தூத்துக்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய விலாங்கு மீனுக்கு 'தமிழிகம்' என பெயர் சூட்டியது ஏன்?
BBC Tamil March 21, 2025 08:48 PM
Dr. Kodeeswaran P தூத்துக்குடி கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் புதிய வகை விலாங்கு மீனுக்கு தமிழிகம் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மீன்கள் என்றவுடன் உங்கள் மனதில் தோன்றும் வழக்கமான வரையறை எதற்குள்ளும் பொருந்தி வராதவை விலாங்கு மீன்கள். மெல்லிய, வழுவழுப்பான மற்றும் நீண்ட பாம்பு போன்ற உடலமைப்பைக் கொண்டவை.

அத்தகைய விலாங்கு மீன்களில், ஒரு புதிய இனம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த விலாங்கு மீன் அதிகம் பேசுபொருள் ஆவதற்குக் காரணம் அதன் பெயர். அதற்கு அரியோசோமா தமிழிகம் (Ariosoma tamilicum) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழியை அடையாளப்படுத்தும் விதமாக விலாங்கு மீனுக்கு பெயர் சூட்டியது ஏன்? சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? இந்தப் புதிய வகை விலாங்கு மீன் குறித்து ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

BBC பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICAR) கீழ் செயல்படும் தேசிய மீன் மரபணு வளப் பணியகத்தின் (NBFGR) ஆய்வாளர்கள், இதுவரை அறியப்படாத காங்கிரிடே (Congridae)) என்ற அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்த புதிய வகை விலாங்கு மீனை அடையாளம் கண்டுள்ளனர்.

இந்தப் புதிய விலாங்கு மீன் கண்டுபிடிக்கப்பட்ட காரணத்திற்காக மட்டுமின்றி, அதற்கு தமிழ் கலாசாரத்தை அடையாளப்படுத்தும் வகையில் பெயர் சூட்டியிருப்பதால் பொது மக்கள் மத்தியில் சிறப்புக் கவனம் பெற்றுள்ளது.

என்ற அறிவியல் பெயரைக் கொண்ட இந்த விலாங்கு மீன், உலகின் பழமையான மொழிகளில் ஒன்றாகக் கருதப்படும் தமிழ் மற்றும் அதன் தொன்மைக்கு மரியாதை செலுத்தும் விதமாகச் சூட்டப்பட்டுள்ளது என்று தேசிய மீன் மரபணு வளப் பணியகத்தின் செயல் இயக்குநர் முனைவர் டி.டி.அஜித் குமார் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தமிழிகம் விலாங்கு மீனை முதலில் கண்டுபிடித்த மீனவர்கள் BBC புதிதாதக் கண்டுபிடிக்கப்பட்ட விலாங்கு மீனுக்கு தமிழ்நாட்டின் பெயரைச் சூட்டுமாறு மீனவர்கள் கோரியதாகத் தெரிவித்தார் முனைவர் டி.டி. அஜித் குமார்.

இந்தப் புதிய கடல்வாழ் உயிரினத்தைக் கண்டுபிடிப்பதில் ஆய்வாளர்களைப் போலவே, தூத்துக்குடி மீனவர்களுக்கும் முக்கியப் பங்கு இருப்பதாகத் தெரிவித்தார் தமிழிகம் விலாங்கு மீன் குறித்த ஆய்வுக் கட்டுரையின் முன்னணி ஆசிரியரான முனைவர். கோடீஸ்வரன்.

"தமிழக கடலோரப் பகுதிகளில் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருவதால் மீனவர்களுடன் தொடர்பிலேயே இருப்போம். அவர்களும் புதிதாக, தாங்கள் இதுவரை கண்டிராத தோற்றங்களைக் கொண்ட கடல் உயிரினங்களைக் கண்டால் உடனே எங்களுக்குப் புகைப்படம் எடுத்து அனுப்புவார்கள்.

அதே போலத்தான் தமிழிகம் விலாங்கு மீனும் எங்கள் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டது. மீனவர்களின் வலையில் சிக்கிய இந்த விலாங்கு மீனின் தோற்றம் இதுவரை காணாத வகையில் வித்தியாசமாக இருந்ததால், மீனவர்கள் அதை எங்களிடம் பகிர்ந்தனர்," என்று விவரித்தார் கோடீஸ்வரன்.

"தமிழிகம் விலாங்கு மீன் இனத்தைக் கண்டுபிடிப்பதில் எங்களுக்கு உதவிய மீனவர்கள் அதற்குத் தமிழ்நாட்டின் பெயரை வைக்குமாறு கோரினர். பின்னர் உலகின் பழமையான மொழியான தமிழின் பெயரை அதற்கு வைக்குமாறும் சில மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில், தமிழ் மொழி மற்றும் அதன் கலாசாரத்தை அடையாளப்படுத்தும் விதமாக இந்தப் பெயர் சூட்டப்பட்டது. பின்னர் இது சர்வதேச ஆய்வறிக்கை விமர்சகர்களாலும் அங்கீகரிக்கப்பட்டது," என்று முனைவர் அஜித் குமார் கூறினார்.

தேசிய மீன் மரபணு வளப் பணியகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு, லட்சத்தீவு உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் புதிய கடல்வாழ் உயிரினங்களைக் கண்டுபிடிக்கும் நோக்குடன் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்போது அரியோசோமா இனத்தைச் சேர்ந்த காங்கிரிடே விலாங்கு மீன் இனம் கண்டுபிடிக்கப்பட்டது.

"இந்த விலாங்கு மீனின் தோற்றத்தில் இருந்த தனித்தன்மையைப் வெறும் கண்களால் பார்க்கும்போதே கண்டறிய முடிந்தது. அதை மேலும் ஆய்வு செய்ததில், அதுவொரு புதிய இனம் என்பது உறுதி செய்யப்பட்டது," என்று இந்த ஆய்வுக் குழுவின் முன்னணி ஆய்வாளரான முனைவர். கோடீஸ்வரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இதேபோல், முன்னமே தூத்துக்குடியில் இருந்து, இதே காங்கிரிடே அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொரு விலாங்கு மீன் கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. "அதற்கு தங்கள் ஊரின் பெயரை வைக்குமாறு மீனவர்கள் கேட்டனர். ஆகையால் அந்த விலாங்கு மீனுக்கு அரியோசோமா தூத்துக்குடியன்ஸ் (Ariosoma Thoothukudiense) எனப் பெயர் வைக்கப்பட்டது" என்று கூறினார் கோடீஸ்வரன்.

புதிய கடல்வாழ் உயிரினங்களுக்கான தேடல் BBC தூத்துக்குடியன்ஸ் விலாங்கு மீனுக்கும் இந்த தமிழிகம் விலாங்கு மீனுக்கும் இடையே பல வேறுபாடுகள் இருப்பதாகக் கூறுகிறார் முனைவர் கோடீஸ்வரன்

அரியோசோமா தமிழிகத்தின் தோற்றதிலேயே தனித்துவம் தெரிந்தாலும், அது ஒரு தனி இனமா என்பதை உறுதி செய்யப் பல்வேறு பகுப்பாய்வுகளை மேற்கொள்ள வேண்டியிருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

உருவவியல் பகுப்பாய்வு, மரபணு மூலக்கூறு பகுப்பாய்வு, அதன் உடலமைப்பு மற்றும் எலும்புக்கூடு ஆகியவற்றை ரேடியோகிராஃபி மூலம் ஆய்வு செய்வது எனப் பல்வேறு செயல்முறைகளின் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன் விளைவாகவே இந்த விலாங்கு மீன் இதுவரை கண்டிராத ஒரு தனி இனம் என்பதை உறுதி செய்ததாகவும் விவரித்தார் கடல் உயிரின ஆய்வாளர் கோடீஸ்வரன்.

இதன் ஆய்வு முடிவு, சர்வதேச ஆய்விதழான ஸூடாக்ஸாவில் (Zootaxa) ஆய்வுக் கட்டுரையாக வெளியிடப்பட்டன. அதன்படி, இந்த விலாங்கு மீன் பல தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இதில் முன்புற கண் விளிம்பில் ஒரு வெண்மை நிறப் பட்டை மற்றும் கீழ் தாடைக்கு அருகே வயிற்றுப் பகுதியில் கருமை நிறத் திட்டுகள் உள்ளன. கூடுதலாக அதன் மேல் தாடையின் பாதி வரை இருக்கக்கூடிய நீண்ட பற்களைக் கொண்டுள்ளன.

தூத்துக்குடியன்ஸ் விலாங்கு மீனும் தமிழிகம் விலாங்கு மீனும் ஒரே அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்தவையாக இருந்தாலும், இவற்றுக்கு இடையே பல வேறுபாடுகள் உள்ளதாக கோடீஸ்வரன் குறிப்பிட்டார்.

குறிப்பாக, "தமிழிகம் விலாங்கு மீனுக்கு 118 முதல் 123 முதுகெலும்புகள் வரை இருக்கும். ஆனால் தூத்துக்குடியன்ஸுக்கு 160 முதல் 164 முதுகெலும்புகள் வரை இருக்கும்," என்கிறார் அவர்.

முனைவர் அஜித் குமாரின் கூற்றுப்படி, தேசிய மீன் மரபணு வளப் பணியகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு, இதுவரை இந்திய கடல் பகுதிகளில் 14 வகையான விலாங்கு மீன்களைக் கண்டுபிடித்துள்ளனர். அதிகம் அறியப்படாத கடல்வாழ் உயிரினங்கள் மீது கவனம் செலுத்தி வரும் இந்த ஆய்வுக் குழு, இந்திய கடல் பகுதிகளில் வாழும் உயிரினங்களிலேயே அதிகமாக ஆய்வு செய்யப்படாத விலாங்கு மீன்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

விலாங்கு மீன்கள் எண்ணிக்கையில் மிகுதிய இருந்தபோதிலும், "இந்திய மக்கள் அதை ஓர் விருப்ப உணவாகக் கருதாத காரணத்தால், அதன் மீது அதிக கவனம் செலுத்தப்படவில்லை. அதனால், ஆய்வுகளும் அவை குறித்துப் பெரியளவில் நடைபெறவில்லை.

நீளமான, பாம்பு போன்ற உடலமைப்பு, வழுவழுப்பான தோல், அவற்றின் நடத்தைகள், உயிரியல், சூழலியல் முக்கியத்துவம் பற்றி விரிவாக ஆராய வேண்டிய தேவை அதிகமுள்ளது," என்று கூறுகிறார் முனைவர். அஜித் குமார்.

பதுங்கியிருந்து இரையை வேட்டையாடும் விலாங்கு மீன் Getty Images மாலத்தீவு கடல் பகுதியில் படம் பிடிக்கப்பட்ட அஞ்சாலை என்றழைக்கப்படும் விலாங்கு மீன் வகை (கோப்புப் படம்)

மீன்கள் என்றவுடன் உங்கள் மனதில் தோன்றும் வழக்கமான வரையறை எதற்குள்ளும் பொருந்தி வராத, மெல்லிய, நீண்ட பாம்பு போன்ற உடலமைப்பைக் கொண்டவை விலாங்கு மீன்கள்.

இந்த உடலமைப்பு, மிகவும் குறுகலான இடங்களுக்குள் நுழையவும், வழுக்கிக் கொண்டு எளிதில் நழுவிச் செல்லவும் ஏதுவாக இருக்கிறது. விலாங்கு மீன்கள் கடல் வாழ் உயிரினங்களில் மிகவும் ரகசியமானவையாகக் கருதப்படுகின்றன.

இவை பெரும்பாலும் கடலின் ஆழத்தில், பாறை இடுக்குகளில், குகைகளில் வாழும் பழக்கம் கொண்டவை. மீன்களில் பெரும்பாலானவை குழுக்களாகக் கூடி வாழ்பவையாக இருக்கின்றன. ஆனால், விலாங்கு மீன்கள் ஒரே இடத்தில் பல இருந்தாலும், தனித்தனியாக வாழக் கூடியவை என்றும் இனப்பெருக்கத்திற்காக மட்டுமே இவை ஒன்று சேரும் எனவும் குறிப்பிட்டார் கோடீஸ்வரன்.

வேட்டையாடி உயிரினமான விலாங்கு மீன், சிறிய மீன்கள், ஓட்டுமீன்கள், மெல்லுடலிகள் எனப் பல வகையான இரைகளைச் சாப்பிடுகின்றன. அவை பதுங்கியிருந்து தாக்கும் வேட்டை பாணியைக் கொண்டவை. பெரும்பாலும், பாறை இடுக்கு போன்ற தனது மறைவிடத்தில் காத்திருந்து, தனக்கு அருகில் வரும் இரைகளைத் தாக்கி உண்கின்றன.

இருப்பினும், இவற்றின் இனப்பெருக்க நடத்தைகள் ஆய்வாளர்களுக்கு இன்னும் மர்மமாக இருப்பதாகவும், அதுகுறித்து விரிவான ஆய்வுகள் தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டார் முனைவர். கோடீஸ்வரன்.

விலாங்கு மீன்கள் கடலின் ஆழத்தில் வாழ்வதால், அவற்றை ஆய்வு செய்வதில் பல சவால்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியாவில் மட்டுமின்றி உலகளவிலேயே அவை குறித்த ஆய்வுகள் குறைவாக இருப்பதாகத் தெரிவித்தார்.

Dr. Kodeeswaran P அரியோசோனா தமிழிகம் என்று பெயரிடப்பட்ட புதிய வகை விலாங்கு மீன்

குறிப்பாக அவற்றின் இனப்பெருக்க செயல்முறை இன்னமும் பல ஆய்வாளர்களுக்கு மர்மமாகவே இருந்து வருகிறது. கடல் பரப்பின் மேற்புறத்தில் முட்டையிடும் மற்ற மீன்களைப் போலன்றி, இவை ஆழ்கடலில் முட்டையிடுகின்றன. "விலாங்கு மீன்கள் ஆழமான கடல் நீரில் இனப்பெருக்கம் செய்வதாகவும் அவற்றின் லார்வாக்கள் கடலின் நடுப்பகுதிக்குச் சென்று, அங்கு வளர்வதாகவும் நம்பப்படுகிறது. ஆனால், அதுகுறித்த தெளிவான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை," என்று கூறினார் கோடீஸ்வரன்.

இந்த நிலையில், அரியோசோமா தமிழிகத்தின் கண்டுபிடிப்பு, இந்திய கடல் பரப்பிலுள்ள பரந்த, பன்முகத் தன்மை கொண்ட விலாங்கு மீன்களின் வாழ்வியலைப் புரிந்துகொள்வதற்கான ஒரு தொடக்கப் புள்ளியாக அமையக்கூடும் என்று வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

ஒப்பீட்டளவில் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்ட உயிரினமாக இருந்தாலும், கடலின் சூழலியல் அமைப்புகளில் வேட்டையாடியாகச் செயல்படும் விலாங்குகள் கடல் சுற்றுச்சூழலின் சமநிலையைப் பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இந்தக் கண்டுபிடிப்பு அதிகம் அறியப்படாத மீன் இனங்கள் வழங்கக்கூடிய பொருளாதார நன்மைகள் குறித்தும் கவனத்தை ஈர்த்துள்ளது. மற்ற உயிரினங்களுடன் ஒப்பிடும்போது விலாங்குகள் மீன்பிடித் தொழிலில் ஒப்பீட்டளவில் குறைவாகப் பயன்படுத்தப்படுவதால், அவற்றைச் சுற்றி நிலையான வணிக மீன்பிடி நடைமுறைகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இது உள்ளூர்ப் பொருளாதாரங்கள் மற்றும் பல்லுயிர்ப் பாதுகாப்பு முயற்சிகள் இரண்டுக்கும் பயனளிக்கக்கூடும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.