மாதவிடாய் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு சவாலான விஷயம். விண்வெளிக்குச் செல்லும் பெண்களுக்கு, அங்கு தங்கியிருக்கும்போது மாதவிடாய் ஏற்பட்டால் என்ன செய்வது? அவர்கள் அதை எப்படிச் சமாளிப்பார்கள்? சுனிதா வில்லியம்ஸை போல, எதிர்பாராத விதமாக ஒரு பெண் அதிக நாட்கள் தங்க வேண்டியிருந்தால் என்ன செய்வது?
பொதுவாக பெண்கள் பயணம் செய்யும்போது, தங்களுக்கு எப்போது மாதவிடாய் ஏற்படும், அந்த நேரத்தில் பயணம் செய்வது அவசியமா என்று யோசிப்பார்கள்.
எட்டு நாட்கள் பணிக்காக விண்வெளிக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ், ஒன்பது மாதங்களுக்கும் மேலாக அங்கேயே தங்கினார். சுனிதா வில்லியம்ஸின் வயதுப்படி, அவருக்கு இந்தப் பிரச்னை இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.
ஆனால் மாதவிடாயை எதிர்கொள்ளும் வயதுடைய பெண்கள் அவரைப் போல விண்வெளியில் மாதக்கணக்கில் தங்க நேர்ந்தால் என்ன செய்வது? விண்வெளியில் அவர்களால் மாதவிடாயை எப்படி நிர்வகிக்க முடியும் என்ற சந்தேகம் எழுகிறது.
இந்த விஷயம் குறித்து பிபிசி முன்பு, 'விண்வெளி பெண் நோயியல் மருத்துவ நிபுணர்', மருத்துவர் வர்ஷா ஜெயினிடம் பேசியிருந்தது. இவர் விண்வெளியில் பெண்களின் ஆரோக்கியம் குறித்த ஆராய்ச்சியில் நாசாவுடன் இணைந்து பணியாற்றியவர்.
கடந்த 2019ஆம் ஆண்டில், பிபிசி தொகுப்பாளர் எம்மா பார்னெட்டிடம் இந்தப் பிரச்னைகள் குறித்து மருத்துவர் வர்ஷா ஜெயின் பேசியிருந்தார்.
எம்மா பார்னெட்டின் கேள்விகளுக்கு வர்ஷா ஜெயின் அளித்த பதில்கள் இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
''விண்வெளியில் மாதவிடாய் வரும்போது என்ன நடக்கும்? அதை எப்படிச் சமாளிப்பது?"
நாசாவின் முதல் விண்வெளி வீராங்கனையான சாலி ரைடை விண்வெளிக்கு அனுப்பும்போது நாசா எதிர்கொண்ட கேள்விகள் இவை.
அது ஒரு பிரச்னையாக மாறாத வரை அதுகுறித்துக் கவலைப்பட வேண்டாம் என்று அந்தக் கால விண்வெளி வீராங்கனைகள் கூறினர். ஆனால், பொறியாளர்கள்தான் எல்லாத் திட்டமிடலையும் செய்ய வேண்டும். ஒருவருக்கு எத்தனை சானிடரி நாப்கின்கள் தேவைப்படும் என்பதை அவர்கள் மதிப்பிட வேண்டும்.
அந்த நேரத்தில் வாரத்திற்கு 100 முதல் 200 சானிடரி நாப்கின்கள் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டது. பின்னர்தான் அத்தனை நாப்கின்கள் தேவையில்லை என்று தெரிய வந்தது.
தற்போது, விண்வெளி வீராங்கனைகள் தங்கள் மாதவிடாயை நிறுத்த கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் எனும்போது, அவற்றைப் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்னையும் இல்லை.
"மாதவிடாய் ஏற்படுவதைத் தடுப்பதற்கான வழிகளையும் நான் ஆராய்ந்து வருகிறேன்."
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விண்வெளி வீரர்கள் ஏற்கெனவே விண்வெளிக்குச் சென்றுள்ளனர். அவர்களில் பெண்களும் அடங்குவர்.
சோவியத் யூனியனை சேர்ந்த வாலன்டினா தெரஷ்கோவாதான் விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்மணி. அவர் இந்தச் சாதனையை 1963இல் செய்தார்.
அதிலிருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தனது முதல் விண்வெளி வீராங்கனையான சாலி ரைடை விண்வெளிக்கு அனுப்பியது.
"நீங்கள் ஒரு ஒப்பனைப் பெட்டியை உங்களுடன் எடுத்துச் செல்கிறீர்களா? விண்கல சிமுலேஷன்களில் (Simulation) பிழைகள் கண்டறியப்பட்டபோது நீங்கள் அழுதீர்களா?"
சாலி ரைடு முதல் முறையாக விண்வெளிக்குச் சென்றபோது அவரிடம் ஊடகங்கள் கேட்ட கேள்விகள் இவைதான்.
இதற்கு வர்ஷா ஜெயின் கூறிய பதில், "விண்வெளி சூழலுக்குப் பழகுவது என்பது பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. ஆனால், சில வேறுபாடுகள் உள்ளன."
பெண்கள் விண்வெளிக்குச் செல்லும்போது ஒருவித சோர்வை அல்லது சோம்பலை உணர்கிறார்கள். ஆண்களைப் பொறுத்தவரை, அவர்கள் பூமிக்குத் திரும்பும்போது இது நடக்கும்.
விண்வெளியில் இருந்து திரும்பிய பிறகு ஆண்கள் பார்வைத் திறன் மற்றும் கேட்கும் திறன் தொடர்பான பிரச்னைகளைச் சந்திப்பதற்கான வாய்ப்பு அதிகம். பெண்களுக்கு ரத்த அழுத்தம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படும்.
"இது உடலியல் மற்றும் ஹார்மோன் வேறுபாடுகளால் ஏற்படுகிறதா என்பது இன்னும் தெரியவில்லை. இந்த விஷயங்கள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்வது, நீண்ட காலத்திற்கு விண்வெளியில் தங்கியிருப்பதால் ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய ஒரு சிறப்பான புரிதலுக்கு வழிவகுக்கும்."
"சர்வதேச விண்வெளி நிலையத்தில் இரண்டு கழிப்பறைகள் உள்ளன. இருப்பினும், இவை மாதவிடாய் பிரச்னையை மனதில் கொண்டு வடிவமைக்கப்படவில்லை."
விண்வெளியில் உங்கள் சிறுநீர் வீணாக்கப்படாது. அது மறுசுழற்சி செய்யப்பட்டு சுத்தமான தண்ணீரைத் தயாரிக்கப் பயன்படுகிறது.
அதுவே மாதவிடாய் ரத்தம் ஒரு திடப்பொருளாகக் கருதப்படுகிறது. விண்வெளி நிலையத்தில் உள்ள கழிப்பறைகளால் அதிலிருந்து திரவங்களைப் பிரிக்க முடியாது. எனவே அதிலுள்ள தண்ணீரை மறுசுழற்சி செய்ய முடியாது.
"தண்ணீர் பயன்பாட்டிலும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. விண்வெளியில் மாதவிடாய் காலத்தில் தனிப்பட்ட சுகாதாரத்தைப் பராமரிப்பதும் கடினம்."
"விண்வெளிப் பயணம் கருவுறுதலை பாதிக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை" என்கிறார் வர்ஷா ஜெயின்.
விண்வெளிப் பயணங்களுக்குச் சென்று, பூமிக்குத் திரும்பிய பிறகு குழந்தைகளைப் பெற்ற ஆண்களும் பெண்களும் உள்ளனர். முதன்முதலில் விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் பெண்களின் சராசரி வயது 38 என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
எதிர்கால குழந்தைப் பேறுக்காக தங்களின் கருமுட்டைகளையும் விந்தணுக்களையும் உறைய வைத்துப் பாதுகாப்பது அவர்களின் தனிப்பட்ட முடிவு. இது தொடர்பாக நாசா எந்த விதிகளையும் வகுக்கவில்லை.
விண்வெளி வீரர்களுக்கு விண்வெளியில் கதிர்வீச்சு அபாயம் உள்ளது. இருப்பினும், அது கருவுறுதலில் என்ன விளைவை ஏற்படுத்துகிறது என்பது தெரியவில்லை.
விண்வெளிப் பயணத்தின்போது விந்தணுக்களின் தரம் குறைகிறது. ஆனால் பூமிக்குத் திரும்பிய பிறகு அது மீண்டும் அதிகரிக்கும். அதன் நீண்டகால தாக்கத்தைப் பற்றி இன்னும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
"பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தேவையான எண்ணிக்கையிலான கருமுட்டைகளுடன்தான் பிறக்கிறார்கள். விண்வெளிப் பயணங்களுக்கு முன்பு தங்கள் கருமுட்டைகளைப் பாதுகாக்க விரும்பும் விண்வெளி வீராங்கனைகளுக்கு நாசா மிகவும் உறுதுணையாக உள்ளது."
"நான் விண்வெளியில் அதிக நேரம் செலவிட விரும்பவில்லை. ஏனென்றால் அதனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி எனக்கு நிறையவே தெரியும்."
விண்வெளியில் மனித உடலுக்கு வேகமாக வயதாவதாகத் தெரிகிறது. எலும்பின் அடர்த்தி குறைகிறது. பூமிக்குத் திரும்பிய பிறகு நீங்கள் எத்தனை நல்ல பழக்கங்கள் அல்லது சிகிச்சைகளை எடுத்துக் கொண்டாலும், அந்தத் தாக்கத்தின் சில விளைவுகளில் இருந்து ஒருபோதும் மீள முடியாது.
"எனக்கும் விண்வெளியில் இருந்து பூமியைப் பார்க்க ஆசைதான். ஆனால், நான் அதை ஒரு நீண்டகால இலக்காகப் பார்க்கிறேன். இப்போதைக்கு பூமியில் எனது கனவு வேலையைச் செய்து வருகிறேன்," என்று வர்ஷா ஜெயின் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு