2020 ஆம் ஆண்டுக்கு முன்பு உங்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது என்று யோசித்துப் பாருங்கள். மாஸ்க், சானிடைசர், குவாரன்டைன், பொது முடக்கம் (லாக்டவுன்) ஆகிய வார்த்தைகள் உங்களுக்கு அவ்வளவு பரிச்சயம் இல்லாதவையாக இருந்திருக்கும்.
ஒருவருடன் கைகுலுக்க அல்லது அருகில் நின்று பேச தயக்கம் காட்டியிருந்திருக்க மாட்டீர்கள். வகுப்புகள் அல்லது வேலைகளை ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே செய்திருக்க மாட்டீர்கள்.
ஆனால் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம், கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு அமலான பிறகு மக்களின் அன்றாட வாழ்க்கை அடியோடு மாறிவிட்டது.
உலகையே முடக்கிப் போட்ட கோவிட் 19 தொற்றால் இந்தியாவில் மட்டும் 4.7 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக . இது இந்திய அரசின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகம் (இந்திய அரசாங்கம் இந்த எண்ணிக்கையை ஏற்க மறுக்கிறது).
54 வயதாகும் கோவையை சேர்ந்த தவமணி என்பவர், கொரோனா ஊரடங்கிற்கு முன்பு சொந்தமாக ஏற்றுமதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். ஒரே வருடத்திற்குள் அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையே தலைகீழாக மாறியது.
"நான் 15-20 பணியாளர்களை வைத்து சுமார் ரூ.1 கோடி மதிப்பில் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்தேன். 2020 ஆம் ஆண்டுக்கு முன்பு எனது வாழ்க்கை மிகவும் சிறப்பாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. ஆனால் கோவிட் எனது வாழ்க்கையையே புரட்டிப்போட்டது", என்று தவமணி பிபிசி தமிழிடம் பேசுகையில் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஆரம்பத்தில், ஊரடங்கு அமலான போது வாடிக்கையாளர்கள் குறையத் தொடங்கினர். அப்போதே எனது நிறுவனம் சரிவை சந்திக்க தொடங்கியது. 2021 ஆம் ஆண்டிற்குள் எனது நிறுவனம் பெரும் இழப்பை சந்தித்ததால், நான் அதனை மூடிவிட்டேன்", என்றார்.
கடன் வாங்கி வணிகத்தைத் தொடர அவர் முயற்சி செய்தாலும், தவமணியால் நீண்ட காலத்திற்கு அதனை செய்ய முடியவில்லை.
"எனது நம்பிக்கை போய்விட்டது. ஏற்கனவே இருந்த எனது சொத்துகளை விற்று, வாங்கிய கடனை அடைத்தேன். என்னுடைய குடும்பத்தை நடத்தக் கூட என்னிடம் போதிய பணம் இல்லை", என்று கூறிய தவமணி தற்போது கோவையில் ஸ்விக்கி உணவு டெலிவரி ஊழியராக பணியாற்றி வருகிறார்.
பல்வேறு நபர்களுக்கு வேலை கொடுத்த நான், இப்போது மாதம் 15 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையிலான சம்பளத்துக்கு, ஒரு நாளைக்கு சுமார் 150 கிலோமீட்டருக்கும் மேல் வண்டி ஒட்டுகிறேன் என்று நினைத்துப்பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
"என்னுடைய வருமானத்தை எல்லாம் மொத்தமாக நிறுவனத்தில் முதலீடு செய்து ஒரு குழந்தையை போல அதனை கவனித்து வந்தேன். ஆனால் கோவிட் அனைத்தையும் மாற்றிவிட்டது.", என்றார் தவமணி.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது, பல்வேறு நிறுவனங்கள் இழப்பை சந்தித்ததால் மூடப்பட்டன.
"2020-21 ஆம் ஆண்டில் (ஏப்ரல் 2020 முதல் பிப்ரவரி 2021 வரை) நிறுவனங்கள் சட்டத்தின் பிரிவு 248(2) இன் கீழிலிருந்து மொத்தம் 10,113 நிறுவனங்கள் நீக்கப்பட்டன. மத்திய அமைச்சக தரவுகளின்படி தமிழ்நாட்டில் மட்டும் 1,322 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன", என்று அப்போது கார்பரேட் விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சராக இருந்த அனுராக் சிங் தாக்கூர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.
நிறுவனங்கள் சட்டத்தின் பிரிவு 248(2) என்பது, நிறுவனங்கள் எந்தவொரு தண்டனை நடவடிக்கையின் காரணமாக அல்லாமல், தாமாக முன்வந்து தங்கள் வணிகங்களை நிறுத்தியுள்ளன என்பதைக் குறிக்கும் சட்டமாகும்.
பண இழப்பையும் தாண்டி பலர் தங்களது அன்புக்குரியவர்களை இந்த நோய் தொற்றின் காரணமாக இழந்துள்ளனர்.
24 வயதாகும் கயல்விழி, தனது பெற்றோர் மற்றும் அண்ணனுடன் மகிழ்ச்சிகரமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். ஆனால் ஒரே வாரத்தில் அவரது வாழ்க்கை தலைகீழாக மாறியது.
"எனது தந்தை ஒரு காவலாளி (security guard) பணியாற்றினார். ஊரடங்கு அமலில் இருந்தாலும் அவர் வேலைக்கு செல்ல வேண்டியதாக இருந்தது. கோவிட் தொற்றின் இரண்டாம் அலையின்போது, ஒரு நாள் அவர் லேசான காய்ச்சலுடன் வீட்டிற்கு திரும்பினார். வீட்டிற்குள்ளே ஒரு அறையில் அவர் தன்னை தனிமைபடுத்திக் கொண்டார். இரண்டு நாட்களில் அவரது நிலை மோசமானது", என்று நினைவு கூர்கிறார் கயல்விழி.
அவரது தந்தை சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
"மருத்துவமனையில் அனுமதி பெறவே கடினமாக இருந்தது. படுக்கை பெற பற்றாக்குறை இருந்தது. என்னதான் எனது தந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டாலும், அவரது உடல்நிலை மிகவும் நலிவடைந்து. அவர் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டார், ஆனால் அவர் மீண்டுவரவில்லை", என்று கண்ணீர் மல்க கூறினார் கயல்விழி.
குடும்பத்தில் இருந்த ஒரே வருமானம் ஈட்டுபவரும் இறந்துபோனதால், காயல்விழியின் குடும்பமே திகைத்து நின்றது. அவரது தாய், பூ விற்பது, தோசை மாவு விற்பது போன்ற சிறு தொழில்கள் செய்தாலும் அது போதுமானதாக இல்லை.
"நான் அப்போது கல்லூரியில் முதலாமாண்டு படித்துவந்தேன், எனது மூத்த சகோதரர் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு படித்துக்கொண்டே வேலைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. வேலைக்கு சென்றால்தான் அடுத்த வேளை உணவு உண்ண முடியும் என்ற நிலை ஏற்பட்டது", என்று கயல்விழி கூறினார்.
தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணிபுரியும் கயல்விழி, "எனது குடும்பம் இப்போது நல்ல நிலையில் இருந்தாலும், எங்களோடு அப்பா இல்லை என்ற எண்ணம் மிகவும் உறுத்தலாக இருக்கிறது. சந்தோஷம் இருந்தாலும் அதை அனுபவிக்க முடியவில்லை", என்று கூறினார்.
இந்தியாவில் மட்டும் தற்போது வரை 45 மில்லியன் மக்களுக்கு கோவிட் நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றன.
கொரோனா பரவலின் போது, மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு படுக்கை ஒதுக்குவது சிரமமானதாக இருந்தது. அனைத்து மருத்துவமனைகளும் கோவிட் நோயாளிகளால் நிரம்பியிருந்தன. இதனால் மற்ற நோயாளிகளுக்கு சிகிச்சைகளைப் பெறுவதில் சிரமம் ஏற்பட்டது.
இதை பற்றி ரகு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் பிபிசி தமிழிடம் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
"எனது மனைவிக்கு லேசான தலைவலி மற்றும் காதுவலி ஏற்பட்டது. இதனால் அருகில் கிளீனிக்-கிற்கு சென்றோம், ஆனால் கொரோனா வைரஸ் காலம் என்பதால், மருத்துவர்கள் அருகில் வந்து கூட சிகிச்சை அளிக்கவில்லை. 10 அடி தூரத்தில் இருந்தே மருந்துகளை பரிந்துரைத்தனர். ஆனால் அவருக்கு தொடர்ந்து தலைவலி இருந்தது", என்கிறார் அவர்.
"மிகுந்த சிரமத்திற்கு பிறகு, அரசு மருத்துவமனைக்கு சென்றபோதே, எனது மனைவிக்கு மூளையில் கட்டி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்", என்று அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
நோய் பாதிப்பின் அளவை பொறுத்தே அப்போது சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் இதற்கெல்லாம் அதிகமான செலவானதாகவும் அவர் கூறினார்.
"தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தொடங்கப்பட்டது. ஒவ்வொரு சிகிச்சைக்கு முன்பும் கோவிட் நோய் தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டதால் அதற்கு அதிக செலவானது. கோவிட் நோய் பாதிப்புகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டதால் மற்ற நோய்களுக்கு சிகிச்சை பெறுவதில் சிக்கலை எதிர்கொள்ள நேரிட்டது", என்றும் அவர் தெரிவித்தார்.
"மக்கள் அனைவரும் வீட்டைவிட்டு வெளியே வரவே பயந்த சூழலில் நாங்கள் மருத்துவமனைகள், அரசு அழுவலகங்கள் மிகவும் முக்கியமாக இறுதிச்சடங்குகள் நடைபெறும் இடத்திற்கு சென்று செய்திகளை திரட்ட வேண்டியிருந்தது. மக்கள் அனைவரும் அழும் காட்சிகளை படம்பிடிப்பது, பாதிக்கப்பட்டு மனமுடைந்த நிலையில் உள்ளவர்களிடம் பேசி தகவல்களை அறிவது போன்றவை மிகவும் சங்கடமாக இருந்தன", என்று தனியார் ஊடக நிறுவனத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ஒருவர், பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
மற்ற மக்களுக்கு இந்த நோயின் தாக்கத்தை பற்றிய செய்திகளை கொண்டு சேர்க்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர் பணிக்கு செல்ல வேண்டியதாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
"ஓர் ஊடகவியலாளராக அது எனது பணியாக இருந்தது, ஆனால் சக மனிதராக என்னால் இந்த அவலங்களை பார்க்க முடியவில்லை. நான் வேலைக்காக வெளியே சென்று வருவதால் என்னுடைய வீட்டில் இருப்பவர்களுக்கு நோய் பரவி விடுமோ என்ற பதற்றம் எப்போதும் என்னுள் இருந்தது. கோவிட் என்ற பெயரைக் கேட்டால் அது இன்று வரை எனக்கு பயமாக இருக்கும்", என்றும் அவர் கூறினார்.
கோவிட் கால கட்டத்தில் லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டதால், மருத்துவமனையில் படுக்கைகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆக்ஸிஜன் வசதி, வெண்டிலேட்டர் வசதி போன்றவை கிடைப்பதிலும் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர்.
"ஆரம்பத்தில், கோவிட் நோய் பாதிப்பு என்பது அனைவருக்கும் மிகவும் புதிதாக இருந்தது. மருத்துவர்களுக்கும் இதனை குணப்படுத்த உரிய சிகிச்சை முறை தெரியாமல் இருந்தனர். ஆனால் ஆயிரக்கணக்கான நோய் பாதிப்பு ஏற்பட்ட மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளை நாடி வந்த போது மருத்துவ துறையே திக்குமுக்காடியது", என்று மும்பையில் உள்ள கெம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரியும் அருணானந்தன் பிபிசி தமிழிடம் நினைவு கூர்ந்தார்.
கோவிட் இரண்டாம் அலையின் போது மிகவும் தீவிரமான சூழல் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
"அந்த சமயத்தில் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், வெண்டிலேட்டர் வசதி மற்றும் படுக்கையே பற்றாக்குறையாக இருந்தது. கல்லூரியில் சீட் கிடைப்பது போல கூடுதல் கட்டணம் செலுத்தியோ அல்லது தங்களுக்கு தெரிந்தவர்களின் செல்வாக்கை பயன்படுத்தியோ மக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக இடம்பிடித்தனர்", என்று மருத்துவர் அருணானந்தன் குறிப்பிட்டார்.
கோவிட் காலகட்டத்தில், முன்கள பணியாளர்கள் முகக் கவசத்தையும் தாண்டி PPE கிட் எனப்படும் பாதுகாப்பு கவசத்தையும் அணிய வேண்டியதாக இருந்தது.
இதுகுறித்து பேசிய அவர் "ஒரு நோயாளியை தொட்டுப் பார்த்தாலே அவருக்கு நோயின் தாக்கம் என்ன என்பதை மருத்துவர்கள் தெளிவாக சொல்லிவிடலாம். அப்படி இருக்கும் நிலையில் இது போன்ற பாதுகாப்பு உடைகளை அணிந்துகொண்டு 10 அடி தூரத்தில் இருந்து சிகிச்சை அளிப்பது மிகவும் சிரமமாக இருந்தது. மணிக்கணக்காக அதை அணிந்து கொண்டிருந்ததால் மறுத்துவர்களுக்கு மூச்சுத்திணறல், ரேஷஸ் போன்ற பிரச்சனைகளும் ஏற்பட்டன", என்றார்.
கோவிட், அரசாங்கம், மருத்துவத் துறை, சிகிச்சை வசதிகள், மக்கள் மேலாண்மை போன்றவற்றின் திறன்களை சோதித்த ஒரு சவாலான காலகட்டமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
"என்னதான் தொடக்கத்தில், நோய் பாதிப்பை கையாள தெரியாமல் நாம் தவித்தாலும், ஒரு சில மாதங்களுக்கு பிறகு தீவிர கட்டுப்பாடுகள் மற்றும் மருத்துவ வசதிகளால் கோவிட் பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. இது அனைத்து துறையின் திறன்களை சோதனை செய்யும் காலகட்டமாக அமைந்தது", என்று கூறிய மருத்துவர் அருணானந்தன், "இனிமேல் எந்த ஒரு நோய் தொற்று ஏற்பட்டாலும் அதனை கையாளும் பக்குவமும், வசதிகளையும் உருவாக்க கோவிட் காலகட்டம் வித்திட்டது", என்றும் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.