அமெரிக்காவில் உள்ள சிக்காகோவில் ஒரு பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் மூன்று பெண்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஒரு டேபிளை முன்பதிவு செய்திருந்தனர். இதனை அடுத்து மூன்று பெண்களும் உணவகத்திற்கு வந்து சிக்கன் விங்ஸ் மற்றும் ஆல்ஃப்ரடோ போன்ற உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் உணவகத்தை விட்டு தப்பி ஓடினர்.
அதன் பின் சமூக வலைதளங்களில் தங்களது பிறந்தநாள் கொண்டாட்டத்தை வித்தியாசமான முறையில் கொண்டாடியதாகவும், இது ஒரு புதுவித அனுபவமாக இருந்ததாகவும் வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து உணவகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த மூன்று பெண்களும் சிக்காகோ நியர் நார்த் சைடு பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் முன்பதிவு செய்வதற்கு தங்களது பெயரும் தொலைபேசி எண்ணையும் கொடுத்துள்ளனர் என்பது தெரியவந்தது.
இந்த தகவல்களை வைத்து காவல்துறையினர் அந்த பெண்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் உள்ளூர் உணவகங்கள் நிறுவனர்கள் இது குறித்து கூறுகையில், “dine and dash” எனப்படும் இந்த மோசடி நடவடிக்கை தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருவதாகவும், இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் வாடிக்கையாளர்கள் உயர்தர உணவகங்களில் அறைகள் மற்றும் உணவுகளுக்கு முன்பதிவு செய்துவிட்டு, அதன் பின் அறைகளை பயன்படுத்திவிட்டு, உணவுகளை சாப்பிட்டு விட்டு பணம் செலுத்தாமல் தப்பித்து விடுவதால் உணவகங்களுக்கு கடும் இழப்புகள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.