்கு முன்பதிவு தொடங்கியுள்ளது.

புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, இன்று (ஏப்ரல் 1ம் தேதி) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதையடுத்து நாளை புதன்கிழமை ஏப்ரல் 2ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருவிழா தொடங்கி ஏப்ரல் 11ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும்.

திருவிழா நாட்களில் தினமும் சபரிமலை ஐயப்பனுக்கு பகலில் உற்ஸவ பலி பூஜை, உற்ஸவ பலி தரிசனம் நடைபெறும். இரவு ஸ்ரீ பூதபலி பூஜை நடைபெறும். முக்கிய நிகழ்வாக ஒன்பதாம் திருநாள் அன்று ஐயப்பன் பள்ளி வீட்டை, பத்தாவது திருநாள் அன்று ஐயப்பன் பிறந்தநாளில் பங்குனி உத்திர ஆராட்டு விழா பம்பை நதிக்கரையில் நடைபெறும்.

முக்கிய விழாவான சித்திரை விஷூத் திருவிழா ஏப்ரல் 10ம் தேதி முதல் தொடங்குகிறது. ஏப்ரல் 14ம் தேதி சித்திரை விஷூ திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழ் மாதத்தின் சித்திரை, மலையாள மாதத்தின் இடவம் மாதங்களின் மாதாந்திர பூஜை ஏப்ரல் 14ம் தேதி துவங்கி, 19ம் தேதி வரை நடக்கிறது.

இதையொட்டி, ஏப்ரல் 11ம் தேதி பங்குனி உத்திர சிறப்பு பூஜையும், ஐயப்பனுக்கு பம்பையில் ஆராட்டும், ஏப்ரல் 14ம் தேதி பூஜையும் நடக்கிறது. இந்த பூஜைகளுக்காக, இன்று (ஏப்ரல் 1ம் தேதி) தொடங்கி ஏப்ரல் 19ம் தேதி வரை தொடர்ந்து நடை திறந்திருக்கும். இதற்காக தரிசன முன்பதிவு தொடங்கியுள்ளது.

பக்தர்கள், என்ற அதிகாரபூர்வ இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம் என திருவிதாங்கூர் தேவஸ்வம் டோர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் தற்போது பங்குனி உத்திர திருவிழாவுக்கு நடை திறந்தது முதல் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. பம்பை நதியிலும் ஓரளவு தண்ணீர் வருகிறது. கடந்த சில நாட்களாக சபரிமலை வனப்பகுதியில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் கடும் வெயில் 100 டிகிரிக்கு மேல் வாட்டி எடுத்தது. மரங்களின் இலைகள் எல்லாம் உதிர்ந்து, பசுமையான வனம் கருகிய வனமாக காட்சி அளித்து வருகிறது. இந்த மழையில் பசுமை மீண்டும் கிடைக்கும் என பக்தர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.

தற்போது கேரளாவில் இலையுதிர் காலம் என்பதால் வனப்பகுதியில் உள்ள அடர்ந்த மரங்களில் இலைகள் எல்லாம் உதிர்ந்து, கருகிய வனமாகக் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது.

News First Appeared in

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.