தன்னுடைய மகள் இந்திராவுக்கு ஃபெரோஸ் பொருத்தமான மாப்பிள்ளை இல்லை என ஜவஹர்லால் நேரு கருதினார். ஃபெரோஸ் இந்துவோ அல்லது காஷ்மீரியோ அல்ல, ஆனால் இது நேருவுக்கு பிரச்னை அல்ல. ஏனெனில், அவருடைய உடன்பிறந்த சகோதரிகளான விஜயலட்சுமி மற்றும் கிருஷ்ணாவின் கணவர்களும் காஷ்மீரிகள் அல்ல.
தன் சகோதரிகளின் திருமணங்களுக்கு நேரு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், அவர்களின் கணவர்கள் ஆக்ஸ்ஃபோர்டில் படித்தவர்கள், பணக்கார குடும்பங்களை சேர்ந்தவர்கள். விஜயலட்சுமியின் கணவர் ரஞ்சித் பண்டிட் ஒரு வழக்கறிஞர் (பாரிஸ்டர்) மற்றும் சமஸ்கிருதத்தில் புலமை பெற்றவர்.
மற்றொருபுறம், ஃபெரோஸ் காந்தி மிகவும் எளிய பின்புலத்தில் இருந்து வந்தவர். அவர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறவும் இல்லை, வேலையும் இல்லை அல்லது வருமானத்துக்கான எந்த ஆதாரமும் இல்லை.
இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று புத்தகமான 'இந்திரா, தி லைஃப் ஆஃப் இந்திரா நேரு காந்தி'-யை எழுதியவரான காத்தரீன் ஃபிராங்க், "ஃபெரோஸ் சத்தமாக பேசுபவர், மற்றவர்களை மரியாதை குறைவாக நடத்துபவர் மற்றும் வெளிப்படையாக பேசும் ஒரு நபர் ஆவார். அதற்கு மாறாக, நேரு மிகவும் நாகரீகமாகவும் திட்டமிட்டும் பேசக்கூடியவர், அறிவார்ந்தவர்." என குறிப்பிட்டுள்ளார்.
"மற்ற தந்தைகளை போலவே தன் மகளை இழக்க நேருவும் விரும்பவில்லை. இந்திராவின் மோசமான உடல்நிலையும் ஒரு பிரச்னையாக இருந்தது. தன்னுடைய மரண படுக்கையில் இந்திரா-ஃபெரோஸ் திருமணம் குறித்து ஆழ்ந்த சந்தேகங்களை வெளிப்படுத்தியிருந்தார் நேருவின் மனைவி கமலா. கமலாவின் பார்வையில், ஃபெரோஸ் நம்பத்தகுந்த நபர் அல்ல." என கேத்தரீன் குறிப்பிட்டுள்ளார்.
ஃபெரோஸை திருமணம் செய்வது குறித்த தன் விருப்பத்தை அத்தை கிருஷ்ணாவிடம் இந்திரா தெரிவித்தபோது, சிறிது காத்திருக்குமாறும் வேறு சில வரன்களை பார்க்குமாறும் அறிவுறுத்தினார்.
கிருஷ்ணா ஹத்தீசிங் தன் 'வீ நேருஸ்' புத்தகத்தில், "அப்போது இந்திரா கோபப்பட்டு, 'ஏன்? ராஜா பாயை திருமணம் செய்ய நீங்கள் பத்து நாட்களில் முடிவெடுத்தீர்கள். ஃபெரோஸை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். நான் ஏன் காத்திருக்க வேண்டும், மற்ற வரன்களை நான் ஏன் பார்க்க வேண்டும்?" என கூறியதாக குறிப்பிடுகிறார்.
இந்திரா இதுகுறித்து தன்னுடைய மற்றொரு அத்தை விஜயலட்சுமியிடம் தெரிவித்தபோது, அவருடைய போக்கும் இந்திராவுக்கு ஆதரவாக இல்லை.
இந்திராவின் வாழ்க்கை வரலாற்று நூலில் பூபுல் ஜெயாகர், "ஃபெரோஸுடன் காதல் கொள்ளுமாறும் ஆனால், அவருடன் திருமணம் குறித்து சிந்திக்க வேண்டாம் என்றும் விஜயலட்சுமி மிகவும் அப்பட்டமாகக் கூறினார். விஜயலட்சுமியின் இந்த அறிவுரை, தனக்கும் ஃபெரோஸுக்கும் ஏற்பட்ட அவமானமாக இந்திரா கருதினார்." என கூறுகிறார்.
நேரு குடும்பத்துக்குள்ளே இந்த விவாதம் தொடர்ந்து வரும் வேளையில், அலகாபாத்திலிருந்து வெளிவரும் 'தி லீடர்' எனும் செய்தித்தாள், 'மிஸ் இந்திரா நேருஸ் எங்கேஜ்மெண்ட்' எனும் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது. இந்த செய்தி வெளியான போது, நேரு கொல்கத்தாவில் இருந்தார். அவர் மீண்டும் திரும்பியதும் வெளியிட்ட அறிக்கை, 'பாம்பே கிரானிக்கிள்' மற்றும் மற்ற செய்தித்தாள்களில் வெளியானது.
நேரு அந்த அறிக்கையில், "இந்திரா மற்றும் ஃபெரோஸின் திருமணம் குறித்து வெளியான செய்தியை நான் உறுதிப்படுத்துகிறேன். திருமணம் குறித்து பெற்றோர்கள் அறிவுரைதான் கூற முடியும், ஆனால் இறுதி முடிவை அந்த ஆணும் பெண்ணும்தான் எடுக்க வேண்டும் என்பதை எப்போதும் நம்புபவன் நான். இந்திரா மற்றும் ஃபெரோஸின் திருமண முடிவு குறித்து நான் அறிந்தபோது, அதை நான் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டேன். அவர்கள் இருவருக்கும் மகாத்மா காந்தி ஆசீர்வாதங்களை வழங்கியுள்ளார். ஃபெரோஸ் காந்தி ஒரு பார்சி இளைஞர், எங்கள் குடும்பத்துக்கு பல ஆண்டுகளாக நண்பராக உடனிருந்துள்ளார்." என தெரிவித்தார்.
'ஹரிஜன்' எனும் தன்னுடைய பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதி, தன் ஆதரவை வழங்கினார் காந்தி. காந்தியின் ஆதரவு இருந்தபோதும், இந்த திருமணம் குறித்த கோபம் தணியவில்லை.
இந்தியாவின் நூற்றாண்டு கால பண்பாட்டை இந்த திருமணம் புண்படுத்துவதாக சிலர் கருதினர். முதலில், இந்த திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது அல்ல, இரண்டாவது, இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள்.
அலகாபாத்தில் உள்ள நேருவின் இல்லமான ஆனந்த் பவனுக்கு இத்திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான தந்திகள் குவிந்தன. இந்த திருமணம் குறித்து அனைத்து ஊடகங்களிலும் விவாதிக்கப்பட்டது.
பல ஆண்டுகள் கழித்து அர்னால்ட் மைக்கேல்ஸுக்கு அளித்த நேர்காணலில், "ஒட்டுமொத்த இந்தியாவும் எங்கள் திருமணத்துக்கு எதிராக இருந்தது போன்று இருந்தது," என நினைவுகூர்ந்தார் இந்திரா.
பண்டிதர்களை ஆலோசித்துவிட்டு, மார்ச் 26 ஆம் தேதிதான் திருமணம் என தீர்மானிக்கப்பட்டது. அன்று ராமநவமி என்பதால் மங்களகரமான நாளாக கருதப்பட்டது.
கிருஷ்ணா ஹத்தீசிங் எழுதுகையில், "சரியாக 9 மணிக்கு மணப்பெண் தன்னுடைய அறையில் இருந்து வெளியே வந்தார். சிறையில் தன் தந்தை கைகளால் சுற்றப்பட்ட ராட்டையால் நூற்கப்பட்ட நூலினால் ஆன இளஞ்சிவப்பு நிற புடவையை இந்திரா அணிந்திருந்தார். அதன் பார்டர் வெள்ளி நிறத்தில் இருந்தது. மலர்களால் ஆன மாலை சூடியிருந்தார், வளையல்கள் அணிந்திருந்தார். கிரேக்க நாணயத்தில் பொறிக்கப்பட்டிருந்த அழகிய உருவமாக அவர் முகம் இருந்தது." என குறிப்பிடுகிறார்.
ஃபெரோஸ் பாரம்பரியமான கைத்தறி ஷெர்வானி மற்றும் பைஜாமாவை அணிந்திருந்தார்.
ஆனந்த் பவனுக்கு வெளியே இருந்த தோட்டத்தில் திருமணம் நடைபெற்றது. ஃபெரோஸ் மற்றும் இந்திரா அக்னிக்கு முன்பு அமர்ந்திருந்தனர். நேருவுக்கு அடுத்ததாக கமலா நேருவின் நினைவாக ஒரு இருக்கை காலியாக விடப்பட்டிருந்தது.
வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் நாற்காலிகளிலும் தரையில் விரிக்கப்பட்டிருந்த பாய்களிலும் அமர்ந்திருந்தனர். ஆனந்த் பவனுக்கு வெளியே நின்று திருமணத்துக்கு அழைக்கப்படாத ஆயிரக்கணக்கானோர் இந்த காட்சியை பார்த்துக்கொண்டிருந்தனர்.
அந்த கூட்டத்தில் அமெரிக்க ஃபேஷன் இதழின் புகைப்பட கலைஞரான நோர்வான் ஹென் இருந்தார். அந்த சமயத்தில் அவர் உள்ளூரில் உள்ள எவிங் கிறிஸ்துவ கல்லூரியில் கற்பித்துக் கொண்டிருந்தார். அவர், இந்திராவின் திருமணத்தை தன்னுடைய 8 எம்எம் கேமராவில் படம்பிடிக்க காத்திருந்தார்.
கேத்தரீன் எழுதுகையில், "இந்திரா மற்றும் ஃபெரோஸின் திருமணம் பாரம்பரிய முறையிலும் நடக்கவில்லை, சட்ட ரீதியாகவும் நடக்கவில்லை. அந்த சமயத்தில் இருந்த பிரிட்டிஷ் சட்டத்தின்படி, இரு வெவ்வேறு மதங்களை சேர்ந்த நபர்கள் திருமணம் செய்துகொள்ளும்போது, அந்த மதங்களைவிட்டு துறந்தால் மட்டுமே திருமணம் செய்துகொள்ள முடியும். இதற்கு ஏழு ஆண்டுகள் கழித்து இந்திராவின் உறவினர் பிகே நேருவவும் இதேபோன்று ஹங்கேரியை சேர்ந்த யூத பெண்மணி ஃபோரியை திருமணம் செய்துகொண்டார்." என குறிப்பிடுகிறார்.
பிகே நேருவின் திருமணத்தின் போதும் காந்தியின் அறிவுரை கேட்கப்பட்டது. அதன்படி, அவர்களின் திருமணம் இந்து மத சடங்குகளின் படி நடைபெற்றது, ஆனால், இந்து சட்டம் அல்லது பிரிட்டிஷ் சட்டத்தின்படி அவர்களின் திருமணம் அங்கீகரிக்கப்படவில்லை.
பல ஆண்டுகள் கழித்து இந்திராவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய உமா வாசுதேவ் இந்திராவிடம் இதுகுறித்து கேள்வியெழுப்பினார். அதற்கு, "இந்த திருமணம் சட்டபூர்வமானதா அல்லது சட்ட விரோதமானதா என்பது எனக்கு ஒரு விஷயமல்ல," என பதிலளித்தார் இந்திரா.
திருமணம் இரண்டு மணிநேரத்தில் நடைபெற்று முடிந்தது. அச்சமயத்தில், மதகுரு அக்னியின் மீது வெள்ளி கரண்டியால் நெய்யை வார்த்தார். முதலில் வராண்டாவில் இந்திரா ஜவஹர்லால் நேரு அருகே அமர்ந்தார். அதன்பின், அவர் ஃபெரோஸ் காந்தியின் அருகே சென்று அமர்ந்தார்.
ஃபெரோஸ் இந்திராவுக்கு சில ஆடைகளை அன்பளிப்பாக வழங்கினார். இந்திரா ஃபெரோஸுக்கு தன் கையால் உணவூட்டினார்.
இந்திராவின் அத்தை மகளான நயன்தாரா செகல் தன்னுடைய 'ப்ரிசன் அண்ட் சாக்கலேட் கேக்' எனும் புத்தகத்தில், "இதன்பின், அவர்கள் இருவரின் கைகளும் மலர்களால் இணைக்கப்பட்டது. பண்டிதர் அக்னியில் நெய் ஊற்றி தீயை அதிகப்படுத்தினார். அதன்பின், இந்திரா மற்றும் ஃபெரோஸ் எழுந்து, ஹோமத்தை சுற்றி ஏழுமுறை வலம் வந்து, சப்தபடி எனும் சடங்கை நிறைவு செய்தனர். அதன்பின், அங்கிருந்தவர்கள் மலர் இதழ்களை ஆசீர்வதித்து தூவினர்," என எழுதுகிறார்.
பெர்டில் ஃபால்க், தன்னுடைய 'ஃபெரோஸ் தி ஃபர்காட்டன் காந்தி' எனும் புத்தகத்தில், "ஃபெரோஸ் திருமண உடைகளை அணிந்தபோது அவருடைய தாயார் ரட்டிமய் காந்தி பார்சி புனித நூலை அணிந்துகொள்ளுமாறு குறிப்பாக கூறினார்." என எழுதியுள்ளார்.
"பார்சி சமூகத்தை சேர்ந்த பலர் இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர். அவர்களுள் இந்த திருமணத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த ஆனந்த் பவனுக்கு வெளியே இருந்தவர்களும் அடங்குவர். ஆனால் ஜவஹர்லால் நேரு ஃபெரோஸ் காந்தியின் தாயாரிடம் அவ்வாறு செய்ய வேண்டாம் என அவர்களிடம் கூறுமாறு தெரிவித்தார்."
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை ஆசிரியர் ராமாராவும் திருமணத்தில் கலந்துகொண்டார். தனது பத்திரிகையில் இத்திருமணம் குறித்து எழுதுவதற்காக, தன் கையில் ஒரு பென்சில் மற்றும் நோட்டுடன் அவர் வந்திருந்தார்.
மாலையில் ஆனந்த் பவனின் தோட்டத்தில் ரொட்டி மற்றும் காய்கறிகளுடன் எளிமையான உணவு பரிமாறப்பட்டது. சரோஜினி நாயுடு அவருடைய மகள் பத்மஜா நாயுடு மற்றும் பிரபல விஞ்ஞானி மேரி கியூரியின் மகள் ஈவ் கியூரியும் திருமணத்தில் கலந்துகொண்டனர்.
பூபுல் ஜெயகுமார், "வழக்கமாக இந்திய திருமணங்களில் தங்கள் வீட்டை விட்டு செல்லும்போது பெண்கள் அழுவார்கள். ஆனால், இந்திரா காந்தி சிறிதும் அழவில்லை. ஜவஹர்லால் நேருவின் கண்கள் நிச்சயம் கசிந்திருந்தது. முக்கிய தலைவர்கள் பலரால் இத்திருமணத்துக்கு வர முடியவில்லை. பிரிட்டனிலிருந்து வந்திருந்த சர் ஸ்டாஃபோர்ட்-ஐ சந்திக்க மார்ச் 26 ஆம் தேதி அன்று காந்தி டெல்லி சென்றிருந்ததால் அவராலும் கலந்துகொள்ள முடியவில்லை. கிரிப் திருமண நாளன்று இல்லாவிட்டாலும் அலகாபாத் வந்தபின்னர் புதுமண தம்பதிகளை நேரில் சென்று வாழ்த்தினார்," என எழுதியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மௌலானா ஆசாத்தின் ரயில் தாமதமானதால், அவராலும் பங்கேற்கவில்லை. ஆனால், அன்று மாலை நடைபெற்ற விருந்தில் அவர் பங்கேற்றார்.
இந்திராவின் திருமணம் அன்றும் அரசியல் நிகழ்வுகள் நடக்காமல் இல்லை. விருந்துக்கு சிறிது நேரத்துக்கு முன்பு, கிரிப்ஸ் திட்டம் குறித்து தங்கள் நிலைப்பாட்டை முடிவு செய்ய காங்கிரஸ் தலைமையுடன் ஆனந்த் பவனில் ஓர் அறையில் கூட்டம் நடந்தது.
இரண்டு நாட்கள் கழித்து, ஜவஹர்லால் நேரு உட்பட டாக்டர் ராஜேந்திர பிரசாத், ஆச்சார்யா கிருபலானி, பூலாபாய் தேசாய் மற்றும் சையது முகமது ஆகிய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அலகாபாத்திலிருந்து டெல்லி சென்றார்.
திருமணம் முடிந்த உடனேயே இந்திராவும் ஃபெரோஸும் எண்: 5, ஃபோர்ட் சாலையில் வாடகை வீட்டில் குடிபுகுந்தனர். அந்த சமயத்தில், ஃபெரோஸுக்கு வேலை இல்லை, ஆனால் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதுவதன் மூலம் சிறிது பணம் சம்பாதித்தார்.
சில காப்பீடுகளை விற்றதன் மூலம், அவருக்கு கூடுதல் வருமானம் கிடைத்தது. திருமணத்துக்கு இரண்டு நாட்கள் கழித்து ஃபெரோஸின் தாய், ஜார்ஜ்டவுனில் உள்ள தன்னுடைய வீட்டில் தேநீர் விருந்து அளித்தார், இதில் அலகாபாத்தின் மேட்டுக்குடி மக்கள் கலந்துகொண்டனர்.
இரு மாதங்களுக்கு பின், இந்திராவும் ஃபெரோஸும் காஷ்மீருக்கு தேன்நிலவுக்காக சென்றனர்.
அங்கிருந்து இந்திரா நேருவுக்கு தந்தி அனுப்பினார்.
'இங்கிருந்து உங்களுக்கு கொஞ்சம் குளிர்ச்சியான காற்றை அனுப்ப முடிந்தால் நன்றாக இருக்கும்!'
உடனடியாக வந்த நேருவின் பதிலில், 'நன்றி, ஆனால் உங்களிடம் அங்கு மாம்பழங்கள் இல்லை!' என அவர் குறிப்பிட்டிருந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு