கன்சர்வேடிவ் கட்சியின் தேர்தலில் இந்தியா தலையிட்டதாக செய்திகள் வெளியான நிலையில், தான் தலைமைப் பதவியை நேர்மையாகவே வென்றதாக கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பியர் பாலிவ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தலில் பாலிவுக்கு ஆதரவாக கனடாவின் தெற்காசிய சமூகத்தினரிடையே நிதி திரட்டுவதிலும், ஒருங்கிணைப்பதிலும் இந்திய ஏஜென்டுகளுக்கு தொடர்பு இருந்ததாக உயர்நிலை வட்டாரங்களை மேற்கோள் காட்டி குளோப் அண்ட் மெயில் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
தலையீடு இருந்ததாகக் கூறப்படுவது குறித்து பியர் பாலிவ் அல்லது அவரது குழுவினருக்கு எதுவும் தெரிந்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை.
ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெறவுள்ள கனடாவின் பொதுத்தேர்தலுக்கான பரப்புரையின் இரண்டாவது முழு நாளில் இந்தக் குற்றச்சாட்டு ஆதிக்கம் செலுத்தியது.
கனடாவின் தேர்தல்களில் தலையிட்டதாக கடந்த காலங்களில் இந்தியா மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு உள்ளன. இந்திய அரசு அந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வந்துள்ளது.
பாலிவுக்கு உரிய பாதுகாப்பு அனுமதி இல்லாததால் இந்தியா தலையிட்டதாகக் கூறப்படுவது குறித்து அவரிடம் கனடா உளவு ஏஜென்டுகளால் கேட்க முடியவில்லை என திங்கள்கிழமை இரவு, குளோப் அண்ட் மெயில் செய்தி வெளியிட்டது.
தலையிடுவதற்கான இந்தியாவின் முயற்சி அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த அரசியல்வாதிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான பெரும் முயற்சியின் ஓர் அங்கம் என அந்தச் செய்தி தெரிவித்தது.
பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் கனடிய மத்திய கட்சித் தலைவர்களில், பாதுகாப்பு அனுமதியை மறுத்த ஒரே தலைவர் பாலிவ் மட்டும்தான்.
இந்த நடவடிக்கை அரசியலாக்கப்பட்டு விட்டதாகக் கூறிய அவர், "அது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து பொதுவில் வெளிப்படையாகப் பேசுவதைத் தடுத்துவிடும்" என்று செவ்வாய்க் கிழமையன்று தனது முடிவை நியாயப்படுத்தினார்.
"லிபரல் கட்சியினர் என் மீது திணிக்க விரும்பும் ரகசிய காப்பை ஏற்றுக் கொள்வதை நான் செய்யமாட்டேன்," என பாலிவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"நான் இந்த விஷயங்கள் குறித்துப் பேசுவதை அவர்கள் விரும்பவில்லை, எனவே அவர்கள் என்னை ஓர் இருண்ட அறைக்குள் அழைத்துச் சென்று, 'நாங்கள் உனக்குச் சில ரொட்டித் துண்டுகள் போல சில உளவுத் தகவல்களைத் தருகிறோம். ஆனால் அதுபற்றி நீ பேசக்கூடாது' எனச் சொல்கின்றனர்."
தலைமைப் பதவிக்காக 2022ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாலிவ் 68% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தலையீடு முயற்சி இந்த முடிவைப் பாதித்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என கனடாவின் உளவு ஏஜென்டுகள் தெரிவித்ததாக குளோப் அண்ட் மெயில் செய்தி தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தி ரேடியோ கனடாவால் உறுதி செய்யப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டு லிபரல் கட்சித் தலைவர் மார்க் கார்னிக்கு அரசியல் ஆயுதமாக அமைந்தது. பாலிவ் பாதுகாப்பு அனுமதியைப் பெறாததை விமர்சித்த அவர் அது குழப்பக்கூடிய முடிவாக இருப்பதாக செவ்வாய்க் கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"நாளுக்கு நாள், மாதத்திற்கு மாதம், வருடத்திற்கு வருடம் எதிர்க்கட்சித் தலைவர் பாதுகாப்பு அனுமதியைப் பெறத் தவறுவதை முற்றிலும் பொறுப்பற்ற செயலாக நான் பார்க்கிறேன்," என கார்னி தெரிவித்தார்.
கனடாவின் தேர்தல்களில் வெளிநாட்டுத் தலையீடு என்பது அண்மை வருடங்களில் வளர்ந்து வரும் பிரச்னையாக இருக்கிறது. இதுபற்றி விசாரிக்க கடந்த ஆண்டு ஒரு பொது விசாரணை தொடங்கப்பட்டது.
கனடாவின் இரண்டு முந்தைய தேர்தல்களில் சீனாவும், இந்தியாவும் தலையிட முயன்றதாக வெளிநாட்டுத் தலையீடு குறித்த விசாரணை முடிவு செய்தது.
இந்த முயற்சிகள் "இடையூறு ஏற்படுத்துபவையாக" இருந்தாலும், அவை "மிகக் குறைவான தாக்கத்தையே" ஏற்படுத்தியதாக, விசாரணையின் இறுதி அறிக்கை தெரிவித்தது. ஆனால் தவறான தகவல்கள் நாட்டின் ஜனநாயக "இருப்புக்கான அச்சுறுத்தல்" எனவும் அந்த அறிக்கை எச்சரித்திருந்தது.
தற்போது நடைபெற்று வரும் பரப்புரையில் தலையிட சீனா, ரஷ்யா மற்றும் இந்தியாவுடன் தொடர்புடைய ஏஜென்டுகள் முயற்சி செய்வார்கள் என்று கனடா தேர்தல் நேர்மை செயற்குழு எச்சரித்துள்ளது.
கனடாவில் இருக்கும் வெளிநாட்டு சமூகத்தினர் எவ்வாறு வாக்கு செலுத்துகின்றனர் என்பதில் தாக்கத்தை ஏற்படுத்த வெளிநாட்டு ஏஜென்டுகள் செயற்கை நுண்ணறிவு, பினாமிகள் மற்றும் ஆன்லைன் போலி தகவல்கள் போன்றவற்றைப் பயன்படுத்தகூடும் என்று 'The Security and Intelligence Threats to Elections (SITE) task force' எனப்படும் தேர்தலுக்குப் பாதுகாப்பு மற்றும் உளவு அச்சுறுத்தல்கள் செயற்குழு தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக போலியான தகவல்கள் விஷயத்தில் ஃபெடரல் அரசு மேலும் மும்முரமாகச் செயல்படுவதை கனடா மக்கள் பார்க்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.