அதிர்ச்சி... உதகை அருகே புலி தாக்கி இளைஞர் உயிரிழப்பு!
Dinamaalai March 27, 2025 09:48 PM

நீலகிரி மாவட்டம் உதகை அருகே புலி தாக்கி இளைஞர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உதகை அருகேயுள்ள கள்ளக்கோடு மந்து வனப்பகுதியில் புலி தாக்கி தோடர் இன இளைஞர் உயிரிழந்தார்.உடலை மீட்டு காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த கவர்னர் சோலை பகுதியில் தோடர் இன மக்கள் வசிக்கும் கள்ளக்கோடு மந்து உள்ளது. இந்த மந்து பகுதியை சேர்ந்த கேந்தர் குட்டன் (42) என்பவர் நேற்று மாலை அருகிலுள்ள கள்ளக்கோடு மந்து வனப்பகுதியில் விறகு சேகரிப்பதற்காக சென்றுள்ளார். இரவு முழுவதும் கேந்தர் குட்டன் வீடு திரும்பாததால், அவரது உறவினர்கள் அருகில் உள்ள வனப்பகுதியில் தேடியுள்ளனர்.

அப்போது கேந்தர் குட்டன் புலி தாக்கி பாதி உடலுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக வனத்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து வந்த மாவட்ட வன அலுவலர் கவுதம் தலைமையில் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பழங்குடியின இளைஞர் புலி தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆரக்காடு பகுதியில் பெண்ணை வனவிலங்கு தாக்கி கொன்ற நிலையில் தற்போது தோடரின இளைஞர் புலி தாக்கி உயிரிழந்தது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.