இந்தியாவை ஆண்ட சுல்தான்களும், முகலாயர்களும் பெரும்பகுதி முகாமிட்டிருந்தது வட இந்தியாவில்தான் என்பது வரலாறு சொல்லும் தகவல். அதனால்தான் வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் எங்களை ஆண்டிருக்கிறார்கள் என்ற உணர்வால் இன்றும் இந்து முஸ்லிம், ஔரங்கசீப், தாஜ்மஹால் எனத் தொடர்ந்து சலசலப்புகளும், வன்முறைகளும் அரங்கேற்றப்படுகிறது. இதை ஊதிப் பெரிதாக்குவதில் அரசியல் முக்கியக்காரணம் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.
ஆனால், அதற்கு நேர் எதிரான மனநிலையில், இன்றும் இந்தியாவுக்கு சமூக நல்லிணக்கத்துக்கும், மத ஒற்றுமைக்கும் உதாரணமாக விளங்குகிறது தென்னிந்திய மாநிலங்கள். அதில் முன்னணிவகிக்கிறது தமிழ்நாடு. பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு முஸ்லிம்கள் குளிர்பானம், தண்ணீர் கொடுப்பதும், கோயில் விழாக்களுக்கு சீர் செய்வதும், முஸ்லிம்களின் பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு உரிமையுடன் வந்து இந்துகள் முறை செய்வதும் என ஆழ்மனதிலிருந்து மாமன் - மச்சான் என்ற உறவை கொண்டாடுகிறார்கள் தமிழ்நாட்டு மக்கள். இதன் மூலம் மதங்களை பின்னுக்குத் தள்ளி மனிதத்தை முன்னிறுத்துகின்றனர். அதன் ஒரு சாட்சியாக பலரின் பசியைப் போக்கி நிற்கிறது நோன்புக் கஞ்சி.
ரமலான் நோன்புமுஸ்லிம்களின் புனித மாதமாகக் கருதப்படுகிறது ரமலான். இந்த மாதத்தின் 30 நாளும் பகல் முழுவதும் எதையும் சாப்பிடாலும், குடிக்காமலும் பசியுடன் நோன்பிருந்து, மாலையில் அந்த நோன்பை முடித்துக்கொள்வார்கள். இந்த நோன்பு முடிந்த மறுநாள்தான் முஸ்லிம்களின் பிரதான பண்டிகையான ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. இந்த நோன்பு மாதத்தில் முப்பது நாளும் பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சிக் கொடுப்பார்கள். நோன்பிருக்கும் மக்கள் நோன்பை முடிக்கும் நேரத்தில், அவர்களின் பிரதான உணவு இந்த நோன்புக் கஞ்சிதான். காலையிலிருந்து பசியோடு இருந்து ஆற்றலை இழந்திருக்கும் நோன்பாளிகள் இந்த நோன்புக் கஞ்சியின் மூலம் உடனடியாக ஆற்றல்பெறும் வகையில் நோன்புக் கஞ்சி தயாரிக்கப்படுகிறது.
ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலியின் மூதாதையரான நவாப் முகமது அலி வாலாஜாவால் கட்டப்பட்ட பெரிய மசூதிதான் திருவல்லிக்கேணியில் இருக்கும் வாலஜா மசூதி. இந்த மசூதியில் இன்றளவும் முஸ்லிம்கள் நோன்பை முடிப்பதற்கு சிந்தி மக்கள்தான் உணவுப் பொருள்களை வழங்கிவருகிறார்கள். இந்த இப்தார் விருந்து சேவையை கிட்டத்தட்ட 43 ஆண்டுகளாக வழங்கி வருகின்றனர். இந்தியப் பிரிவினைக்குப் பிறகு சென்னைக்கு குடிபெயர்ந்த சிந்து மாகாணத்தைச் சேர்ந்த இந்து அகதி தாதா ரத்தன்சந்த் என்பவரால் தொடங்கப்பட்டது சூபிதார் டிரஸ்ட்.
முஸ்லிம்களின் நோன்பு திறக்கும் நிகழ்வுக்கு உணவு வழங்க ஆற்காடு நவாப் குலாம் முஹம்மது அப்துல் காதரிடம் அனுமதி கேட்டு, அதன் அடிப்படையில் இந்த நிகழ்வை நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் சுமார் 1000 நபர்களுக்கு நோன்பு கஞ்சி தொடங்கி வாழைப்பழம் வரை விதவிதமாக உணவளிப்பது சாதாரண விஷயமல்ல. அதைப் பெருமையுடன் இன்றும் அவர்கள் கரங்காலேயே பரிமாறியும் வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழிக்கு அருகில் இருக்கிறது பொந்தம்புளி எனும் கிராமம். இந்த கிராமத்தில் மஸ்ஜிது நூர் எனும் பள்ளிவாசல் இருக்கிறது. இந்த ஊரின் மிக முக்கியப் பகுதியாகவே இதை அடையாளப்படுத்துகின்றனர் அந்த கிராம மக்கள். இந்த பள்ளிவாசலில் நோன்பு மாதமும், கந்தூரி நிகழ்வும் சமூக ஒற்றுமைக்கு பிரதான உதாரணமாக பேசப்படுகிறது.
பொந்தம்புளி முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் & பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவுக் கல்லூரி நிர்வாக்க்கமிட்டித் தலைவர் ஆர். ராமமூர்த்தி இந்த கிராமம் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டதில், ``இந்தப் பள்ளிவாசலை கடந்த 50 வருடமாக பராமரித்து வருபவன் நான்தான். பழைய பள்ளிவாசலுக்கு அருகில் புதியப் பள்ளிவாசல் கட்டும்போது, அஸ்திவாரம் முதல் வாசல் கதவுவரை என் மேற்பார்வையில்தான் கட்டப்பட்டது. இந்தப் பள்ளிவாசலின் கணக்கு வழக்கு முதல் கஞ்சிக்கான பொருள்கள் சரிபார்ப்புவரை எல்லாவற்றையும் நான்தான் கவனித்து வருகிறேன்.
அப்போது இருந்ததுபோன்ற முஸ்லிம் குடும்பங்களின் எண்ணிக்கை இப்போது இல்லை. எல்லோரும் பிழைப்புத் தேடி பல்வேறு ஊர்களுக்கு சென்றுவிட்டார்கள். ஆனால், இன்றும் வெளியூர் சென்ற அனைவரும் ஊருடன் தொடர்பில்தான் இருக்கிறார்கள். இந்த ஊர் மக்களுக்கும் பள்ளிவாசலுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எங்கள் பிள்ளைகள் இப்போதும் வெளியூர், அல்லது வெளிநாடு செல்வதாக இருந்தால், பள்ளிவாசல் முன்பு காரை நிறுத்திவிட்டு, அல்லாவிடம் வேண்டிக்கொண்டுதான் புறப்படுவார்கள்.
கொடுக்கல் வாங்கலில் பிரச்னை ஏற்பட்டாலும்கூட 'பள்ளிவாசலில் வந்து சொல்லு' என்றுதான் சத்தியம் செய்யக் கூறுவோம். அவ்வளவு பக்தி பள்ளிவாசல்மீது இருக்கிறது. நாளை கூட இந்த கிராமத்தின் எல்லா மக்களிடமிருந்தும் பணம் வசூலித்துதான் பொதுக் கஞ்சிதான் ஊற்றுகிறோம்.." என விளக்கிக் கொண்டிருந்தார். இடையே, ”தம்பி ஜமாத் ஆளுங்க வந்துருக்காங்க... கொஞ்சம் இருங்க கணக்கு வழக்கு கேட்டுட்டு வரேன்” எனக்கூறி, வந்த முஸ்லிம்களிடம் பள்ளிவாசல் தொடர்பான கணக்குகளை கேட்கச் சென்றுவிட்டார்.
அண்ணன் தம்பிகள்பொந்தம்புளி மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் கமிட்டித்தலைவர் I.சேக் இஸ்மாயில்,``எங்கள் ஊரைப் பற்றி நினைக்க எனக்கே பெருமையாக இருக்கிறது. எத்தனை அரசியல் வலை பின்னினாலும் எங்கள் ஊரில் இருக்கும் ஒற்றுமையை சிதைக்க முடியவில்லை. அண்ணன் தம்பிகளாகதான் பழகிவருகிறோம். எங்களின் ஒற்றுமையை இன்னும் ஆழமாக நீங்கள் உணரவேண்டுமானால் எங்கள் ஊர் கந்தூரிக்கு வந்து பாருங்கள். இப்போதுவரை தானாக முன்வந்து பள்ளிவாசலின் எல்லா பணிகளையும் எங்கள் சகோதர சமய அண்ணன் தம்பிகளே செய்துவருகிறார்கள்." என்றார்.
மதுரைக்கு அருகில் இருக்கிறது மேலூர். அந்த ஊரில் பழமையான பெரிய பள்ளிவாசல் ஒன்றில் நான்கு தலைமுறையாக இந்துகள் நோன்பு கஞ்சி கொடுத்துவருவதாக தகவல் கிடைத்தது. உடனே அந்தப் பள்ளிவாசலின் தலைமை இமாம் சர்ஃபுதீன் மழ்ஹரியை தொடர்புகொண்டு பேசினோம். அவர், ``இந்த ஊரில் எங்களுக்குள் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. உறவுகளாகதான் பழகி இருசமூக மக்களும் பழகிவருகிறோம். காலையும், மாலையும் பள்ளிவாசலில் மந்திரித்துச் செல்வதற்கு அவ்வளவு மக்கள் வந்து காத்திருப்பார்கள்.
அவர்களில் பெரும்பான்மையானவர்கள் சகோதர சமயத்தவர்கள்தான். இந்தப் பள்ளியில் ஒவ்வொருநாளுக்கு ஒவ்வொருவர் நோன்பு கஞ்சிப் பொறுப்பை எடுத்துக்கொள்வது வழக்கம். அப்படி இந்த ஆண்டு ஐந்து சகோதர சமயத்தவர்கள் பொறுப்பெடுத்திருக்கிறார்கள். சிலிண்டர் முதல் கஞ்சிக்கு தேவையான அனைத்துப் பொருள்களின் பட்டியலும் அவர்களிடம் வழங்கிவிடுவோம். சிலர் பணமாக கொடுத்துவிடுவார்கள். சிலர் எல்லாப் பொருள்களையும் வாங்கிக் கொடுத்து, உடன் இருந்து கஞ்சிக் காய்ச்சியப் பிறகு பரிமாறிவிட்டுச் செல்வார்கள்.
சமீபத்தில் முஸ்லிம்களே 30 நாளுக்கான பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்கள். அப்போது சகோதர சமயத்தவர்கள் உரிமையுடன் வந்து சண்டையிட்டார்கள். இது எங்கள் உரிமை. விட்டுத்தர முடியாது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்கள்." என்றார்.
மாசாணி அம்மன் கோயில் குருக்கள்உடுமலைப் பேட்டைக்கு அருகில் இருக்கும் கிராமம் மானுப்பேட்டை. அந்த ஊரின் பூர்வீகப் பள்ளிவாசலில் ஒருநாள் நோன்புக் கஞ்சிக்காக மலைமாசாணி அம்மன் கோயில் குருக்கள் சுவாமி ஆத்மானந்தா பொறுப்பெடுத்திருக்கிறார்.
இந்தத் தகவலறிந்து அந்த மலை மாசாணி அம்மன் கோயில் குருக்களை தொடர்புகொண்டோம். ``இதிலென்ன இருக்கிறது. அவர்கள் நமக்கு செய்வார்கள் நாம் அவர்களுக்குச் செய்கிறோம். இதில் ஆச்சர்யப்பட எதுவும் இல்லை. இப்படிக் கொடுக்கல் வாங்கல்தானே மனித இயல்பு. இப்படித்தானே நாம் காலம் காலமாக வாழ்ந்து வருகிறோம். நான் 12 வருடமாக கஞ்சிக்கு பணம் கொடுத்து வருகிறேன். அவர்களும் எந்த மறுப்புமில்லாமல் ஏற்றுக் கொள்கிறார்கள். இதன் மூலம் எங்களின் உறவுகளை புதுப்பித்துக்கொள்கிறோம்" என்கிறார்.
பூர்வீகப் பள்ளிவாசலின் தலைவர் பஷீர் தொடர்புகொண்டு பேசியபோது, ``ஒவ்வொரு வருடமும் கஞ்சிக்காக அந்தப் பகுதியில் இருக்கும் முஸ்லிம்களிடம் பணம் வசூல் செய்வோம். அப்படி ஒருமுறை கோயில் குருக்களை சந்தித்தபோது யதார்த்தமாக என்ன காரியத்துக்கு எனக் கேட்டிருக்கிறார். நோன்பு கஞ்சிக்காக என வசூல் செய்பவர்கள் விளக்கமளித்திருக்கிறார்கள். அப்போதிலிருந்து என்னுடைய பங்கை எடுத்துக்கொள்ளுங்கள் எனக் கொடுக்கத் தொடங்கினார். இன்றும் அது தொடர்கிறது. நாங்களும் கோயில் விழா என்றால் எங்களால் முடிந்தவைகளை செய்துவருகிறோம்" என்கிறார். இவர்களின் பேச்சில் அவ்வளவு யதார்த்தமும் புரிதலும் இருந்தது.
தொடரட்டும்!தமிழ்நாட்டின் மற்றப் பகுதிகளிலும் இப்படியான நடைமுறைகள் இருக்கிறதா என விசாரித்தபோது, கோவையில் ஒரு பாட்டி வருடா வருடம், நோன்பு கஞ்சிக்கென ஒரு மூட்டை அரிசி வாங்கித் தந்துவிடுவாராம். பலர் பள்ளிவாசலுக்கு நோன்புக் கஞ்சிக்கென அதற்குரிய பணத்தைக் கொடுத்துவிடுகிறார்கள். சிலர் நேர்ச்சை செய்து பணம் கொடுக்கிறார்.
இதுதான் தமிழ்நாடு. இப்படித்தான் வளர்ந்தது தமிழ்நாடு என திரும்பும் திசையெல்லாம் மனித நேயமும், மத நல்லிணக்கமும் இணைந்து பயணிக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற கயிறை தமிழ்நாடு இறுகப் பற்றியிருக்கிறது. அதை யாராலும் அகற்ற முடியாது என்பதை இதுபோன்ற நிகழ்வுகள் நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறது. இந்த உறவு இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் தொடரட்டும்.
Vikatan WhatsApp Channelஇணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK