ஒரு நபர் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்துடன் மோதுவது மட்டுமல்லாமல், அதன் கண்ணில் விரலை விட்டு ஆட்டுவதை கற்பனை செய்து பாருங்கள். அந்தப் பேரரசு, அந்தக் காலத்தில் அனேகமாக உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த பேரரசாக இருந்தது.
ஜீஜாபாய் மற்றும் ஷாஹாஜி ராஜே போஸ்லேயின் மகனான சிவாஜி ராஜே போஸ்லே, வலிமைமிக்க முகலாயப் பேரரசின் ஆறாவது பேரரசரான ஔரங்கசீப் தனது புகழின் உச்சத்தில் இருந்தபோது அவருக்கு எதிராகத் தீவிர எதிர்ப்பு இயக்கத்தை மேற்கொண்டார்.
சிவாஜி தொடங்கிய இந்த இயக்கம், முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்கும் அழிவுக்கும் விதைகளை விதைத்தது. இதன்போது சிவாஜி தனக்கென ஒரு சுதந்திர ராஜ்ஜியத்தை உருவாக்கிக்கொண்டு, தன்னை 'சத்ரபதி' என்று அறிவித்துக் கொண்டார்.
1630இல் சிவாஜி பிறந்தபோது, இந்தியாவின் மேற்குப் பகுதியில் மூன்று இஸ்லாமிய சுல்தான்கள் இருந்தனர். அகமதுநகரின் நிஜாம்ஷாஹி, பீஜாப்பூரின் ஆதில்ஷாஹி மற்றும் கோல்கொண்டாவின் குதுப்ஷாஹி. இந்த மூவரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்ட வண்ணம் இருந்தனர். வடக்கிலிருந்து வந்த முகலாயர்கள் இந்த சுல்தான்களை தங்கள் ராஜ்யத்தில் சேருமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர். இதனால் தென்னிந்தியாவில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியும் என்று அவர்கள் கருதினர்.
சிவாஜியின் கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகள்சிவாஜி தனது இளமைப் பருவத்தில் பீஜாப்பூரின் நான்கு மலைக்கோட்டைகளைக் கைப்பற்றி தனது கிளர்ச்சியைத் தொடங்கினார். அப்போது ஔரங்கசீப் தனது புகழின் உச்சியில் இருந்தார்.
"ஒளரங்கசீப் சிவாஜிக்கு எதிராக எல்லா வகையான மோசமான வார்த்தைகளையும் பகிரங்கமாகப் பயன்படுத்தினார். அவரை 'மலை எலி' என்றுகூட அழைத்தார். ஆனால் அதே நேரத்தில் வளர்ந்து வரும் கிளர்ச்சியாளரை நசுக்கத் தனது பேரரசின் முழு அதிகாரத்தையும் பலத்தையும் பயன்படுத்தினார்," என்று அக்காலத்தின் புகழ்பெற்ற வரலாற்றாசிரியரான ராபர்ட் ஓர்மன் எழுதியுள்ளார்.
"ஒரு படைத் தலைவராக சிவாஜியின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், அவர் துணிச்சலான, கிட்டத்தட்ட சாத்தியமற்ற தாக்குதல்களைத் திட்டமிடுவார். தேவைப்படும்போது பின்வாங்குவதற்கும் அவர் தயங்க மாட்டார்," என்று வைபவ் புரந்தரேஷ் சிவாஜியின் வாழ்க்கை வரலாறான 'சிவாஜி இந்தியாஸ் கிரேட் வாரியர் கிங்' நூலில் குறிப்பிட்டுள்ளார்.
சிவாஜியின் போட்டியாளர்களை மிகவும் ஆச்சரியப்படுத்தியது, அவரது தோழர்கள் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களின் விசுவாசம். அவரது நெருங்கிய கூட்டாளியான பாஜி பிரபு தேஷ்பாண்டே 1660ஆம் ஆண்டில் வெறும் 300 வீரர்களுடன் பீஜாப்பூரின் ஒரு பெரிய தாக்குதலை எதிர்கொண்டார். சிவாஜி அங்கிருந்து தப்பி ஒரு பாதுகாப்பான இடத்தை அடையச் செய்வதே இதன் நோக்கம். இந்தச் சண்டையில் பாஜி பிரபு தனது உயிரை இழக்க நேரிட்டது. அவர் மராட்டிய வரலாற்றில் அழியாத இடத்தைப் பிடித்தார்.
சிவாஜியின் படையில் பத்தாயிரம் குதிரை வீரர்கள் இருந்தனர். பீஜாப்பூர் அரசவையின் பெரிய தளபதியான அஃப்சல் கானுடன் சிவாஜியின் பல கசப்பான நினைவுகள் தொடர்பு கொண்டுள்ளன. அவர் 1648இல் சிவாஜியின் தந்தை ஷாஹாஜியை சங்கிலியால் கட்டி பீஜாப்பூருக்கு அழைத்துச் சென்றார். மேலும் 1654இல் அவரது மூத்த சகோதரர் சாம்பாஜியின் மரணத்திலும் அஃப்சல்கான் சம்மந்தப்பட்டிருந்தார்.
ஜதுநாத் சர்க்கார் தனது 'சிவாஜி அண்ட் ஹிஸ் டைம்ஸ்' என்ற புத்தகத்தில், "அஃப்சல் கான் பீஜாப்பூர் அரசவையில் மார்தட்டிப் பெருமை பேசினார். சிவாஜி யார்? நான் அவரை சங்கிலியில் கட்டி இங்கே கொண்டு வருவேன். இதற்காக நான் என் குதிரையிலிருந்து கீழே இறங்கக்கூட வேண்டியதில்லை," என்று பேசியதாக எழுதியுள்ளார்.
இருவருக்கும் இடையே பல செய்திகள் பரிமாறப்பட்டன. இருவரும் 1659 நவம்பர் 10ஆம் தேதி சந்திப்பதாக முடிவு செய்யப்பட்டது. அஃப்சல்கான் தனது இரண்டு அல்லது மூன்று வீரர்களுடன் பல்லக்கில் வருவார். அவர் தனது ஆயுதங்களைக் கொண்டு வர அனுமதிக்கப்பட்டார். அதே எண்ணிக்கையிலான வீரர்களைத் தன்னுடன் அழைத்து வர சிவாஜியும் அனுமதிக்கப்பட்டார்.
சந்திப்புக்குச் சில நாட்களுக்கு முன்பு சிவாஜி, சந்திப்பு நடக்கும் இடத்திற்கு அருகில் உள்ள காடுகளுக்குள் அமைதியாக நுழைந்து உஷாராக இருக்குமாறு தனது படைவீரர்களுக்குக் கட்டளையிட்டார். அஃப்சல் கானுடனான தனது பேச்சுவார்த்தை தோல்வியுற்றால் ஒலி எழுப்ப உத்தரவு பிறப்பிப்பதாகவும், இது அஃப்சல் கானின் வீரர்களைத் தாக்க வேண்டும் என்பதற்கான சமிக்ஞையாக இருக்கும் என்றும் சிவாஜி அவர்களிடம் கூறினார்.
பர்மானந்த் தனது 'ஷிவ் பாராத்' புத்தகத்தில் எழுதுகிறார், "அன்று சிவாஜி வெள்ளை நிற உடை அணிந்திருந்தார். அவரது கிரீடத்தின் கீழ் ஒரு இரும்பு தொப்பி மறைத்து வைக்கப்பட்டது. அவருடைய வலது கைமடிப்பில் கூர்மையான சிறிய குத்துவாளான 'பிச்வா' இருந்தது. அவரது இடது கையில் 'பாக்- நக்'(புலி நகம்) மறைந்திருந்தது. அவரது நம்பிக்கைக்குரிய இரு வீரர்கள் ஜீவமஹாலா மற்றும் சாம்பாஜி காவ்ஜித் ஆகியோர் அவருடன் இருந்தனர்.
இந்தச் சந்திப்பிற்கு அஃப்சல் கான் சென்றபோது அவருடன் 1000 வீரர்கள் இருந்தனர். ஆனால் சிவாஜியின் தூதர் பந்தாஜி பந்த் போகில் அவரிடம் சென்று 'சிவாஜி இவ்வளவு வீரர்களைக் கண்டால் மீண்டும் கோட்டைக்குச் சென்று விடுவார் என்றும், சந்திப்பு நடக்காது' என்றும் கூறினார்.
அஃப்சல் கான் தனது வீரர்களை அங்கேயே இருக்குமாறு உத்தரவிட்டார். ஆயுதம் ஏந்திய பத்து வீரர்களைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு சிவாஜியை சந்திக்கச் சென்றார்.
அஃப்சல்கானை கொன்ற சிவாஜிஇந்தச் சந்திப்பு பற்றிய விவரங்களை அளித்து ஜதுநாத் சர்க்கார் இவ்வாறு எழுதுகிறார். "அஃப்சல் கான் சிவாஜியை பார்த்தவுடன், அவரைத் தழுவுவதற்காக கைகளை நீட்டினார். இருவரும் கட்டிப்பிடித்தபோது சிவாஜி திடீரென கோபமடைந்தார். ஏனெனில் அஃப்சல் கான் திடீரென அவரது கழுத்தை கைகளால் நெருக்கி கத்தியால் தாக்கினார்.
இவை அனைத்தும் திடீரென்று நடந்தாலும், சிவாஜி மிக விரைவாக பதிலடி கொடுத்தார். அஃப்சல் கானின் இடுப்பைப் பிடித்து அவரது வயிற்றைத் தனது 'புலி-நகத்தால்' துளைத்தார். தன் வலது கையால் அஃப்சலை குத்து வாளால் தாக்கினார். இவர் என்னைத் தாக்கிவிட்டார். உடனே இவரைக் கொல்லுங்கள் என்று அஃப்சல்கான் கூச்சலிட்டார்."
"முதலில், அவரது தூதுவர் குல்கர்னி, அஃப்சலுக்கு உதவ வந்தார். அடுத்த கணமே, அஃப்சலுடன் வந்த இரண்டு வீரர்களில் ஒருவரான சயீத் பந்தா, சிவாஜியை தாக்க முயன்றார். ஆனால் ஜீவா மஹாலா அவரைக் கொன்றார். சிவாஜி தனது வாளால் அஃப்சல்கானின் தலையை வெட்டினார் என்று சிலர் கூறுகிறார்கள்.
ஆனால், காயமடைந்த அஃப்சலை அவரது மெய்க்காப்பாளர்கள் பல்லக்கில் உட்கார வைத்தனர். சிவாஜியின் வீரர்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். முதலில் பல்லக்கு தூக்குபவர்களின் கால்களை வெட்டிவிட்டு, பின்னர் அஃப்சல்கானை கொன்றனர் என்று வேறு சிலர் கூறுகிறார்கள்."
"இந்த முழு சம்பவத்தையும் கண்டு அஃப்சலுடன் வந்த வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்தத் தாக்குதலில் அஃப்சலின் மருமகன் ரஹீம் கானும் கொல்லப்பட்டார். அந்த நேரத்தில் சிவாஜியின் தோழர்கள் ஒலி எழுப்பினர். காடுகளில் மறைந்திருந்த சிவாஜியின் வீரர்கள் வெளியே வந்தனர். ஆதில்ஷாஹி வீரர்கள் தப்பிக்க முயன்றனர். சிலர் சண்டையிட்டனர். ஆனால் அவர்கள் எல்லா பக்கங்களில் இருந்தும் சூழப்பட்டனர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 3000 வீரர்கள் கொல்லப்பட்டனர்."
ஔரங்கசீப் முகலாயப் பேரரசரானபோது, சிவாஜி அவரது பாதையில் முள்ளாக மாறினார். 1657ஆம் ஆண்டு ஷாஜகானின் தெற்கு நோக்கிய படையெடுப்பிற்கு தலைமை வகித்த ஔரங்கசீப்பை அவர் முதலில் நேரடியாக எதிர்த்தார்.
பின்னர் ஔரங்கசீப் தனது தெற்கு படையெடுப்பைப் பாதியில் விட்டுவிட்டு, முகலாய மணிமகுடத்தைத் தனதாக்கிக் கொள்ள மத்திய இந்தியாவுக்குப் புறப்பட்டார். சிவாஜி பெரிய முகலாயப் படையைவிட கொரில்லா சண்டையில் திறமையானவர்.
1663 ஏப்ரலில் சிவாஜி, புனேவில் உள்ள ஔரங்கசீப்பின் மாமா, ஷாயிஸ்தா கானின் வீட்டிற்குள் நுழைந்து அவரது மனைவிகள் மற்றும் மகனை கொன்றார். ஔரங்கசீப் ஷாயிஸ்தா கானை தெற்கில் தனது வைஸ்ராயாக நியமித்திருந்தார். மேலும் சிவாஜி தனது குழந்தைப் பருவத்தைக் கழித்த புனேவில் உள்ள 'லால்மஹாலில்' ஷாயிஸ்தா கான் வசித்து வந்தார்.
"அது ரமலான் மாதத்தின் ஆறாம் நாள். ஷாயிஸ்தா கானின் சமையல்காரர்கள் நோன்பை முடித்துவிட்டு தூங்கச் சென்றுவிட்டனர். சில சமையல்காரர்கள் விழித்திருந்து காலை உணவுக்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். சிவாஜியும் அவரது தோழர்களும் சத்தமில்லாமல் அந்த சமையல்காரர்களைக் கொன்றனர்.
சிவாஜி ஷாயிஸ்தா கானின் படுக்கையறையை அடைந்ததும், அங்கிருந்த பெண்கள் கூச்சலிட்டனர். ஷாயிஸ்தா கானின் கை அவரது ஆயுதத்தை அடையும் முன், சிவாஜி தனது வாளால் அவரது கட்டைவிரலை வெட்டினார்," என்று கிருஷ்ணாஜி அனந்த் சபாசத், சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றில் எழுதியுள்ளார்.
"அப்போது பெண்கள் அறையில் எரிந்து கொண்டிருந்த விளக்குகளை அணைத்தனர். இருட்டில் இரண்டு மராட்டிய வீரர்கள் ஒரு தண்ணீர் தொட்டியில் மோதினர். அந்தக் குழப்பத்தில், ஷாயிஸ்தா கானின் அடிமைப் பெண்கள் அவரைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
முதலில், அவரது மகன் அபுல் ஃபத் கான் ஷாயிஸ்தா கானுக்கு உதவ முன்வந்தார். அவர் இரண்டு அல்லது மூன்று மராட்டிய வீரர்களைக் கொன்றார். ஆனால் அதன் பிறகு மராட்டிய வீரர்கள் அவரைக் கொன்றனர். ஷாயிஸ்தா கானின் வீரர்கள் என்ன விஷயம் என்று புரிந்து கொள்வதற்குள் சிவாஜி உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.
இந்தத் தாக்குதலில் ஆறு மராட்டிய வீரர்கள் மட்டுமே கொல்லப்பட்டனர். 40 வீரர்கள் காயமடைந்தனர். சிவாஜி, ஷாயிஸ்தா கானின் மகனையும் அவரது 40 உதவியாளர்களையும், ஆறு மனைவிகளையும், அடிமைப் பெண்களையும் கொன்றார். ஷாயிஸ்தா கானை காயப்படுத்தினார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, சிவாஜியின் புகழ் அந்தப் பகுதி முழுவதும் பரவியது. ஔரங்கசீப்புக்கு இந்தச் செய்தி கிடைத்ததும், ஷாயிஸ்தா கானின் கவனக் குறைவே இதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டினார். ஷாயிஸ்தா கான் மீது கோபம் கொண்ட ஒளரங்கசீப் அவரை வங்காளத்திற்கு அனுப்பிவிட்டார்.
ஜெய் சிங் பலமுறை கோரிக்கை விடுத்ததை அடுத்து சிவாஜி ஒளரங்கசீப்பை சந்திக்க ஆக்ராவுக்கு செல்ல ஒப்புக்கொண்டார். ஔரங்கசீப்பின் அரசவையில் சிவாஜி சரியாக நடத்தப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவாஜி முழக்கமிட்டபோது கைது செய்யப்பட்டார். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு, சிவாஜி தனது மகன் சாம்பாஜியுடன் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
"சிவாஜி தன்னைக் கண்காணிக்க நிறுத்தப்பட்டிருந்த வீரர்களுக்கு லஞ்சம் கொடுத்து தப்பிச் சென்றிருக்க முழு வாய்ப்பு உள்ளது. ஆனால் பிராமணர்களுக்கு தானப்பொருட்கள் அனுப்பப்பட்ட பெரிய கூடைகளில் அமர்ந்து சிவாஜி தப்பினார் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் நம்புகிறார்கள்," என்று ஆர்ட்ரே ட்ருஷ்கே, ஔரங்கசீப்பின் சுயசரிதையான 'Aurangzeb the Man and the Myth' இல் குறிப்பிட்டுள்ளார்.
இதற்குப் பிறகு அவர் ஒரு துறவி போல மாறுவேடமிட்டு கால்நடையாகத் தனது ராஜ்யத்தை அடைந்தார்.
தனது சொந்த கடற்படையை உருவாக்கியது சிவாஜியின் ஒரு பெரிய சாதனை. அவரது சமகாலத்தவர்களில், கடலின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பற்றிய அரசியல் மற்றும் செயல் உத்தி பார்வையை வெளிப்படுத்திய ஒரே அரசர் இவர்தான்.
எல்லா வெளிநாட்டு கடல்சார் வல்லரசுகளான போர்த்துகீஸ், டச்சு, பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு ஆகியவை அவருடன் தங்கள் கடல் அறிவைப் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. ஆனால் இதையும் மீறி சிவாஜி தனது கடற்படையை நிறுவுவதில் வெற்றி பெற்றார். அக்காலத்தில் இது ஒரு மிகப்பெரிய விஷயமாக இருந்தது.
16 வயதில் சிவாஜி தனது தந்தையின் நிலங்களின் நிர்வாகியாக உத்தரவு பிறப்பிக்கத் தொடங்கியபோது, அவர் தேர்ந்தெடுத்த மொழி சமஸ்கிருதம். அவருடைய முத்திரையும் சமஸ்கிருதத்தில் இருந்தது.
இதுவொரு பெரிய மாற்றமாக இருந்தது. ஏனென்றால் இதற்கு முன்பு அவரது தந்தை ஷாஹாஜி, தாய் ஜீஜாபாய் மற்றும் அவரது முகவர் தாதோஜி, முஸ்லிம் மாகாணங்களின் இந்து தலைவர்களான பிரதாப ருத்ரா மற்றும் கபயநாயக்கா போன்றோர்கூட தங்கள் முத்திரைகளை பாரசீகத்தில் வைத்திருந்தனர். மேலும் சுல்தான் என்று அழைக்கப்படுவதை அவர்கள் விரும்பினார்கள். சிவாஜியின் அரசியல் நெடுநோக்கு பார்வையில் இந்துத்துவத்தின் முதல் காட்சி இங்கே காணக் கிடைக்கிறது.
சிவாஜி தன் மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். சாதாரண விவசாயிகளின் நிலத்தில் இருந்து பணம் கொடுக்காமல் எதையும் எடுக்கக் கூடாது என்று வீர்களுக்கு கடுமையான உத்தரவு போட்டிருந்தார்.
"வயல்களில் ஒரு புல்லைக் கூட தொடக்கூடாது. ஒரு தானியத்தை கூட பலவந்தமாக எடுக்கக்கூடாது என்று சிவாஜி தனது படைக்கு எழுத்து வடிவில் கட்டளை இட்டிருந்தார். அவரது உத்தரவை மீறி விவசாயிகளை துன்புறுத்திய வீரர்கள் தண்டிக்கப்பட்டனர்," என்று வைபவ் புரந்தரே எழுதுகிறார்.
சிவாஜி தன் பெயருக்கு முன்னால் 'சத்ரபதி' என்ற அடைமொழியை சேர்த்துக்கொண்டார். 1911-ல் ரவீந்திரநாத் தாகூர் 'மாடர்ன் ரிவ்யூ' இதழில் எழுதிய கட்டுரையில் 'சிவாஜி இந்து சாம்ராஜ்யத்தை நிறுவ விரும்பினார்' என்று எழுதினார். ஜவஹர்லால் நேருவும் 'டிஸ்கவரி ஆஃப் இந்தியா'வில், 'சிவாஜி இந்து தேசியவாதத்தின் மறுமலர்ச்சியின் அடையாளம்' என்று எழுதினார்.
படையில் முஸ்லிம்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டன. ஆனால் அவரது இந்து ராஜ்ஜியம், இந்துக்கள் மற்றும் இந்து அல்லாதவர்கள் என்று அனைவருக்குமாக இருந்தது.
"அவரது சிந்தனை உள்ளடக்கிய ஒன்றாக இருந்தது. அவர் இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒரே மாதிரியாகக் கருதினார். மதத்தின் அடிப்படையிலான பாகுபாடுகளை அருவருப்பானதாகவும், ஒழுக்கக்கேடானதாகவும், ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் அவர் கருதினார். மராட்டியர்கள் மற்றும் பிற இந்துக்களைப் போலவே, முஸ்லிம்களும் படைகளில் சேர்க்கப்பட்டனர். அவரது கடற்படையின் இரண்டு உயர் அதிகாரிகளான தார்யா சாரங் வென்ட்ஜி மற்றும் தௌலத் கானும் முஸ்லிம்கள்," என்று வைபவ் புரந்தரே எழுதியுள்ளார்.
அவருடைய மற்றொரு உயர் ராணுவ அதிகாரி நூர் பேக் ஒரு முஸ்லிம் ஆவார்.
சுரேந்திரநாத் சென் தனது ' தி அட்மினிஸ்ட்ரேட்டிவ் சிஸ்டம் ஆஃப் மராட்டாஸ்' என்ற புத்தகத்தில் "சிவாஜி தனது ஆலோசகர்களின் எதிர்ப்பையும் மீறி 700 பதான்களை தனது படையில் சேர்த்தார். அவரது சகாக்களில் ஒருவரான கோமாஜி நாயக் பஞ்சாம்பல் மட்டுமே அவரது முடிவை ஆதரித்தார்," என்று குறிப்பிட்டுள்ளார்.
'முஸ்லிம்களின் புனித நூலான குரானை எங்கு கண்டாலும் அதை மதிக்குமாறு சிவாஜி தனது வீரர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்' என்பதை சிவாஜியின் விமர்சகரான முகலாய வரலாற்றாசிரியர் காஃபி கான், எழுத்துப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.
பெண்களுக்கு மரியாதைசேது மாதவராவ் பகாடி தனது 'சத்ரபதி சிவாஜி' என்ற நூலில், "இந்து ஆட்சியின் வடிவம் இருந்தபோதிலும், சிவாஜி எப்போதும் மத சகிப்புத்தன்மை கொள்கையை பின்பற்றினார்" என்று எழுதுகிறார். முஸ்லிம் பெண்கள் மற்றும் புனிதர்களை மதிக்குமாறு அவர் தனது வீரர்களுக்கும் தொண்டர்களுக்கும் அறிவுறுத்தினார். அவர் தனது பிராந்தியத்தில் உள்ள மசூதிகள் மற்றும் கோவில்களுக்கு முந்தைய ஆட்சியாளர்கள் வழங்கிய மானியங்களைத் தொடர்ந்தார்.
ஒருமுறை சிவாஜியின் தளபதி அபாஜி சோண்தேவ், முல்லா அகமதுவின் அழகிய மருமகளை சிறைபிடித்து புனேவுக்கு சிவாஜியிடம் அனுப்பினார்.
"சிவாஜி அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்டது மட்டுமல்லாமல், அவளை வீட்டிற்கு திருப்பி அனுப்பினார். சிவாஜி அந்தப் பெண்ணிடம், 'என் அம்மா உங்களைப் போல் அழகாக இருந்திருந்தால், நானும் உங்களைப் போல் அழகாக இருந்திருப்பேன்' என்றார்" என்று ஜதுநாத் சர்க்கார் எழுதுகிறார்.
சிவாஜியின் தலைமையில் நடந்த மற்றொரு போரில், பீஜாப்பூரின் கோட்டைத் தலைவரான கேசரி சிங் கொல்லப்பட்டார். சிவாஜி கோட்டைக்குள் நுழைந்தபோது, கேசரி சிங்கின் வயதான தாயும் அவரது இரண்டு குழந்தைகளும் பயத்தில் நடுங்குவதைக் கண்டார். சிவாஜி அவரது தாயின் பாதங்களைத் தொட்டுவணங்கி, தனது படைவீரர்களின் மேற்பார்வையில் பல்லக்கில் ஏற்றித் அவரது நகரான தேவல்காவுக்கு அனுப்பினார். சிவாஜியின் உத்தரவின் பேரில், போரில் கொல்லப்பட்ட கேசரி சிங் மற்றும் பிற வீர்களின் இறுதிச் சடங்குகள் முழு மரியாதையுடன் செய்யப்பட்டன.
ஔரங்கசீப் சிவாஜியை இழிவுபடுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் ஷாயிஸ்தா கானுக்கு நேரிட்ட அவமானத்திற்குப் பிறகு, தானே தெற்கு நோக்கிச்செல்ல வேண்டிய அளவிற்கு நிலைமை மிகவும் தீவிரமாகிவிட்டது என்பதை ஜெய் சிங்கிடம் அவர் ஒப்புக்கொண்டார்.
சிவாஜி ஆக்ராவிலிருந்து தப்பிச் சென்ற பிறகு, சூரத்தின் மீதான இரண்டாவது தாக்குதல் மற்றும் 23 கோட்டைகளை அவர் மீண்டும் கைப்பற்றிய பிறகு, தெற்கே அணிவகுத்துச் செல்வதைத் தவிர ஔரங்கசீப்பிற்கு வேறு வழி இருக்கவில்லை.
1674 இல் சிவாஜி தன்னை ஒரு சுதந்திர அரசின் அரசராக அறிவித்துக்கொண்டார். சிவாஜி தனது 50வது வயதில் காலமானார். ஆனால் அதற்குமுன் அவர், தெற்கில் குறைந்து வரும் செல்வாக்கை மீட்டெடுக்க அங்கு அணிவகுத்துச் செல்லும் நிர்பந்தத்தை ஒளரங்கசீப்புக்கு ஏற்படுத்தினார். அதன் பிறகு ஒளரங்கசீப் தான் இறக்கும்வரை 25 ஆண்டுகளுக்கு வடக்கே தனது தலைநகருக்குத் திரும்ப முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு