காங்கேசன்துறை தமிழர்கள் காணிகளில் புத்த விகாரை கட்டப்பட்டது சட்டவிரோதம் - இலங்கை விகாராதிபதி பிபிசிக்கு பேட்டி
BBC Tamil April 02, 2025 12:48 AM
BBC

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் தையிட்டி பகுதியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை விரிவாக்கப் பணிகள் தமிழ் மக்களின் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளது என்று தற்போது வெளியாகி வரும் தகவல்கள் இலங்கையில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

உள்நாட்டுப் போர் நடைபெற்ற காலத்தில் இங்கிருந்து சென்ற தமிழ் மக்கள் பலரும் அக்காலத்தில் அங்கே ஒரு விகாரை இருந்ததாக தெரிவிக்கின்றனர்.

உண்மையில் அப்படி ஒரு விகாரை இருந்ததா? அங்குள்ள பிக்குவும், ராணுவமும், நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரரும் இந்த விவகாரம் குறித்து கூறுவது என்ன?

இந்த விகாரை சர்ச்சையாவது ஏன்?

"தற்போதுள்ள விகாரையை தமிழ் மக்களின் காணிகளிலேயே நிர்மாணித்துள்ளனர். இது தவறான விடயம் என நாங்கள் ஆரம்பத்திலிருந்தே கூறி வருகின்றோம். தமிழ் மக்களே இந்த இடத்தில் இருக்க வேண்டும்,'' என யாழ்ப்பாணம் திஸ்ஸ விகாரை மற்றும் நயினா தீவு விகாரையின் விகாராதிபதி (தலைமை தேரர்) நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

தையிட்டி பகுதியில் திஸ்ஸ ரஜமகா விகாரை அமைந்துள்ளது. இலங்கையில் மூன்று தசாப்த கால யுத்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக இந்த தையிட்டி பகுதி காணப்படுகின்றது.

இலங்கை ராணுவத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையிலான யுத்தம் வலுப்பெற்ற 1990-ஆம் ஆண்டு காலப் பகுதியில் தையிட்டி பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்கள் அங்கிருந்து வெளியேறியதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு தையிட்டி பகுதியிலிருந்து மக்கள் வெளியேறிய 90ஆம் ஆண்டு காலப் பகுதியிலும் அந்த இடத்திற்கு பௌத்த விகாரையொன்று காணப்பட்டுள்ளது. ஆனால் திஸ்ஸ விகாரை என்று அழைக்கப்படவில்லை என்று அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

வரலாற்று சிறப்புமிக்கதா இந்த விகாரை?

''திஸ்ஸ ராஜமஹா விகாரை என்பது பழமையை வரலாற்று பெறுமதிமிக்க விகாரை என்பதுடன், சங்கமித்தை ஜயஸ்ரீ மஹாபோதிக்கு வருகை தரும்போது ஓய்வுக்கு தரித்திருந்த இடத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த இடத்தில் விகாரையொன்றை அமைக்குமாறு தேவானப்பியதிஸ்ஸ மன்னனுக்கு அறிவித்துள்ளதாகவும் புராணக்கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், முதலாவது தமிழ் தம்ம பாடசாலை இந்த விகாரையிலேயே ஆரம்பிக்கப்பட்டமையும் விசேடமாகும்,'' என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார் என நாடாளுமன்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் அதன் தலைவராக பதவி வகித்த போது இதை தெரிவித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், 1946ம் ஆண்டு காலப் பகுதியில் காணி உரிமையாளரினால் இந்த விகாரைக்குரிய காணி ஈடு வைக்கப்பட்ட நிலையில், அதனை மீட்க முடியாது, பின்னர் வேறொரு நபருக்கு குறித்த காணி விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த காணி பௌத்த அமைப்பொன்றுக்கு வழங்கப்பட்டதை அடுத்தே இங்கு பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டதாக பிரதேசத்தில் வாழும் தமது மூதாதையர் கூறியதாக, அந்த பிரதேச தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், தற்போது திஸ்ஸ விகாரை அமைந்துள்ள அந்த இடத்தில் ஏற்கனவே ஒரு விகாரை இருந்தது என்பது உறுதியாகியுள்ள பின்னணியில், யுத்த காலத்தில் விகாரையை அண்மித்து வாழ்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேறிய சூழ்நிலையில், அந்த காணிகள் ராணுவம் வசமிருந்துள்ளது.

இவ்வாறு ராணுவம் வசமிருந்த காணி விடுவிக்கப்பட்டதுடன், விடுவிக்கப்பட்ட தமிழர்களின் காணிகளை திஸ்ஸ விகாரையிலுள்ள பௌத்த மதகுருமார்கள் கைப்பற்றி, ராணுவத்தின் உதவியுடன் விகாரையை விஸ்தரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தமிழர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

PATHMANATHAN SARUJAN யுத்த காலத்தில் விகாரையை அண்மித்து வாழ்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேறிய சூழ்நிலையில், அந்த காணிகள் ராணுவம் வசமிருந்துள்ளது. காணிகளுக்கு செல்வதற்கான உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது - உரிமையாளர்கள் கூறுவது என்ன?

காணியின் உரிமையாளர்களில் ஒருவரான பத்மநாதன் சாரூஜன் இது குறித்து பிபிசி தமிழிடம் பேசும் போது, ''யுத்தம் காரணமாக 90ம் ஆண்டு காலப் பகுதியில் ஒரே நாளில் நாங்கள் தையிட்டி பகுதியிலிருந்து வெளியேறியிருந்தோம். 2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இந்த காணிகள் பகுதி பகுதியாகவே விடுவிக்கப்பட்டது. குறிப்பாக தையிட்டி விகாரை பிரச்னை நடைபெறும் பகுதி 2015-ஆம் ஆண்டே விடுவிக்கப்பட்டது," என்று மேற்கோள்காட்டினார்.

"விகாரைக்கு பக்கத்திலுள்ள காணிகளை பிடித்துக்கொண்டு சற்று தொலைவிலுள்ள காணிகளே முதலில் விடுவிக்கப்பட்டது. விகாரைக்குரிய நிர்மாணங்கள் நடைபெறும் இடத்தில் தான் எங்களுடைய காணி சிக்குண்டுள்ளது. இதுவரை எங்களுடைய காணிகளுக்கு செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டு தான் இருக்கின்றது," என்றும் அவர் தெரிவித்தார்.

''காணி விடுவிக்கப்பட்டதை அடுத்து, அந்த விகாரைக்கு வருகைத் தந்த பௌத்த பிக்கு ஒருவர், நில அளவையாளர்களை அழைத்து வந்து அளவிட்டு, 24 பரப்பு காணிகளை அவர் எடுத்துக்கொண்டார். எங்களுடைய உறவினர் ஒருவரின் காணியும் அதில் இருந்துள்ளது. அவர் பிரச்னையை ஏற்படுத்தினார். பின்னர் எங்களுடைய நில அளவையாளர் மற்றும் அவர்களுடைய நில அளவையாளர் வந்து மறு அளவை செய்து பிரச்னையை முடித்து கொடுத்தார்கள். அதிலிருந்து அப்போது விலகி சென்றார்கள்.

அதன்பின்னர் பழைய விகாரையில் சிறு சிறு வேலைகள் நடந்துக்கொண்டிருந்தது. மைத்திரி - ரணில் ஆட்சி காலத்தில் பழைய விகாரையில் அபிவிருத்தி பணிகள் நடந்திருந்தன. எனினும், இடைநடுவில் விடுப்பட்ட அந்த பணிகள் இன்று வரை அப்படியே இருக்கின்றது. கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சி காலத்தில் கொரோனா பரவிய சந்தர்ப்பத்தில் பொதுமக்களின் காணிகளில் கொரோனா விதிமுறைகளில் பின்பற்றி அவர்கள் அத்திவார பணிகளை மேற்கொண்டிருந்தார்கள்.

விகாரை தான் கட்டுகின்றார்கள் என எங்களுக்கு தெரியாது. சுற்றி வர தகரங்களால் மூடி கட்டிடம் கட்டப்பட்டது. கொரோனா விதிமுறை காரணமாக எங்களால் வெளியில் போக முடியவில்லை. அப்போது இதனை கட்டினார்கள். இந்த இடத்தில் விகாரை கட்டவில்லை. ராணுவம் இருக்கின்றது. ராணுவம் வெளியேறும் போது முழு காணிகளையும் தந்து விடும் என அரசாங்க அதிபர் எங்களிடம் தெரிவித்தார்.

விகாரைக்குரிய காணி வேறொரு இடத்தில் இருக்கின்றது. அந்த இடத்தில் முதலிலேயே அத்திவாரம் போடப்பட்டுள்ளது என்பதனால் இந்த இடத்தில் விகாரை தான் கட்டப்படுகின்றது என்பதை நாங்கள் நம்பவில்லை. கொரோனா காலப் பகுதியை பயன்படுத்தி இதனை கட்டி முடித்து விட்டார்கள்.'' என அவர் மேலும் குறிப்பிட்டார்.

PATHMANATHAN SARUJAN விகாரையை விரிவுபடுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 16 நபர்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் அளிக்கின்றனர் அங்குள்ள தமிழ் மக்கள் போராட்டத்தில் மக்கள்

இந்த நிலையிலேயே, தையிட்டி காணி விடுவிப்பு தொடர்பான போராட்டத்தை, காணி உரிமையாளர்கள் 2023ம் ஆண்டு ஆரம்பித்துள்ளனர்.

''குறித்த பகுதியில் சுமார் 16 பேரின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமித்தே இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என்பதை தென் பகுதியிலிருந்து வருகைத் தருகின்ற மக்களுக்கு உணர்த்துவதற்காகவே போராட்டங்களை நடத்துகின்றோம். உண்மையாக பௌத்த மதத்தை வழிபடுவோருக்கு உணர்த்துவதற்காகவே இதனை செய்கின்றோம்.

நயினை தீவு, யாழ்ப்பாணம் நகரம் போன்ற இடங்களில் பௌத்த விகாரைகள் இருக்கின்றன. அந்த இடங்களுக்கு சென்று போராட்டங்களை நடத்தவில்லை. இங்கு மாத்திரமே செய்கின்றோம். அநீதி இழைக்கப்பட்டுள்ளமையினாலேயே இந்த போராட்டத்தை நடத்துகின்றோம் என்பதை உணர்த்துவதற்காகவே இதனை செய்கின்றோம்'' என பத்மநாதன் சாரூஜன் குறிப்பிடுகின்றார்.

''பொதுமக்களின் காணிகளிலேயே இந்த விகாரை கட்டப்பட்டுள்ளது. இதில் 8 ஏக்கர் காணி பிடிப்பட்டுள்ளது. ஒரு விடயத்தை தெளிவூட்ட வேண்டும். ஒவ்வொரு இடத்திற்கு ஒவ்வொரு அளவு பிரமாணம் இருக்கின்றது. கொழும்பில் பச்சர்ஸ் என்றும் யாழ்பாணத்தில் பரப்பு என்றும் வெவ்வேறு அளவைகளில் நிலம் அளவிடப்படுகிறது.

10 பச்சர்ஸ் ஒரு பரப்பு. 16 பரப்புகளை உள்ளடக்கியது ஒரு ஏக்கர். ஏக்கர், பரப்பு, பச்சர்ஸ் என்பதிலும் ஒரு குழப்பம் இருக்கின்றது. அவர்களுக்கு இருந்த காணி 20 பரப்பு. அப்படியென்றால் 200 பச்சர்ஸ். பொதுமக்களுக்குரிய காணி 8 ஏக்கர். கிட்டத்தட்ட 150 பரப்பிற்குரிய காணி அதில் பிடிப்பட்டுள்ளது.'' என பத்மநாதன் சாரூஜன் தெரிவிக்கின்றார்.

இந்த விகாரையை அண்மித்து எந்தவொரு சிங்களவர்களும் காணி உறுதியுடன் இன்று வரை வசித்திருக்கவில்லை என கூறும் அந்த பிரதேச மக்கள், தமிழர்களினால் வழங்கப்பட்ட காணியிலேயே விகாரை நிர்மாணிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

அதைவிடுத்து, இந்த விகாரையானது புராதன பெருமதிமிக்க விகாரை என கூற முடியாது எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

காணி உறுதிப் பத்திரத்திற்கு அமைய விகாரை அமைந்துள்ள காணியில் விகாரை அவ்வாறு நடத்திச் செல்வதற்கு தாம் எந்தவிதத்திலும் எதிர்ப்பை வெளியிடவில்லை என கூறும் அந்த பிரதேச மக்கள், தனியார் காணிகளை ஆக்கிரமித்து விகாரையை விஸ்தரிக்கும் திட்டத்திற்கே எதிர்ப்பை வெளியிடுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

இந்த விகாரையை நிர்மாணிக்கும் பணிகள் மற்றும் அதனை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இன்றும் இலங்கை ராணுவம் ஈடுபட்டு வருவதாக பத்மநாதன் சாரூஜன் தெரிவிக்கின்றார்.

NAVATHAGALA PATHUMAKEERTHI THISS THERO யாழ்ப்பாணத்தில் பிரசித்திப் பெற்ற நயினா தீவு பௌத்த விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி என்ன சொல்கின்றார்?

யாழ்ப்பாணத்தில் பிரசித்திப் பெற்ற நயினா தீவு பௌத்த விகாரையின் விகாராதிபதியாக கடமையாற்றிய வரும் நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர், சர்ச்சைக்குரிய திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியாகவும் செயற்பட்டு வருகின்றார்.

திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியாக நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் செயற்பட்டாலும், திஸ்ஸ விகாரைக்கான கண்காணிப்பு பொறுப்பு மற்றுமொரு பௌத்த பிக்குவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பொறுப்பு வழங்கப்பட்டுள்ள பௌத்த பிக்குவே, இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக யாழ்ப்பாணம் திஸ்ஸ விகாரை மற்றும் நயினா தீவு விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

''இந்த பௌத்த பிக்கு ராணுவத்துடன் இணைந்து விகாரையின் காணியில் இல்லாது, தமிழ் மக்களின் காணிகளில் தற்போதுள்ள விகாரையை கட்டியுள்ளார். இது தவறு என நான் முதலில் இருந்தே கூறி வருகின்றேன். விகாரைக்கு 18 ஏக்கர் இருக்கின்றது. இது திஸ்ஸ விகாரைக்கு சொந்தமானது என கூறுகின்றனர். திஸ்ஸ விகாரைக்கு என்று காணி உறுதிப்பத்திரம் இருக்கின்றது. அந்த காணிகள் அந்த மக்கள் இருக்க வேண்டும். நான் தானே அதற்கான அனுமதியை கொடுக்க வேண்டும்.

தமிழ் மக்களிடம் காணி உறுதிப்பத்திரங்கள் இருக்கின்றன. வெசாக் உற்சவத்திற்கு அரசாங்கத்தினால் விகாரைகளுக்கு பணம் வழங்கப்பட்டது. திஸ்ஸ விகாரைக்கும் பணம் வழங்கப்பட்டது. அந்த பிக்குவுடன் இணைந்து ராணுவம் பணத்தை பெற்று தமிழ் மக்களின் காணிகளில் அந்த நிர்மாண பணிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. திஸ்ஸ விகாரைக்கு கிடைத்த பணத்தை கொண்டு, ஏனையோரின் காணிகளில் விகாரையை நிர்மாணித்தது சட்டவிரோதமானது. தமது காணிகளை கோரியே தமிழ் மக்கள் போராட்டங்களை நடத்துகின்றனர்,'' என நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் குறிப்பிடுகின்றார்.

''தற்போதுள்ள நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரையை உடைக்க முடியாது. அவ்வாறு உடைத்தால் வேறு பிரச்னை வரும். அதனால், எனது காணியை தருகின்றேன் என நான் தமிழ் மக்களிடம் கூறினேன்.'' எனவும் அவர் தெரிவித்தார்.

''நான் ஏனைய பௌத்த பிக்குகளுடன் கலந்துரையாடினேன். தற்போதுள்ள பிக்குவிடம் உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. ஏனையோர் ஏற்றுக்கொண்டார்கள். ஆனாலும் காணி விடுவிக்கப்படவில்லை. தமிழ் மக்கள் போராட்டங்களை நடத்துகின்றனர். அது நியாயமான போராட்டம். நான் பௌத்தம் என்றாலும், எமது காணிகளில் விகாரையை கட்ட வந்தால் எமது மக்களும் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள் அல்லவா?

அது தெளிவாகவே தமிழ் மக்களின் காணிகள். வேண்டுமென்றே ராணுவத்துடன் இணைந்து இதனை செய்கின்றனர். எங்களையே உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. வீதி தடையை ஏற்படுத்தியே இந்த விகாரை நிர்மாணிக்கப்பட்டது.'' என அவர் குறிப்பிடுகின்றார்.

''மக்கள் தவறானவர்கள் இல்லை. பிக்குவே தவறிழைத்தவர். ராணுவம் தவறிழைத்துள்ளது. அந்த பிக்கு பலவந்தமாகவே விகாரையில் இருக்கின்றார்,'' எனவும் நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் குறிப்பிடுகின்றார்.

BBC விகாரையை விரிவுப்படுத்தும் பணிகள் நடைபெற்றது குறித்து அறிவிக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர் திஸ்ஸ விகாரை பிக்குவின் பதில் என்ன?

சர்ச்சைக்குரிய திஸ்ஸ விகாரையில் தற்போதுள்ள பிக்கு தொடர்பில் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து, அந்த பிக்குவை, பிபிசி தமிழ் தொடர்புக் கொண்டு வினவியது.

தாம் அமைதியை நிலைநாட்டும் பொறுப்பில் இருப்பதனால், தற்போதைக்கு எந்தவொரு ஊடகத்திற்கும் பதிலளிக்க முடியாது என அவர் கூறினார்.

இலங்கை ராணுவத்தில் பதில்

திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி மற்றும் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் தமிழ் மக்கள் ராணுவம் மீது சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பிபிசி தமிழ், ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வர்ண கமகேவிடம் வினவியது.

''ராணுவம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பௌத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய என எந்தவொரு புனித தலத்திலிருந்தும் உதவிகளை கோரும் பட்சத்தில், அதற்கான உதவிகளை சட்டவிதிமுறைகளுக்கு அமைய நாங்கள் வழங்குவோம். சட்ட விதிமுறைகளுக்கு அமைவானது என்றால் நிச்சயம் நாங்கள் அதனை செய்துக்கொடுப்போம். அதைவிடுத்து, இனங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையிலான எந்தவொரு செயற்பாடுகளிலும் ராணுவம் தொடர்புப்படாது'' என ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வர்ண கமகே தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.