சென்னை மாவட்டம் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் 17 வயதுடைய மூத்த மகள் 12-ஆம் வகுப்பு படித்து முடித்து விட்டார். தற்போது பாரிமுனையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 10-ஆம் தேதி சிறுமி கார்த்திக்(20) என்பவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். மேலும் கார்த்திக்கை காதலிப்பதாகவும், அவரால் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் இருவரையும் கடுமையாக திட்டி வீட்டை விட்டு வெளியேற்றினார்.
இதனால் சிறுமி கார்த்திக்கின் வீட்டிற்கு சென்று விட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமி தனது தாயை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வயிறு வலி அதிகமாக இருப்பதாக கூறி அழுதுள்ளார். உடனே அந்த பெண் தனது மகளை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதனை செய்து பார்த்தபோது சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது உறுதியானது. இதுகுறித்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர்.