ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு.. சட்டசபை பதிலுரையை புறக்கணித்த வேல்முருகன்!
WEBDUNIA TAMIL March 21, 2025 08:48 PM


தலைமை செயலகத்தில் 2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் சட்டப்பேரவைக்கு உள்ளே தமிழ் வழி கல்வியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு இருந்த நிலையில் இப்போது அது நடைமுறையில் இல்லை. அதை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்’ என கோரிக்கை வைத்தார்.

அப்போது அமைச்சர் சேகர் பாபு அவரின் பேச்சை குறுக்கிட்டு ஏதோ சொல்ல கோமடைந்த வேல் முருகன் தனது இருக்கயை விட்டு எழுந்து வந்து சேகர் பாபுவை பார்த்து ஒருமையில் பேசினார். இதனால், அங்கே கூச்சல் ஏற்பட்டது. ஆனால், முக ஸ்டாலின் சேகர் பாபுவுக்கு ஆதரவாக பேசினார். வேல்முருகன் பேசினால் நானே அமைதியாக அமர்ந்து கேட்பேன். ஆனால், சில நேரங்களில் அதிக பிரசங்கி போல நடந்துகொள்கிறார். அவர் இப்படி நடந்துகொள்வது வேதனையளிக்கிறது. அதுவும் இடத்தை விட்டு எழுந்து வந்து கூச்சல் போடுவது அவருக்கு அழகல்ல சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சொல்லிவிட்டார்.

அவருக்கு பின் பேசிய சபாநாயகர் அப்பாவு ‘வேல்முருகன் அமைச்சரை பார்த்து ஒருமையில் பேசியது மிகவும் அநாகரீகமானது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதை வேல்முருகன் திருத்திக்கொள்ள வேண்டும். இந்த ஒருமுறை அவரை மன்னிக்கிறோம். இது போல யார் நடந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என சொல்லிவிட்டு வேல் முருகன் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டார்.

அதன்பின் வெளியே வந்த வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசியபோது ‘தமிழ் நாட்டில் தமிழ் எங்கே இருக்கிறது. பெயர் பலகை, ஆட்சி மற்றும் அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என நான் சொல்ல வந்ததை புரிந்துகொள்ளாமல் அமைச்சர் சேகர்பாபுவும், முதலமைச்சரும் என்னை அதிக பிரசங்கி போல பேசியது எனக்கு வருத்தம் அளிக்கிறது’ எனக் கூறினார். மேலும், ஆந்திராவில் தெலுங்கை கட்டாயப்பாடம் ஆக்கியது போல தமிழ்நாட்டிலும் அமுல்படுத்த வேண்டும் என சொல்ல வந்ததை கூட அவர்கள் கேட்கவில்லை. சபாநாயகர் எனக்கு அனுமதி மறுத்துவிட்டார்’ என சொல்லியிருந்தார்.

இந்நிலையில், இன்று அவைக்கு வேல்முருகன் வரமால் புறக்கணித்துவிட்டார். நேற்று நடந்த சம்பவம் அவருக்கு மனக்கசப்பை ஏற்படுத்தியிருக்கும். அதனால்தான் இன்று சட்டசபை நிகழ்வுகளில் அவர் கலந்துகொள்ளவில்லை என நம்பப்படுகிறது.
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.