'ஒப்பந்தத்திற்கு உடன்பட மறுத்தால், குண்டுவீசி தாக்குதல் நடத்தப்படும்'; ஈரானை எச்சரித்துள்ளஅமெரிக்கா..!
Seithipunal Tamil March 31, 2025 08:48 AM

கடந்த 2015-ஆம் ஆண்டு ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க உலக நாடுகள் ஒப்பந்தம் கொண்டு வந்தது. இந்த ஒப்பந்தத்தில் ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ஒப்பந்தம் பலவீனமானதாகக் கூறி, அமெரிக்க அதிபராக முதல் முறையாக டிரம்ப் பதவியேற்ற பிறகு, கடந்த 2018-ஆம் ஆண்டு அந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது.

அதன்பிறகு, ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்த உறுதிமொழிகளை ஈரான் மெல்ல மெல்ல மீறத் தொடங்கியது. அந்த வகையில், அணு ஆயுத உற்பத்தியை அதிகரித்து வருவதாக ஈரான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்களை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்நிலையில், அணு ஆயுத உற்பத்திக்கு தடை விதிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தால், ஈரான் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதை தடுக்க, புதிய ஒப்பந்தத்தை கொண்டு வர அமெரிக்க அதிபர் முயற்சித்து வருகிறார். இது தொடர்பாக அவர் ஈரானுக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;  'அணு ஆயுத உற்பத்திக்கு தடை விதிக்கும் விதமான, புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது தொடர்பாக ஈரான் பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டும். தவறினால், ராணுவத்தை பயன்படுத்த வேண்டியிருக்கும்,' என்று எச்சரிக்கை விடுக்கும் விதமாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அணு ஆயுத உற்பத்திக்கு தடை விதிக்கும் ஒப்பந்தத்திற்கு உடன்பட மறுத்தால், ஈரான் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஈரான் இதற்கு முன்பு பார்த்திடாத வகையில் தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் மிரட்டல் விடுத்துள்ளார். அத்துடன்,  ஈரான் மீது 02-வது கட்ட வரிவிதிப்புகளை சுமத்த வேண்டி இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

ஆனாலும், அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது. இது, உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.