இஸ்ரேலுடனான போர் தொடங்கியதிலிருந்து காஸாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரை எதிர்த்து மிகப்பெரிய அளவில் நடந்த போரட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். ஹமாஸ் அதிகாரத்தில் இருந்து வெளியேறக் கோரி மக்கள் வீதிகளில் இறங்கினர்.
துப்பாக்கி, தடி போன்றவற்றை ஏந்திக்கொண்டு முகமூடி அணிந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சிலர், போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக கலைத்து, அவர்களில் பலரைத் தாக்கினர்.
ஹமாஸை விமர்சிக்கும் ஆர்வலர்களால் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட வீடியோ பதிவுகளில், செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) அன்று வடக்கு காஸாவில் உள்ள பெய்ட் லாஹியாவின் தெருக்களில் "வெளியேறு, வெளியேறு, ஹமாஸ் வெளியேறு", என்று முழக்கமிட்டுக் கொண்டே இளைஞர்கள் அணிவகுத்துச் சென்றதை காட்டின.
"சந்தேகத்துக்குரிய அரசியல் நோக்கங்களை" முன்னெடுப்பதாகவும், இஸ்ரேல் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை திசை திருப்ப இந்த போராட்டக் குழு முயற்சி செய்து வருவதாகவும் கூறி, ஹமாஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் குழுவின் ஆதரவாளர்கள், இந்த போராட்டங்களின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட்டனர். மேலும், இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களை 'துரோகிகள்' என்று குற்றம் சாட்டினர்.
வடக்கு காஸாவில் நடைபெற்ற இந்த போராட்டங்கள், இஸ்லாமிய ஜிஹாத் போராளிகள் இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்திய மறுநாள் நடைபெற்றன. இதனால் பெய்ட் லாஹியாவின் இந்த தாக்குதல் பெய்ட் லாஹியா நகரின் பெரும்பகுதி மக்களை வெளியேற்ற இஸ்ரேலிய அரசாங்கம் முடிவு செய்தது. இதனால் அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் கோபம் ஏற்பட்டது.
போர் நிறுத்த ஒப்பந்தம் அமலாகிய சுமார் இரண்டு மாதத்துக்குப் பிறகு காஸாவில் ராணுவ தாக்குதல்களை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியுள்ளது. போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான அமெரிக்காவின் புதிய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்ததாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு பதிலளித்த ஹமாஸ், ஜனவரி மாதம் ஒப்புக்கொள்ளப்பட்ட அசல் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் கடைப்பிடிக்க தவறியதாக குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த மார்ச் 18 ஆம் தேதி அன்று வான்வழித் தாக்குதல்களுடன் இஸ்ரேல் மீண்டும் அதன் ராணுவ நடவடிக்கைகளை தொடங்கியதிலிருந்து, நூற்றுக்கணக்கான பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
போராட்டக்காரர்களில் ஒருவரான பெய்ட் லஹியாவைச் சேர்ந்த முகமது தியாப், போரில் தனது வீட்டை இழந்துள்ளார், மேலும் ஒரு வருடத்துக்கு முன்பு இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் தனது சகோதரரையும் இழந்தார்.
"எந்தவொரு நபருக்காகவும், எந்தத் தரப்பினரின் நடவடிக்கைகளுக்காகவும், வெளிநாட்டு நாடுகளின் நலன்களுக்காகவும் நாங்கள் இறக்க மாட்டோம்", என்று அவர் கூறினார்.
"ஹமாஸ் அதிகாரத்தில் இருந்து விலக வேண்டும் மற்றும் துயரத்தில் இருப்பவர்களின் குரலைக் கேட்க வேண்டும், இடிபாடுகளில் இருந்து எழும் குரல் - அதுதான் மிகவும் உண்மையான குரல்."
"ஹமாஸ் ஆட்சி ஒழிக, இஸ்லாமிய சகோதரத்துவ ஆட்சி ஒழிக" என்று போராட்டக்காரர்கள் முழக்கமிடுவதை அந்த நகரத்தில் படம்பிடிக்கப்பட்ட வீடியோ பதிவுகள் காட்டின.
பாலத்தீன தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு, 2007 ஆம் ஆண்டு முதல் ஹமாஸ் காஸாவில் ஒரே ஆட்சியாளராக இருந்து வருகிறது, அதற்கு ஒரு வருடம் முன்புதான் தேர்தலில் தனது போட்டியாளர்களை வன்முறையான முறையில் ஹமாஸ் வெளியேற்றியது.
இஸ்ரேல் – காஸா போர் தொடங்கியதிலிருந்து காஸாவில் ஹமாஸுக்கு எதிரான வெளிப்படையான விமர்சனம் தெருக்களிலும் இணையத்திலும் அதிகரித்துள்ளது. ஆனால், ஹமாஸுக்கு இன்னும் தீவிரமான ஆதரவாளர்கள் இருக்கின்றனர். ஹமாஸுக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்பதை துல்லியமாக அளவிடுவது கடினம்.
போர் தொடங்குவதற்கு முன்பே ஹமாஸுக்கு எதிர்ப்பு இருந்து வந்தது, ஆனால் பழிவாங்கும் பயத்தின் காரணமாக அவர்கள் வெளிப்படையாக எதிர்வினை ஆற்றாமல் அமைதியாக இருந்தனர்.
காஸாவைச் சேர்ந்த முகமது அல்-நஜ்ஜார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "மன்னிக்கவும், ஆனால் ஹமாஸ் உண்மையில் எதை நம்பி இருக்கிறது? அவர்கள் மக்களின் உயிர்களை நம்பி அதன் மீது பந்தயம் கட்டுகிறார்கள்", என்று பதிவிட்டுள்ளார்.
"ஹமாஸ் கூட எங்களை வெறும் உயிர்களாகத்தான் எண்ணுகிறது. ஹமாஸ் அதிகாரத்தை விட்டு விலக வேண்டும். எங்கள் காயங்களுக்கு நாங்களே மருந்து போட்டுக்கொள்கிறோம்", என்று கூறினார்.
ஹமாஸ் அதிகாரி டாக்டர் பாசெம் நைம் பிபிசியிடம் பேசுகையில், மக்களுக்கு "வலிமிகுந்த நிலையில் கதறி அழ உரிமை உண்டு" என்று கூறினார். ஆனால் அவர் போராட்டக்காரர்கள் "சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள்" மேற்கொள்வது போல இருப்பதாக குற்றம் சாட்டினார், மேலும் ஏன் காஸாவின் மேற்குக் கரையில் போராட்டங்கள் நடைபெறவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
காஸாவில் உள்ள மனிதாபிமான சூழ்நிலையை இஸ்ரேல் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை திசை திருப்ப பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறினார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி அன்று ஹமாஸ் இஸ்ரேலை தாக்கியதான் மூலம் இஸ்ரேல்-ஸா போர் தொடங்கியது. இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் ஆவர். மற்றும் 251 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக, ஹமாஸை அழிப்பதற்காக இஸ்ரேல் காஸாவில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. இதில் 50,000-க்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காஸாவின் 21 லட்சம் மக்கள் தொகையில் பெரும்பாலானோர் இடம்பெயர்ந்தனர், அவர்களில் பலர் பல முறை இடம்பெயர்ந்தனர்.
காஸாவில் சுமார் 70% கட்டடங்கள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன. சுகாதாரப் பாதுகாப்பு, தண்ணீர் வசதிகள் மற்றும் சுகாதார அமைப்புகள் சீர்குலைந்தன. மேலும் உணவு, எரிபொருள், மருந்து மற்றும் தங்குமிடங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு