நேற்று டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணிக் கேப்டன் அக்சர் படேல், ‘இன்று கே.எல்.ராகுல் விளையாட மாட்டார். தனிப்பட்ட காரணங்களால் விலகிவிட்டார்’ எனத் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு வெளியானப் பிறகு, கே.எல்.ராகுலிடம் இருந்து ஒரு குட் நியூஸ் வந்தது. கே.எல்.ராகுல், பிரபல பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால்தான், அவர் கடந்த இரண்டு தினங்களாக டெல்லி கேப்டல்ஸ் அணியில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறப்பட்டது.
அதியா ஷெட்டி, கற்பமாக இருப்பதாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கே.எல்.ராகுல் அறிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது குழந்தை பிறந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக ராகுல் அறிவித்துள்ளார்.
ஐபிஎல் 18ஆவது சீசனின் மெகா ஏலத்தில், கே.எல்.ராகுலை டெல்லி கேபிடல்ஸ் அணி 14 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதனைத் தொடர்ந்து,ராகுலுக்கு கேப்டன் பதவியை கொடுக்க முன்வந்தனர். ஆனால், அதனை ராகுல் ஏற்கவில்லை.
சமீபத்தில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்திய அணி கோப்பை வெல்ல கே.எல்.ராகுல் முக்கிய காரணமாக இருந்தார். அணியின் பேட்டிங் காம்பினேஷன் படி, அக்சர் படேலுக்கு அடுத்து 6ஆவது இடத்தில் ஆட வேண்டும் என்ற நிலை வந்தபோதும், பேட்டிங் ஆர்டரை மாற்றி, தொடர்ந்து அபாரமாக விளையாடினார். குறிப்பாக, நியூசிலாந்துக்கு எதிரான பைனலில், முக்கியமான நேரத்தில் 34 (33) ரன்களை குவித்து மேட்ச் வின்னராக இருந்தார்.
மொத்தம் 5 போட்டிகளில் 140 சராசரி, 97.90 ஸ்ட்ரைக் ரேட்டில் 140 ரன்களை குவித்து, சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்ல முக்கிய காரணமாக ராகுல் இருந்தார்.
ஐபிஎலில் அதிக ரன்கள் அடித்தோர் பட்டியலில் கே.எல்.ராகுல் 12ஆவது இடத்தில் இருக்கிறார். 45.46 சராசரியில், 134.60 ஸ்ட்ரைக் ரேட்டில் 4,683 ரன்களை அடித்துள்ளார். அதில், 4 சதம், 37 அரை சதங்களும் அடங்கும். ஒரு போட்டியில், 132* ரன்களை குவித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.