தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். சமீபத்தில் நடிகர் விஜய் கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி இன்று காலை 10 மணி அளவில் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் நடைபெறுகிறது.
இந்த கூட்டம் காலை 10 மணி அளவில் தொடங்க இருக்கும் நிலையில் இன்று காலை 7:00 மணி முதல் நிர்வாகிகள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள்.சுமார் 2150 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நிலையில் அவர்களுக்கு முன்னதாகவே அழைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தின் போது சுமார் 10 முதல் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. அதேபோன்று பூத் கமிட்டி மாநாடு நடைபெறும் தேதியையும் இன்று அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருப்பதால் மாவட்ட செயலாளர்கள் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் தேர்தலுக்காக எடுக்கப்பட வேண்டிய ஆயத்த பணிகள் போன்றவைகள் குறித்தும் விஜய் ஆலோசனை வழங்க இருக்கிறார். மேலும் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் ஷூட்டிங் ஏப்ரல் மாதத்தில் நிறைவடையும் நிலையில் அதை தொடர்ந்து அவர் 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பும் இன்றைய கூட்டத்தில் தகவல்கள் வெளிவந்துள்ளது.