இந்து கடவுளான முருகனின் கோயில் அமைந்துள்ள மதுரை திருப்பரங்குன்றம் மலையை, அங்குள்ள இஸ்லாமியர்கள் உரிமை கொண்டாடுவதாகவும், அந்த மலையை காக்கும் வகையில் சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி வழங்க கோரி பாரத் இந்து முன்னணி அமைப்பின் வடசென்னை மாவட்ட துணைத் தலைவரான எஸ்.யுவராஜ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் தள்ளுபடி செய்திருந்தது .
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த மனுதாரர், ``சென்னையில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் இருந்து கந்தகோட்டம் முருகன் கோயில் வரை இந்த வேல் யாத்திரையை நடத்த திட்டமிட்டு இருக்கின்றோம். எனவே அதற்கு உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி பேலா எம் திரிவேதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில், `இந்த விவகாரம் ஏற்கனவே முடிந்து போனது இதில் தேவையில்லாமல் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான் இப்படியான அனுமதி கேட்கப்படுகிறது. இதனால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது’ என தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், `ஏற்கனவே இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் மிகத் தெளிவான உத்தரவை பிறப்பித்திருக்கிறது. எனவே அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை’ என கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Vikatan WhatsApp Channelஇணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK