"அன்றைய தினம் எங்கள் கிராமத்தின் மீது குண்டு மழை பொழிந்தது. வெடிகுண்டின் ஒரு பகுதி என் மூன்று வயது மகனின் தொடையில் விழுந்தது. அவன் மயக்கமடைந்தான். மியான்மரில் மருத்துவரிடம் அவனை அழைத்துச் செல்ல முடியவில்லை. அதனால் அவனது காயத்தின் மீது சில இலைகளை வைத்து, அதன் மேல் துணியைக் கட்டி எல்லையைக் கடந்து வங்கதேசத்திற்குள் நுழைந்தோம். அதன் பிறகே சிகிச்சை செய்ய முடிந்தது."
வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் பகுதியில் மூங்கில் மற்றும் தார்ப்பாய்களால் ஆன ஒரு தற்காலிக குடிசையில் வசிக்கும் இஸ்மத் ஆரா பிபிசி குழுவிடம் தனது ஆதரவற்ற நிலையின் வலியை வெளிப்படுத்தினார். மகனின் உயிரைp பறித்திருக்கக்கூடிய வெடிகுண்டுத் துண்டின் படத்தை அவர் காட்டினார்.
ஏழு மாதங்களுக்கு முன்பு தனது குடும்ப உறுப்பினர்களுடன் மியான்மரின் மவுங்தாவில் (ரக்கைன் மாகாணம்) உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறி வங்கதேசத்திற்கு வரவேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. மியான்மர், பௌத்தர்கள் ஆதிக்கம் செலுத்தும் நாடு.
உலகில் மிகவும் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் சிறுபான்மையினராக ஐக்கிய நாடுகள் சபை கருதும் ரோஹிங்யா சமூகத்தைச் சேர்ந்தவர் இஸ்மத் ஆரா. பெரும்பாலான ரோஹிங்யாக்கள் முஸ்லிம்கள். வங்கதேசத்தில் காக்ஸ் பஜாரில் பத்து லட்சத்திற்கும் அதிகமான அகதிகளுக்காகk கட்டப்பட்ட 34 முகாம்களில் ஒன்றில் அவர் வசிக்கிறார். இதுதான் உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாம்.
கடந்த 2021ஆம் ஆண்டில் மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் அங்கு உள்நாட்டுப் போர் போன்ற சூழ்நிலை உள்ளது. 2017இல் மியான்மரின் ரக்கைன் மாகாணத்தில் இருந்து ஏழு லட்சம் ரோஹிங்யா மக்கள் வெளியேறினர்.
ரக்கைன் மாகாணத்தில் உள்ள ரோஹிங்யா சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பல்லாண்டுகளாக அடக்குமுறை மற்றும் வன்முறையை எதிர்கொண்டுள்ளனர்.
கடந்த 2016 அக்டோபரில் அராக்கான் ரோஹிங்யா சால்வேஷன் ஆர்மி என்ற தீவிரவாத அமைப்பு காவல்துறையினரைத் தாக்கி 9 காவலர்களைக் கொன்றது. பின்னர் நடந்த மியான்மர் ராணுவத்தின் நடவடிக்கையின் போது, கொலைகள், வன்புணர்வு, சித்திரவதை போன்ற செயல்களில் ஈடுபட்டதாக ராணவத்தின் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. தான் பொதுமக்களை அல்ல, தீவிரவாதிகளைக் குறிவைத்துள்ளதாக ராணுவம் கூறியது.
கடந்த 2017 ஆகஸ்டில் மியான்மரில் கடுமையான வன்முறையை எதிர்கொண்ட சுமார் ஏழு லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் அங்கிருந்து வங்கதேசத்திற்குக் குடிபெயர்ந்தனர். அந்த இடப்பெயர்வு இதுவரை நிற்கவில்லை.
அப்போதிருந்து தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான மக்கள் மியான்மர்-வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள ரக்கைன் மாகாணத்தை விட்டு வெளியேறி வங்கதேசத்திற்கு வருகிறார்கள். வன்முறையால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த மக்கள், இரு நாடுகளுக்கு இடையே ஓடும் ஆழமான நாஃப் நதியையும் கடலையும் சிறிய படகுகளில் கடந்து, கடினமான காட்டுப் பாதைகள் வழியாகத் தங்கள் உயிரைக் கையில் பிடித்தபடி அண்டை நாட்டை அடைகிறார்கள்.
ரோஹிங்யா மக்களுக்கு எதிரான வன்முறையை இனப்படுகொலை என்று ஐக்கிய நாடுகள் சபை வர்ணித்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த விசாரணைக்குப் பிறகு மியான்மரின் ஜெனரல் மற்றும் அப்போதைய அதிபர் மின் ஆங் ஹ்லைங்கிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் கைது வாரண்ட் கோரப்பட்டது. ரோஹிங்யா சமூகத்திற்கு எதிரான வன்முறைக்கு அவர்தான் பொறுப்பு என்று விசாரணையின்போது தீர்மானமானது.
கடந்த ஆண்டு மட்டும் குறைந்தது 60 ஆயிரம் ரோஹிங்யாக்கள் தஞ்சம் கோரி வங்கதேசத்தை அடைந்துள்ளனர் என்று வங்கதேச அரசின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார். இந்த முகாம்களில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் முப்பதாயிரம் குழந்தைகள் பிறக்கின்றன என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. அதனால்தான் காக்ஸ் பஜார் பகுதியில் அகதிகளின் எண்ணிக்கையும் அவர்களுக்காகக் கட்டப்படும் முகாம்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.
இந்த அகதிகள் வங்கதேசத்தில் வேலை அல்லது வியாபாரம் செய்ய முடியாது. கல்வி மற்றும் சிகிச்சைக்காகக்கூட அவர்கள் முகாம்களை விட்டு வெளியே செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவு, உடை, வீடு, சுகாதாரப் பாதுகாப்பு, பள்ளிகள் மற்றும் கிட்டத்தட்ட எல்லாவற்றுக்கும் இந்த அகதிகள், நிவாரண அமைப்புகளால் வழங்கப்படும் நன்கொடைகள் மற்றும் வசதிகளைச் சார்ந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களில் குறிப்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சில முடிவுகளுக்குப் பிறகு அகதிகளின் நிலை மேலும் மோசமாகி வருகிறது.
கடந்த 2017ஆம் ஆண்டிற்கு பிறகிருந்து காக்ஸ் பஜாரில் உள்ள அகதி முகாம்களில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு மிக மோசமான அளவுக்கு உள்ளதாக ஐ.நா குழந்தைகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த அகதிகளுக்கு விரைவில் நிதியுதவி ஒதுக்கப்படாவிட்டால் ரோஹிங்யா அகதிகளுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்கள் 50 சதவீதம் வரை குறைக்கப்படலாம் என்று ஐக்கிய நாடுகளின் அமைப்பான உலக உணவுத் திட்டம் கூறியுள்ளது.
இந்த முகாம்களில் உள்ள அகதிகளுக்கு அடிப்படை வசதிகளை வழங்கும் பல நிறுவனங்கள் தற்போது தங்கள் பணியை மூடிவிட்டதை நாங்கள் கண்டோம்.
காக்ஸ் பஜாருக்கு தெற்கே 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது டெக்னாஃப் பகுதி. அங்கு ஒரு முகாமில் நாங்கள் பன்னிரண்டு வயதாகும் அன்வர் சாதேக்கை சந்தித்தோம். அந்தச் சிறுவனால் தனியாக நடக்க முடியாது. வாய் பேசவோ கேட்கவோ முடியாது.
அவரது ஒன்பது பேர் கொண்ட குடும்பமும் 2017ஆம் ஆண்டில் மியான்மரில் இருந்து வங்கதேசத்திற்கு வந்தது. அவர்கள் அனைவரும் மூங்கிலால் ஆன குடிசைகளில் வசிக்கின்றனர். இவரது வீட்டில் மின்விளக்கு உள்ளது. ஆனால் மின்விசிறியோ, சரியான கழிப்பறை வசதியோ இல்லை.
பொதுவாக நான்கு வீடுகளுக்கு ஒரு கழிவறை என அமைக்கப்பட்டுள்ளது.
"மியான்மரில் நாங்கள் தாக்கப்பட்டோம். அங்கு எந்த மருத்துவரிடமோ, மருத்துவமனைக்கோ சென்று மகனுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. என் குழந்தைக்கு இங்கு சிகிச்சை கிடைக்கிறது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு அன்வரை மருத்துவரிடம் காட்ட அழைத்துச் சென்றபோது கிளினிக் மூடப்பட்டிருந்ததைக் கண்டேன். அது நடந்து ஒரு மாதமாகிறது. ஆனால் கிளினிக் இன்னும் திறக்கவில்லை," என்று அன்வரின் தாயார் ஃபாத்திமா அக்தர் கூறினார்.
மகனின் சிகிச்சை நின்றுவிட்டது. இனி என்ன செய்வது என்று அவருக்குத் தெரியவில்லை. ஹேண்டிகேப்டு இன்டர்நேஷனல் என்ற அமைப்பு நடத்தும் அந்த கிளினிக்கின் கதவு பூட்டப்பட்டிருந்ததை பிபிசி கண்டது. அமெரிக்காவில் அரசு நிதி வழங்கல் மறுஆய்வு செய்யப்படுவதால் தன்னால் சேவைகளைத் தொடர்ந்து வழங்க முடியவில்லை என்று அங்கு ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது.
அருகில் இருந்த மற்றொரு முகாமுக்கு நாங்கள் சென்றோம். அங்கு நாங்கள் சின்வார் என்ற ஒரு கர்ப்பிணிப் பெண்ணைச் சந்தித்தோம்.
"இங்கே என்னைப் போன்ற கர்ப்பிணிப் பெண்களைச் சந்திக்க ஒரு தன்னார்வலர் அடிக்கடி வருவார். சில நேரங்களில் சுகாதார நிலையத்திற்குச் செல்லவும் உதவுவார். ஆனால் இந்த வசதி ஒரு மாதமாக இல்லை. பல நிறுவனங்கள் பணப் பற்றாக்குறையால் இங்கு தங்கள் பணியை நிறுத்துகின்றன என்பதை நான் அறிந்தேன். இப்போது அந்த வசதியைப் பெற நாங்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டும். எங்களிடம் பணம் இல்லாததால் அது கடினம். இந்த நாடு பற்றி எங்களுக்கு அவ்வளவாகத் தெரியவும் தெரியாது," என்று சின்வார் குறிப்பிட்டார்.
சேவைகள் மற்றும் உணவுப் பொருட்களின் இருப்பு குறைக்கப்பட்டுள்ளதாக முகாம் தலைவர் முகமது நூர் தெரிவித்தார்.
"ஒவ்வோர் ஆண்டும் குளிர்காலத்தில் கம்பளி ஆடைகள் மற்றும் ரமலானின் போது எங்களுக்கு இஃப்தார் மற்றும் உணவு கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு எதுவும் கிடைக்கவில்லை. முன்பும் குறைந்த அளவு உணவே வழங்கப்பட்டது. ஆனால் அதுவும் இப்போது குறைந்துள்ளது. யாருக்காவது வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் மருந்துகள், கை கழுவ ஹேண்ட் வாஷ் ஜெல் மற்றும் முகக்கவசம் போன்றவை முன்பு வழங்கப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு எதுவும் அளிக்கப்படவில்லை," என்று அவர் மேலும் கூறினார்.
பதிலை அறிய காக்ஸ் பஜார் பகுதியின் முகாம்களில் செயல்படும் 100க்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகளின் (என்ஜிஓக்கள்) ஒருங்கிணைப்பாளராக இருக்கும் டேவிட் பக்டேய்னை நாங்கள் சந்தித்தோம், அவருடைய அமைப்பின் பெயர் - ரோஹிங்யா ரெஃப்யூஜீ ரெஸ்பான்ஸ் பங்களாதேஷ்.
இந்தப் பிரச்னைகளை அவர் மறுக்கவில்லை.
"பல சேவைகளில் நிதிப் பற்றாக்குறையின் தாக்கத்தை நாங்கள் பார்க்கிறோம். வரும் ஆண்டில் நாங்கள் பெறும் நிதியில் மேலும் சரிவு ஏற்படலாம். இது தொடர்ந்தால் தேவைகளுக்கும் நிதிக்கும் இடையிலான இடைவெளி ஆழமடையும்" என்று அவர் கூறினார்.
"நம்பிக்கையிழந்தவர்கள் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கட்டாயத்திற்கு இவர்கள் தள்ளப்படலாம். அவர்கள் இங்கிருந்து வேறு எங்காவது இடம் பெயரலாம். பாதுகாப்பு மற்றும் குற்றச் செயல்கள் அடிப்படையில் இங்குள்ள நிலைமை மேலும் மோசமடையலாம். அதனால்தான் ரோஹிங்யா நெருக்கடியில் கவனம் செலுத்தி, அகதிகள் மற்றும் நன்கொடையாளர் சமூகங்கள் ஆகிய இருவருக்கும் ஆதரவளிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்," என்று டேவிட் கூறினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் சில நாட்களுக்கு முன்பு காக்ஸ் பஜார் பகுதிக்குச் சென்றார். அத்தியாவசிய பொருட்களில் செய்யப்படும் குறைப்பு பற்றி கருத்து தெரிவித்த அவர் இந்த நிலை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறியிருந்தார்.
வருங்கால முயற்சிகள் குறித்துப் பேசிய டேவிட், "இந்த முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு உதவ இந்த ஆண்டு சுமார் 93 கோடி அமெரிக்க டாலர்களுக்கான உலகளாவிய முறையீட்டை சில நாட்களில் நாங்கள் செய்வோம். நாங்கள் முறையிட்ட அளவின் 60 அல்லது 70 சதவீத நிதி பொதுவாக எங்களுக்குக் கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு அந்த அளவுக்குக்கூட நிதி கிடைக்கும் என்று தோன்றவில்லை," என்று குறிப்பிட்டார்.
கடந்த 2023ஆம் ஆண்டில் டேவிட்டின் அமைப்பு 91.8 கோடி அமெரிக்க டாலர்களுக்கு முறையீடு செய்தது. அப்போது சுமார் 57 கோடி அமெரிக்க டாலர் உதவியை அது பெற்றது. அதற்கு முன் சுமார் 56 கோடி டாலர் உதவி பெறப்பட்டது.
கடந்த 2017 முதல் வங்கதேசத்தில் வாழும் ரோஹிங்யா சமூகத்திற்கு உதவிடும் மிகப்பெரிய நன்கொடையாளராக அமெரிக்கா இருந்து வருகிறது.
அமெரிக்க அரசு நிறுவனமான 'யுஎஸ் ஏஜென்சி ஃபார் இன்டர்நேஷனல் டெவலப்மெண்ட்' (யுஎஸ்-எய்ட்) உதவியுடன் காக்ஸ் பஜாரில் பல நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அமைப்பின் பல திட்டங்களுக்கான நிதியுதவி மீது தற்போது டிரம்ப் அரசு தடை விதித்துள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டில் ரோஹிங்யா சமூகத்திற்கு உதவுவதற்காக வழங்கப்பட்ட மொத்த உதவித் தொகையான 54.5 கோடி அமெரிக்க டாலரில் 30 கோடி டாலரையும் 2023இல் 24 கோடி டாலரையும் அமெரிக்கா வழங்கியது.
ரோஹிங்யா சமூகத்திற்கு அமெரிக்காவின் உதவிகள் எதிர்காலத்தில் தொடருமா இல்லையா என்பதும் உதவியின் அளவு என்னவாக இருக்கும் என்றும் தற்போது தெளிவாகத் தெரியவில்லை.
"இந்த விஷயத்தில் அமெரிக்கா தனது ஆதரவைத் தொடரும் என்று நாங்கள் நம்புகிறோம். ஜப்பான், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் போன்ற பிற நாடுகளுடனும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். தங்கள் உதவியை விரிவுபடுத்துவதாக அந்த நாடுகளும் உறுதியளித்துள்ளன," என்று வங்கதேச அரசின் செய்தித் தொடர்பாளர் ஷஃபிகுல் ஆலம் பிபிசியிடம் கூறினார்.
ரோஹிங்யா சமூகத்திற்கு உதவி வழங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் பெயர் மிகவும் கீழே உள்ளது. 2017ஆம் ஆண்டில் ஆபரேஷன் இன்சானியத்தின் கீழ் வங்கதேச அகதிகளுக்கு நிவாரணப் பொருட்களை இந்தியா வழங்கியது. அதன் பிறகு 2019ஆம் ஆண்டில் மியான்மரின் ரக்கைன் மாகாணத்தில் இந்தியா 250 வீடுகளைக் கட்டியது.
வங்கதேசத்தில் இருந்து மியான்மருக்கு அகதிகளைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கை குறித்து இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
பிபிசி ஹிந்தியுடன் உரையாடிய அகதிகள் அனைவருமே வங்கதேசத்தில் இருந்து மியான்மருக்கு திரும்பிச் செல்ல விருப்பம் தெரிவித்தனர்.
ஆயினும் 2017 முதல் இப்போது வரை ஒரு அகதிகூட திரும்பிச் செல்ல முடியவில்லை என்று வங்கதேச அரசு தெரிவிக்கிறது.
"பல ஆண்டுகள் நடத்திய சரிபார்ப்புக்குப் பிறகு எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகளின் விவரங்களை மியான்மருக்கு நாங்கள் வழங்கினோம். மியான்மர் அரசின் பிரதிநிதிகளும் இங்கு வந்தனர். ரோஹிங்யா தலைவர்களும் அங்கு சென்றனர். ஆனால் இதுவரை ஒரு அகதிகூட திரும்பிச் செல்ல முடியவில்லை. இதுதொடர்பான எந்தவிதமான கருத்து ஒற்றுமையும் இதுவரை ஏற்படவில்லை," என்று வங்கதேச அகதிகள் நிவாரண ஆணையத்தின் கூடுதல் ஆணையர் முகமது ஷம்ஷூத் டோஸா தெரிவித்தார்.
அடுத்து என்ன நடக்கும் என்று சொல்வது கடினம்.
"ரோஹிங்யா மக்களை கண்ணியத்துடனும், முழு சம்மதத்துடனும் மியான்மருக்கு திருப்பி அனுப்ப விரும்புகிறோம். ஆனால் தற்போது மியான்மரில் குறிப்பாக ரக்கைன் பகுதியில் வன்முறை மற்றும் உள்நாட்டுப் போர் போன்ற சூழல் நிலவி வருகிறது. எனவே அவர்களைத் திருப்பி அனுப்ப இது சரியான தருணம் என்று நாங்கள் நினைக்கவில்லை," என்று ஷஃபிகுல் ஆலம் பிபிசியிடம் கூறினார்.
பல நூற்றாண்டுகளாக பௌத்தர்கள் பெரும்பான்மையாக இருக்கும் மியான்மரில் வாழும் சிறுபான்மைக் குழுவே ரோஹிங்யா என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கிறது. மியான்மரில் பல தலைமுறைகளாக வாழ்ந்தாலும் ரோஹிங்யாக்கள் அதிகாரபூர்வ இனமாக அங்கீகரிக்கப்படவில்லை மற்றும் 1982ஆம் ஆண்டு முதல் அவர்களுக்கு குடியுரிமையும் மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் உலகின் 'நாடற்ற மிகப்பெரிய மக்கள் தொகையாக' உள்ளனர்.
மியான்மருக்கான இந்திய தூதராக கெளதம் முகோபாத்யாய் இருந்துள்ளார்.
"நாஃப் நதிக்கு அருகில் வசிக்கும் 'ரோஹிங்கே' சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தாங்கள் என்று ரோஹிங்யாக்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஒருவேளை இது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் இதை அனைவரும் ஏற்றுக்கொள்வதாகச் சொல்ல முடியாது. வெவ்வேறு காலங்களில் புலம்பெயர்ந்தவர்களாகவே அவர்கள் பார்க்கப்படுகின்றனர். ரோஹிங்யாக்கள் 'வங்காளிகள்' என்றும் பிரிட்டிஷ் தலையீட்டிற்குப் பிறகே அவர்கள் இங்கு வந்தனர் என்றும் மியான்மர் மக்கள் நம்புகிறார்கள்," என்று பிபிசியிடம் பேசிய அவர் தெரிவித்தார்.
ஆனால் அந்தப் பகுதியில் இஸ்லாத்தின் தாக்கம் முன்பு இருந்ததா?
"வரலாற்று ரீதியாக ரக்கைன் அரசவையில் இஸ்லாமிய செல்வாக்கு இருந்தது. ஆனால் ரோஹிங்யாக்களுக்கும், ரக்கைனில் உள்ள அராக்கான் ராஜ்ஜியத்தின் அரசவைகளில் பணியாற்றிய முஸ்லிம்களுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.
உண்மையில் ரோஹிங்யாக்கள் மிகவும் ஏழைகள். பிரிட்டிஷ் ஆட்சியின்போது இந்தியாவில் இருந்து விவசாயிகள் பர்மாவுக்கு குடிபெயர்ந்தது போல ரோஹிங்யாக்கள் வேறு திசையில் இருந்து குடிபெயர்ந்திருக்கலாம்," என்று முகோபாத்யாய் விளக்குகிறார்.
சுதந்திரத்திற்குப் பிறகு பர்மாவில் ரோஹிங்யா சமூகத்தினருக்கும் பாமர் சமூகத்தினருக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளது என்று முகோபாத்யாய் கூறுகிறார்.
"கடந்த 1947இல் இந்தியா பிரிக்கப்பட்டபோது அன்றைய ரோஹிங்யா தலைமை, கிழக்கு பாகிஸ்தானுடன் இணைவதைத் தேர்ந்தெடுத்தது. இதை மியான்மரின் மக்கள் குறிப்பாக இன்று ஆளும் வர்க்கமாக இருக்கும் பாமர்கள் ஒருபோதும் மறக்கவில்லை," என்று முகோபாத்யாய் சுட்டிக்காட்டினார்.
- அப்துர் ரஹ்மானின் கூடுதல் தகவல்களுடன்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு