ஐபிஎல் 2025 தொடர் நாளை கொல்கத்தாவில் சிறப்பாக தொடங்க உள்ளது. தொடக்க போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.
இந்த சீசனில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். அணியுடன் இணைந்துள்ள அவர், தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், சென்னையில் மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள ராமகிருஷ்ணாபுரம் முதல் தெருவுக்கு 'ரவிச்சந்திரன் அஷ்வின் சாலை' என பெயர் மாற்றம் செய்ய சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
கார்த்திக் என்பவர் எழுத்து மூலமாக வழங்கிய கோரிக்கையை மாநகராட்சி பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. தீர்மானம் நிறைவேற்ற அனுமதிக்க மாமன்ற கூட்டத்தில் இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சென்னை மாநகராட்சியின் 2025-2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், நகரின் ஒட்டுமொத்த தோற்றத்தை மேம்படுத்த ரூ.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
சாலைகளின் மைய தடுப்புகள் மற்றும் தீவுத்திட்டங்களை அழகுபடுத்தி பராமரிக்க ரூ.18 கோடியும், மாநகராட்சி நுழைவாயில்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் சிறப்பான வெளிச்ச விளக்குகள் மற்றும் செயற்கை நீரூற்றுகள் அமைப்பதற்காக ரூ.5 கோடியும், நகரில் உள்ள மேம்பாலங்கள் மற்றும் ரெயில்வே மேம்பாலங்களின் கீழ் சுற்றுச்சூழல் தோற்றத்தை மேம்படுத்தும் பணிகள் ரூ.42 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளன.