நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டம், அதிகரட்டி பேரூராட்சி முட்டிநாடு பகுதியில், புதிய நடமாடும் நியாய விலைக்கடையினை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா அவர்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டம், கேத்தி கிராமம், முட்டிநாடு மட்டம், செலவிப்நகர், ஈஸ்வரன் நகர், கோலனி மட்டம் மற்றும் சிவசெந்தூரன் நகர் ஆகிய பகுதிகளில், வசிக்கும் பொதுமக்கள் நீலகிரி மாவட்ட ரங்கநாதர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முழு நேர முட்டிநாடு நியாயவிலைக் கடையில் பொது விநியோகத் திட்ட அத்தியாவசியப் பொருட்களை பெற்று வந்தனர். மேலும், முட்டிநாடு என்ற இடத்தில், இக்கடையானது 413 குடும்ப அட்டைகள் கொண்டு இயங்கி வருகிறது.
பின்னர், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்தாவது:-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு மாநிலத்திலுள்ள ஒவ்வொரு தொகுதி மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, பொதுமக்களின் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் நடமாடும் நியாய விலைக்கடை, பகுதி நேர நியாய விலைக்கடை ஆகியவற்றை கூட்டுறவுத்துறையின் சார்பில் திறக்கப்பட்டு, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்றைய தினம் பொதுமக்களின் கோரிக்கையினை நிறைவேற்றி தரும் வகையில், முட்டிநாடு மட்டம், செலவிப்நகர், ஈஸ்வரன் நகர், கோலனிமட்டம் மற்றும் சிவசெந்தூரன் நகர் ஆகிய பகுதிகளில், சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகளில் நடமாடும் நியாய விலைக்கடை செயல்படும். எனவே, குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசியப் பொருட்களை பெற்று பயன்பெற வேண்டும் என நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன், அதிகரட்டி பேரூராட்சி (செயல் அலுவலர்) புவனேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், கூட்டுறவு சார்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) (குன்னூர்) மேனகா, குன்னூர் வட்டாட்சியர் ஜவஹர்உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.