பிரிட்டனில் செயல்படும் ரஷ்ய உளவு நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக இருந்த இரண்டு பெண்களின் பெயர்கள் பிபிசி நடத்திய புலனாய்வில் முதல் முறையாக வெளிவந்துள்ளன.
பல்கேரியா நாட்டைச் சேர்ந்த குவெடெலினா ஜென்சேவா, ஸ்வேதன்கா டோன்சேவா ஆகியோர் உளவு நெட்வொர்க்கின் மூலம் மக்களைக் கண்காணித்து தகவல்களைச் சேகரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
இதுகுறித்து அவர்களுடைய கருத்துகளைக் கேட்க இந்த இரண்டு பெண்களை பிபிசி அணுகியபோது, அவர்களிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை.
குவெடெலினா ஜென்சேவா ஒரு விமான நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரை செல்போன் மூலம் பிபிசி தொடர்புகொள்ள முயன்றபோது அவர் அழைப்பிற்குப் பதிலளிக்கவில்லை. பின்னர் அவரை கடிதம் மூலம் தொடர்புகொள்ள முயன்றபோது, இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று மட்டும் கூறினார்.
ஆஸ்திரியாவின் வியன்னாவில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று ஸ்வேதன்கா டோன்சேவாவை தொடர்புகொள்ள முயன்றபோது, தான் ஸ்வேதன்கா டோன்சேவாவே இல்லை என்று கூறிவிட்டு அவர் சென்றார்.
உளவு நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக இருந்ததாக இந்த இருவருடன் சேர்த்து பல்கேரியாவை சேர்ந்த மேலும் ஆறு நபர்கள் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டு லண்டனில் தண்டனை வழங்கப்பட உள்ளது.
இந்த உளவு நெட்வொர்க் "மிகவும் அதிநவீனமானது" என்றும் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் காவல்துறையினர் விவரித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர், தாங்கள் ரஷ்யாவுக்காக வேலை செய்வதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
அதே நேரத்தில், மார்ச் மாதம் பிரிட்டனின் மத்திய குற்றவியல் நீதிமன்றமான ஓல்ட் பெய்லி நடத்திய விசாரணையில், மேலும் 3 பேர் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டனர்.
இந்த உளவு நெட்வொர்க் ஆஸ்திரியாவை சேர்ந்த ஜான் மார்சலெக் என்பவரால் வெளிநாட்டில் இருந்து இயக்கப்பட்டது. ஜான் மார்சலெக் ஜெர்மனியில் வணிக நிர்வாகியாகப் பணிபுரிந்து வந்தார். பின்னர் ரஷ்யா அவரை உளவு பார்க்கத் தயார் செய்தது.
ரஷ்ய உளவாளிகளைப் பற்றி செய்திகள் சேகரித்த பத்திரிகையாளர்களையும் இந்த நெட்வொர்க் குறிவைத்தது.
அதில் ஒரு பத்திரிக்கையாளரான ரோமன் டோப்ரோகோடோவ் என்பவர் இந்த நெட்வொர்க்கின் பின்னால் ரஷ்யா அதிபர் விளாதிமிர் புதின் இருப்பதாக பிபிசியிடம் கூறினார். ஐரோப்பாவில் இந்த உளவு அமைப்பின் பகுதியாகச் செயல்பட்ட இரண்டு மர்மமான பெண்களை நீதிமன்றம் விசாரித்தது.
இந்த இரண்டு பெண்களையும், ஆன்லைனில் கிடைக்கும் தகவல்களைப் பயன்படுத்தி புலனாய்வு செய்து பிபிசி அடையாளம் கண்டது.
பல்கேரியாவின் தலைநகரான சோபியாவில் வசித்து வருபவர் குவெடெலினா ஜென்சேவா. விமானப் போக்குவரத்துத் துறையில் பணிபுரிந்த அவர் தனது வேலையைப் பயன்படுத்தி, இந்த உளவு அமைப்பால் குறிவைக்கப்பட்ட நபர்களின் தனிப்பட்ட விமான விவரங்களைப் பெற்றார்.
இந்தத் தகவல்களைப் பயன்படுத்தி, தாங்கள் குறிவைக்கும் நபர்களை விமானங்களில் பின்தொடர்ந்த உளவாளிகள், அவர்கள் முன்பதிவு செய்திருந்த இருக்கைகளுக்கு அருகே இவர்களும் இருக்கைகளைப் பதிவு செய்துகொள்வார்கள். அடுத்த இருக்கையில் அமர்ந்துகொண்டு, இந்த உளவாளிகள் குறிவைத்த மக்கள் அவர்களது செல்போனில் தட்டச்சு செய்யும் செய்திகளைக்கூட படிப்பார்கள்.
ஒருமுறை பத்திரிக்கையாளர் ரோமன் டோப்ரோகோடோவின் செல்போன் பாஸ்வேர்டை கூட இந்த உளவாளிகள் கண்டுபிடித்தனர்.
பத்திரிக்கையாளர் ரோமன் டோப்ரோகோடோவை உளவு பார்க்க ஜெர்மனி நாட்டில் உள்ள பெர்லினுக்கு அனுப்பப்பட்ட குழுவின் ஒரு பகுதியாக குவெடெலினா ஜென்சேவா இருந்தார். லண்டனில் தண்டனை பெற்ற மூன்று உளவாளிகளை உள்ளடக்கிய ஒரு குறுஞ்செய்தி குழுவின் ஒரு பகுதியாக அவர் இருந்தார். ஆர்லின் ருசேவ், பைசர் ஜம்பாசோவ், கேட்ரின் இவனோவா ஆகிய மூவர்தான் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பத்திரிகையாளர் கிறிஸ்டோ குரோசேவின் விமான விவரங்களை குவெடெலினா ஜென்சேவா உளவாளிகளிடம் பகிர்ந்து கொண்டார். மேலும் ரஷ்யாவை சேர்ந்த கிரில் கச்சூரின் பயணங்கள் குறித்த கூடுதல் தகவல்களைச் சேகரிக்கும் பணியிலும் அவர் ஈடுபட்டார்.
குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது, இந்த மர்மமான விமான ஊழியர் "ஸ்வெட்கா" அல்லது "ஸ்வெட்டி" என்று அழைக்கப்பட்டார்.
ஜென்சேவாவை அவரது சமூக ஊடக சுயவிவரங்களில் இருந்து பிபிசி அடையாளம் கண்டது. ஃபேஸ்புக்கில், அவர் காட்ரின் இவனோவா, பிசர் சாம்பசோவ் ஆகியோருடன் தொடர்பில் இருந்தார். பின்னர் அவர் ஒரு விமானப் பணியாளர் என்பது கண்டறியப்பட்டது.
அவரது லிங்க்ட்-இன் சமூக ஊடக பக்கத்தின்படி, அவர் பயண நிறுவனங்களில் டிக்கெட் விற்பனைப் பிரிவில் பணிபுரிகிறார் என்று தெரிய வந்தது. பல்கேரிய நிறுவனம் தாக்கல் செய்த விவரங்களின்படி அவர் சர்வதேச விமானப் போக்குவரத்து ஆலோசனை நிறுவனத்தின் ஒரே உரிமையாளர் என்று தெரிய வந்தது.
உளவு அமைப்பின் தலைவர் ருசேவ் வைத்திருந்த ஹார்ட் டிரைவில் காணப்படும் பயணத் தரவுகளின் ஸ்கிரீன் ஷாட்கள் 'அமேடியஸ்' என்ற விமானத் துறை மென்பொருளில் இருந்து எடுக்கப்பட்டவை.
அவரது லிங்க்ட்-இன் பக்கத்தில், குவெடெலினா ஜென்சேவா இந்த மென்பொருளில் அவர் அதிகம் புலமை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடப்பட்டிருந்தது.
குவெடெலினா ஜென்சேவாவை பிபிசி அடையாளம் கண்ட பிறகு, உளவு நெட்வொர்க் உடனான அவரது தொடர்பு பல்கேரிய பாதுகாப்பு சேவைக்குத் தெரியும் என்று பிபிசி ஆதாரத்துடன் உறுதிபடுத்தியது.
ஆனால் அவர் மீது எந்தக் குற்றமும் சுமத்தப்படவில்லை.
பல்கேரியாவில் ரியல் எஸ்டேட் வேலைகளுக்காக அவர் பயன்படுத்தும் செல்போன் எண் மூலம் குவெடெலினா ஜென்சேவாவை தொடர்புகொள்ள பிபிசி முயன்றது.
பிபிசியில் இருந்து பேசுகிறோம், இந்த செல்போன் அழைப்பு ரெக்கார்ட் செய்யப்பட்டு வருகிறது என்று அழைப்பை எடுத்தவுடன் அவரிடம் கூறப்பட்ட பிறகு, அவர் இணைப்பைத் துண்டித்துவிட்டார்.
தனக்கு எதிரான ஆதாரங்களை நிறுவும் கடிதத்திற்குப் பதிலளித்த அவர், "இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை" என்றும் "தனது பெயரைப் பயன்படுத்துவதில் அவருக்குச் சம்மதம் இல்லை" என்றும் தெரிவித்தார்.
அவரது பதில் பல்கேரிய மொழியில் இருந்தது, தன்னால் சரியாக ஆங்கிலம் பேச முடியாது என்றும் அவர் கூறினார். இருப்பினும் அவரது லிங்க்ட்-இன் பக்கத்தில், அவர் ஆங்கில மொழியில் புலமை பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் பட்டப் படிப்பு வரை ஆங்கில மொழியில் படித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வியன்னாவில் புலனாய்வுப் பத்திரிகையாளர் கிறிஸ்டோ க்ரோசெவ் வசித்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கு எதிரே இருந்த அறையை ஸ்வேதன்கா டோன்சேவா வாடகைக்கு எடுத்து அவரது வீட்டை கேமரா மூலம் படம் பிடித்தார்.
யுக்ரேனை எதிர்த்து பிரசாரம் நடத்துவதற்காக அவருக்குப் பணம் வழங்கப்பட்டது. அதில் வியன்னாவில் உள்ள சோவியத் போர் நினைவுச் சின்னம் உள்ளிட்ட இடங்களில் ஸ்டிக்கர்களை ஒட்டுவது, யுக்ரேன் ஆதரவாளர்களை புதிய- நாஜிக்கள் (neo-Nazis) போலச் சித்தரிப்பது உள்ளிட்டவை அடங்கும்.
குற்றவியல் நீதிமன்றம் நடத்திய வழக்கு விசாரணையில், இந்த உளவு நெட்வொர்க்குடன் பணிபுரிந்த "ஸ்வேட்டி" பற்றிக் கேள்விப்பட்ட பிறகு, பிபிசி தனது சமூக ஊடக கணக்குகளின் மூலம் ஸ்வேதன்கா டோன்சேவாவை அடையாளம் கண்டது. பின்னர் ஆஸ்திரியாவில் உள்ள வட்டாரங்கள் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தின.
வியன்னாவில், அவர் பிரிட்டன் உளவு வழக்கில் தண்டனை பெற்ற வான்யா கபோரோவா, பைசர் ஜம்பாசோவ், கேத்ரின் இவனோவா என குறைந்தது மூன்று குற்றவாளிகளைச் சந்தித்தார்.
ரகசிய சேவைத் தலைவர் ஒமர் ஹைஜாவி-பிர்ச்னர் உள்பட மூத்த ஆஸ்திரிய அதிகாரிகள், ரஷ்ய உளவு பார்ப்பு குறித்து எழுதியுள்ள ஆஸ்திரிய புலனாய்வுப் பத்திரிகையாளர் அன்னா டால்ஹாமர் ஆகியோர் ஸ்வேதன்கா டோன்சேவா கண்காணிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் அடங்குவர்.
பணிக்குச் செல்லாமல் இருந்த ஸ்வேதன்கா டோன்சேவாவை டிசம்பரில் ஆஸ்திரியா காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆஸ்திரிய இதழ்களான ப்ரொஃபைல் மற்றும் ஃபோல்டர் முதலில் நீதிமன்ற ஆவணங்களைப் பற்றிச் செய்தி வெளியிட்டன, பின்னர் அவை பிபிசியால் சரிபார்க்கப்பட்டன. "ஆஸ்திரியாவுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ரகசிய உளவுத் துறை குற்றம் செய்ததாக அவர் மீது கடுமையான சந்தேகம் இருப்பதாக" அதில் தெரிய வந்தது.
தண்டனைக்காகக் காத்திருக்கும் பல்கேரியாவை சேர்ந்த ஆறு நபர்களுள் இருவரான வான்யா கோபெரோவாவின் உத்தரவின் பேரில்தான் அவர் உளவு பார்த்ததாக ஸ்வேதன்கா டோன்சேவா விசாரணையின்போது கூறினார். வான்யா, ஸ்வேதன்கா டோன்சேவாவின் நீண்டகாலத் தோழி ஆவார்.
வான்யா கோபெரோவா தனக்கு முகவரிகள் மற்றும் புகைப்படங்களின் பட்டியலை வழங்கியதாகவும் டோன்சேவா தெரிவித்தார். முதலில், மற்றவர்கள் தன்னைத் தவறாக வழிநடத்தியதாக டோன்சேவா காவல்துறையிடம் கூறினார். அவர்கள் முதலில் "மாணவர் திட்டம்" நடத்துவதாகவும், பின்னர் இன்டர்போலில் பணிபுரிவதாகவும் டோன்சேவா கூறினார்.
ஆஸ்திரிய புலனாய்வாளர்கள் ஸ்வேதன்கா டொன்செவா "சந்தேகத்திற்குரிய கதைகளை" நம்பியதை "புரிந்துகொள்ள முடியாத ஒன்று" என்று பதிவு செய்துள்ளனர்.
ஸ்வேதன்கா டொன்செவா பணியாற்றிய உளவு நெட்வொர்க் ரஷ்யாவின் உளவு அமைப்புகளுக்காக மாஸ்கோவில் இருந்து ஜான் மார்சலெக் என்பவரால் இயக்கப்பட்டு வந்ததாக ஆவணங்கள் கூறுகின்றன.
மேலும் விசாரணையில் கிடைத்த ஆதாரங்களின்படி, மார்சலேக், பிரிட்டன் பிரிவின் தலைவர் ஆர்லின் ரூசேவ் ஆகியோரால் ஸ்வேதன்கா டொன்செவா வேலைக்கு அமர்த்தப்பட்டார் என்பதைக் காட்டுகின்றன.
பத்திரிக்கையாளர் அன்னா தல்ஹாமரை, ஜான் மார்சலெக் குறிவைத்ததாக ஆவணங்கள் கூறுகின்றன. அன்னா தல்ஹாமரை புகைப்படம் எடுத்ததாகவும், அவரது அலுவலகத்தை புகைப்படம் எடுத்ததாகவும், பின்னர் அருகிலுள்ள உணவகத்தில் இருந்து அவரைக் கண்காணித்து வந்ததாகவும் ஸ்வேதன்கா டொன்செவா காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டார்.
ஆஸ்திரிய இதழான ப்ரொஃபைலின் ஆசிரியராகத் தற்போது பணிபுரியும் அன்னா தல்ஹாமர் இதுகுறித்து பிபிசியிடம் கூறுகையில், கடந்த ஆண்டு அவர் உளவு பார்க்கப்படுவதாக முதலில் காவல்துறை அவருக்குத் தெரிவித்தனர். மேலும் சிறிது காலமாக அவர் கண்காணிப்பில் இருந்ததைத் தற்போது அவர் அறிந்ததாகக் கூறினார்.
அந்தப் பெண் 'உயர் பதவியில்' இருந்த பலரை உளவு பார்த்ததாகவும் அவர் கூறினார்.
பத்திரிக்கையாளர் அன்னா தல்ஹாமர் வேறு எங்கெல்லாம் கண்காணிக்கப்பட்டார் என்று தெரியவில்லை, ஆனால் அவரது சில ஆதாரங்கள் அடையாளம் காணப்பட்டு அவரது வீட்டிற்குள் நுழைய முயற்சிகளும் உளவாளிகளால் மேற்கொள்ளப்பட்டன.
"வியன்னா உளவாளிகளின் தலைநகரம். ஆனால் நகரத்தில் உளவு பார்த்ததற்காக யாரும் தண்டிக்கப்படவில்லை சட்டமும் உளவாளிகளுக்கு ஆதரவாகவே இருக்கிறது" என்று அன்னா தல்ஹாமர் கூறுகிறார்.
"நான் விரக்தியடைந்துள்ளேன், உண்மையைச் சொல்வதானால், எனக்கு சற்று பயமாக இருக்கிறது. நான் எனது மகளுடன் தனியாக வசிக்கிறேன். பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் அல்லது வேறு யாரையாவது மிரட்டினால் அரசு கவலைப்படுவதில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.
ஸ்வேதன்கா டோன்சேவா சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்துகிறார். அவரது பூனைக்குக்கூட டிக்டோக் கணக்கு உள்ளது. அவர் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டில் பேஸ்புக்கில் தனது படத்தை வெளியிட்டுள்ளார், அதில் அவர் விளாதிமிர் புதினின் படம் கொண்ட ஒரு சட்டையை அணிந்திருந்தார்.
ரஷ்யாவில் பெரும்பாலான பெண்கள் புதினுடன் குழந்தையைப் பெற விரும்புகிறார்கள் என்று அந்தப் புகைப்படத்திற்கு ஒருவர் கருத்து தெரிவித்தபோது, ஸ்வேதன்கா டோன்சேவா அதற்கு, "ரஷ்யாவில் மட்டுமல்ல" என்று குறிப்பிட்டு 'லிப்-லிங்கிங்' எமோஜியை பயன்படுத்தி அவர் பதில் அளித்தார்.
வியன்னாவில், பிபிசி அவரைத் தொடர்புகொண்டபோது, அவர் சமூக ஊடகங்களில் பதிவிட்ட படங்களில் காணப்பட்ட அதே பொருட்களை எடுத்துச் சென்றார்.
மேலும் "தான் ஸ்வேதன்கா டோன்சேவா" இல்லை என்று அவர் பிபிசியிடம் கூறிவிட்டுச் சென்ற 20 நிமிடங்களுக்குப் பிறகு, அவர் தனது பெயரில் பதிவு செய்யப்பட்ட தனது வீட்டிற்குள் செல்வதைக் காண முடிந்தது.
இது குறித்து நாங்கள் அவரிடம் கேட்டபோது, அவர் பதிலளிக்கவில்லை.
ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பல்கேரியாவை சேர்ந்த 6 நபர்களுடன் இந்த இரண்டு பெண்களும் பணிபுரிந்தனர்.
ரூசேவ் மற்றும் மார்சலெக் இடையே டெலிகிராம் செயலியில் கிட்டத்தட்ட 80,000 குறுஞ்செய்திகளை பிரிட்டன் காவல்துறையினர் விசாரித்தனர்.
காவல்துறையினரால் இந்த உளவு நெட்வொர்க்கின் நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதற்கு முன்பு, அதாவது 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு முன்னர் இந்த அமைப்பால் நடத்தப்பட்ட பல ரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக இந்தக் குறுஞ்செய்திகள் காட்டுகின்றன.
பிரிட்டனில் இருந்த இந்த உளவாளிகள் ஜெர்மனியில் அமெரிக்காவால் பயிற்சி அளிக்கப்பட்டு வந்த யுக்ரேன் வீரர்களையும் குறிவைத்தனர். ரூசேவ், மார்சலெக் ஆகிய இருவர், பத்திரிகையாளர்களான கிறிஸ்டோ குரோஷேவ், ரோமன் டோப்ரோகோடோவ் ஆகியோரை கடத்திக் கொலை செய்வது குறித்தும் பேசியுள்ளனர்.
பிரிட்டனில் தண்டிக்கப்பட்ட ஆறு உளவாளிகளைப் போலன்றி, ஸ்வேதன்கா டோன்சேவா, குவெடெலினா ஜென்சேவா ஆகியோர் காவலில் வைக்கப்படவில்லை மற்றும் எந்தக் குற்றத்திற்கும் தண்டனை பெறவில்லை.
ஸ்வேதன்கா டோன்சேவாவை விசாரணைக்கு முன்னரே காவலில் வைக்க வேண்டும் என்ற ஆஸ்திரிய அரசு வழக்கறிஞரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டார்.
ஆஸ்திரிய நீதிமன்ற ஆவணங்கள், ஸ்வேதன்கா டோன்சேவா நாட்டில் "சமூக ரீதியாகப் பிணைக்கப்பட்டவர்" மற்றும் அவரது தாயைக் கவனித்துக் கொள்வதால் தப்பி ஓடுவதற்கான "ஆபத்து இல்லை" என்று கூறுகின்றன.
சம்பந்தப்பட்ட மற்றவர்கள் ஏற்கெனவே பிரிட்டனில் தண்டிக்கப்பட்டுள்ளதால் எதிர்கால குற்றங்களின் ஆபத்து குறிப்பாக அதிகமாக இல்லை என்றும் நீதிமன்றம் கூறியது.
தன்னை உளவு பார்த்த நபர் ஏன் விடுவிக்கப்பட்டார் என்பது தனக்குப் புரியவில்லை என்று பத்திரிக்கையாளர் அன்னா தல்ஹாமர் பிபிசியிடம் கூறினார். உளவாளிகள் சொன்ன அனைத்தையும் நீதிமன்றம் நம்பியிருக்கக் கூடாது என்றும் அவர் நினைக்கிறார்.
இன்னும் பல உளவு அமைப்புகள் இருக்கின்றன என்றும் பிரிட்டனில் கைது செய்யப்பட்ட பின்னரும் அவர்களின் நடவடிக்கைகள் தொடர்கின்றன என்றும் ஆஸ்திரியாவின் ரகசிய உளவுத்துறை நம்புகிறது.
குவெடெலினா ஜென்சேவா பல்கேரியாவில் சுதந்திரமாகச் சுற்றித் திரிகிறார். அவர் தன்னை ஓர் அனுபவமிக்க விமான மற்றும் பயணத் தொழில் நிபுணர் என்று விவரிக்கிறார்.
பிபிசியால் தொடர்பு கொள்ளப்பட்ட பிறகு, குவெடெலினா ஜென்சேவா தனது பெயரை ஃபேஸ்புக் மற்றும் லிங்க்ட்-இன் பக்கத்தில் இருந்து மாற்றினார். குவெடெலினா ஜென்சேவா பற்றிய தகவல்கள் அமேடியஸ் ஏர்லைனின் மென்பொருளில் இன்னும் இருக்கின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.