என்ன ஒரு கேவலம்!!! இப்படி கூட விளையாட்டு மைதானம் இருக்குமா...! மாநகராட்சி நடவடிக்கை எடுப்பது எப்போது?
Seithipunal Tamil March 22, 2025 07:48 PM

பரபரப்பாக இயங்கும் பெங்களூரு கே.பி.அக்ரஹாரா மாகடி சாலையில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளி வளாகத்தின் விளையாட்டு மைதானத்தை பள்ளி மாணவ-மாணவிகள் மட்டுமின்றி கே.பி.அக்ரஹாரா, மாகடி சாலையை சேர்ந்த இளைஞர்களும் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த மைதானத்தில் தினமும் ஏராளமானோர் விளையாடி வருகிறார்கள். மேலும் இங்கு பொதுமக்கள் அமருவதற்காக இருக்கைகளும் அமைக்கப்பட்டிருக்கிறது.இந்நிலையில் தற்போது அந்த மைதானம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. அங்குள்ள இருக்கைகள் சேதமடைந்து கிடப்பதுடன், செம்மண் நிறத்தில் காட்சி அளிக்கிறது.

துர்நாற்றம்  குப்பை கழிவுகள்:

மேலும் ஆங்காங்கே குப்பை கழிவுகள் குவிந்து கேவலமாக கிடக்கின்றன. இந்த குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.மேலும் பொதுமக்கள் அமரும் இடத்திலுள்ள மேற்கூரையின் இரும்பு கம்பிகள் சிதிலமடைந்து கிடக்கிறது.

மதுபானம்,கஞ்சா:

சில கம்பிகள் சரியான பிடிப்பு இல்லாமல் உள்ளன. இதற்கிடையில் இரவு நேரத்தில் சிலர் விளையாட்டு மைதானத்தில் அமர்ந்து மதுபானம் குடிப்பதுடன், கஞ்சா புகைக்கின்றனர். இதனால் கல்வி நிலையம், விஷமிகளின் கூடாரமாக மாறிவிட்டது. அங்கு கிடக்கும் மதுபான பாக்கெட்டுகள், சிகரெட்டுகளை பார்த்து மாணவர்கள் தவறான பாதைக்கு செல்லக்கூடும்.

மாநகராட்சி:

எனவே மாநகராட்சி அதிகாரிகள் விளையாட்டு மைதானத்துக்குள் கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்றுவதுடன், இருக்கையையும் சீரமைத்து கொடுக்க வேண்டும். அதேபோல மைதானத்தில் அமர்ந்து மது குடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இதற்கு மாநகரம் என்ன பதிலளிக்க போகிறது? என்று மக்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.