சுமார் 12.9 நூறு கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கேலக்ஸி ஒன்றின் மையத்தில் 700 பத்து லட்சம் சூரியன் நிறையைக் கொண்ட ஒரு ராட்சத கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த 'பிளேசர்' வகை ராட்சத கருந்துளை நெஞ்சை நோக்கி நேராகச் சுடுவது போலப் பூமியை நோக்கி ஆற்றல் வாய்ந்த கதிர்களை வீசுகிறது. இந்தக் கண்டுபிடிப்பின் தொடர்ச்சியாக வானியலாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
பிக் பாங் எனும் பிரபஞ்சம் தோன்றிய பின்னர் வெறும் 800 பத்து லட்சம் ஆண்டு இளம் வயதாக இருந்தபோதே VLASS J041009.05-013919.88 என்கிற (சுருக்கமாக J0410-0139 ) இந்த வினோதப் பெயர் கொண்ட கருந்துளை உருவாகியுள்ளது.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 'பிளேசர்' வகை ராட்சத கருந்துளைகளில் இதுதான் ஆகத் தொன்மை வாய்ந்தது, ஆகத்தொலைவில் உள்ளதும் கூட.
மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஃபார் அஸ்ட்ரோனமியின் குழுத் தலைவரான எடுவார்டோ பனாடோஸ் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு, டிசம்பர் 2024இல் 'தி அஸ்ட்ரோபிசிகல் ஜர்னல் லெட்டர்ஸ் அண்ட நேசர் அஸ்ட்ரோனமியில்' தங்கள் கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
அட்டகாமா லார்ச் மில்லிமீட்டர் அர்ரே, மாமல்லன் தொலைநோக்கிகள் மற்றும் சிலியில் அமைந்துள்ள ஐரோப்பியத் தெற்கு ஆய்வகத்தின் மிகப் பெரிய தொலைநோக்கி மற்றும் பூமியின் சுற்றுப்பாதையில் உள்ள நாசாவின் சந்திரா விண்வெளி தொலைநோக்கி உள்ளிட்ட பல தொலைநோக்கிகளின் தரவுகளை ஆராய்ச்சிக் குழு பயன்படுத்தியது.
இந்தத் தரவுகளின் அடிப்படையில் இந்த வான் பொருளின் தொலைவு உட்படப் பல்வேறு தரவுகளை இனம் கண்டனர்.
கடந்த காலம்ஆகப் பெரிய தொலைநோக்கிகள் உள்ளபடியே கடந்தகாலத்தைக் காட்டும் மாயக்கண்ணாடி போலத்தான். நொடிக்குச் சுமார் மூன்று லட்சம் மீட்டர் என ஒளி பயணம் செய்கிறது. எனவே ஒரு பொருளிலிருந்து நம் கண்களுக்கு ஒளி வந்து சேர குறிப்பிட்ட கால இடைவெளி ஏற்படும்.
எடுத்துக்காட்டாக இப்போது சூரியனைப் பார்த்தல் அது எட்டு நிமிடம் முன்பு இருந்த சூரியன். இப்போது காட்சி தரும் நிலவு 1.3 நொடிக்கு முன்பு இருந்த நிலவு. இரவு வானில் மிகப் பிரகாசமான விண்மீன் சிரியஸ் சுமார் 8.6 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையில்தான் காட்சி தரும். அதாவது தொலைவில் உள்ள பொருளைக் காணும்போது கடந்த காலத்தைக் காண்கிறோம்.
ஐம்பது அறுபது வயதில் தலைமுடி நரைப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. ஆனால் பிறந்த கைக்குழந்தையின் தலைமுடி நரைக்கிறது என்றால் நாம் அதிர்ச்சி அடைவோம் அல்லவா? அதுபோலத் தான் இந்தக் கண்டுபிடிப்பு என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
பிரபஞ்சத்தைப் பொறுத்தவரை பிக பாங் நிகழ்வுக்குப் பிறகு 800 பத்து லட்சம் ஆண்டுகள் என்பது சிறு கைக்குழந்தை நிலை. பிரபஞ்சத்தின் இளம் வயதிலேயே இவ்வளவு நிறை கொண்ட குண்டு ராட்சத கருந்துளை எப்படி ஏற்பட்டு இருக்க முடியும் என விஞ்ஞானிகள் மலைத்து நிற்கின்றனர்.
கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் சிலர் யானையின் வாலை தடவி கயிறு என்றும், காலை பிடித்துப் பார்த்து தூண் போல என்றும், காதை தடவிப் பார்த்து முறம் போல என்றும் தந்ததைப் பிடித்துப் பார்த்து ஈட்டி போல என்றும் தவறாகக் கருதுவது போல இதுகாறும் பிளேசர் குவாசர் மற்றும் துடிக்கும் ரேடியோ கேலக்ஸி முதலியவற்றைத் தனித்தனியான மூன்று வகை வான் பொருள்கள் எனத் தவறாகக் கருதி இருந்தனர்.
இவை மூன்றும் சூரிய நிறைபோல பத்து லட்சம் நூறு கோடிக் கணக்கில் நிறை கொண்ட குண்டு ராட்சச கருந்துளை கொண்ட உயிர்ப்புள்ள கோலடி கருக்கள் தாம்.
பெரும் அளவு நிறை அடர்த்தியாகச் சிறு வெளியில் சுருங்கும்போது கருந்துளை உருவாகிறது. கருந்துளையின் ஈர்ப்பு ஆற்றல் மிக வலுவானது. ஒளி கூட கருந்துளையிலிருந்து வெளியே வரமுடியாது.
சூரியனைப் போலப் பத்து இருபது மடங்கு நிறைகொண்ட குட்டி கருந்துளை முதல் சூரியனைப் போல பத்து லட்சம்- நூறு கோடி நிறை கொண்ட ராட்சத கருந்துளைகள் வரை இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளன.
சூரியனைப் போலப் பல பத்து லட்சம் நிறை கொண்ட குண்டு ராட்சத கருந்துளைகள் அவற்றின் மீ நிறையின் காரணமாக ஈர்ப்பு புலம் வலுப் பெற்று அருகில் உள்ள பொருள்களைக் கவர்ந்து இழுக்கும். வாயு தூசு நிரம்பிய இந்தப் பொருள்கள் கருந்துளையை மிக வேகமாகச் சுற்றிச் சுழலும்.
தலைச்சுற்றும் வேகத்தில் இவை சுழலுவதால் ரேடியோ அலைகள், காமா கதிர்கள், எசஸ் கதிர்கள் எனப் பல்வேறு வகை மின்காந்த அலைகளை உமிழும்.
சுழலும் இந்தக் கருந்துளையைச் சுற்றி உருவெடுக்கும் காந்தப் புலத்தின் காரணமாகக் கருந்துளையின் இரண்டு துருவங்கள் அருகே ஜெட் போல மீ ஆற்றல் வாய்ந்த கதிர்கள் வெளிப்படும்.
கருந்துளை சுழல்வதால், கலங்கரை விளக்கு சுழல்வது போல் இந்த ஜெட் கதிர் சுழலும். சுழலும் இந்தச் சமதளத்தில் தற்செயலாகப் பூமி அமைந்தால் சுழலும் ஜெட் கதிர் பல்ஸ் துடிப்பு போலப் பூமியில் படும். இதுவே 'பிளேசர்' வகை ராட்சச கருந்துளை.
இதே கருந்துளையின் ஜெட் பூமி நோக்கி இல்லை என்றால் அதை குவாசர் என்றும் மைய கருந்துளை தூசியினால் மறைக்கப்பட்டால் ரேடியோ கேலக்ஸி என்றும் மயங்கிவிடுகிறோம் எனச் சமீபத்தில் விஞ்ஞானிகள் புரிந்து தெளிந்துள்ளனர்.
இந்தக் கருந்துளையின் பெயரில் உள்ள VLASS என்பது "வெரி லார்ச் அர்ரே ஸ்கை சர்வே" (The Very Large Array Sky Survey) என்பதன் சுருக்கம் ஆகும்.
செப்டம்பர் 2017 முதல் வாகனத்தில் ஜி. ஜான்ஸ்கி வெரி லார்ச் அர்ரே வானொலி தொலைநோக்கி கொண்டு வானில் உள்ள வானொலி அலைகளை உமிழும் வான் பொருட்களின் கணக்கெடுப்பு செய்கிறனர்.
இதில் இனம் காணும் வான் பொருள்களைப் பட்டியல் செய்கின்றனர். எனவே இந்தக் கருந்துளை VLASS பட்டியலில் உள்ள வன்பொருள் என நாம் புரிந்துகொள்ளலாம்.
ஆங்கில எழுத்து J என்பது 2000 ஆண்டு சம இரவு பகல் புள்ளியிலிருந்து கணிதம் செய்து இந்த வான் பொருளின் இடத்தை நிர்ணயம் செய்துள்ளார் என்று பொருள். பூமியில் ஒவ்வொரு புள்ளியையும் அட்சரேகை தீர்க்கரேகை கொண்டு அடையாளப்படுத்துவது போல வான் மண்டல அட்சரேகை தீர்க்கரேகை தான் 041009.05-013919.88 என்கிற எண்கள். இதைப் பார்த்ததுமே வானவியலாளர்கள் இந்த வான் பொருளின் இருப்பிடம் என்ன என எளிதில் அறிந்துகொள்வார்கள்.
ஆகத்தொலைவான பிளேசர்VLASS கணக்கெடுப்பை சாடையாகத் தேடியபோது சுமார் இருபது இடங்களில் பிளேசர் வகைக் கருந்துளை இருக்கலாம் என முதற்கட்டத் தகவல் கூறியது.
இவற்றைக் கூர்ந்து ஆய்வு செய்தபோது J0410−0139 என்கிற ரேடியோ அலைகளை உமிழும் வான் பொருள் பிளேசர் வகைக் கருந்துளை எனவும், இது பிரபஞ்சத்தின் குழந்தைப் பருவத்தைச் சார்ந்தது எனவும் புலனாகியது.
இதுவரை பல்லாயிரக்கணக்கான உயிர்ப்புள்ள கோலடி கருக்களை இனம் கண்டிருந்தாலும் அதில் வெறும் 3000 சொச்சம் மட்டுமே பிளேசர் வகை சார்ந்தது. எனவே ஒரு பிளேசர் கண்டால் பல ஆயிரம் உயிர்ப்புள்ள கோலடி கருக்கள் இருக்கலாம் என முடிவுக்கு வரமுடியும்.
இவற்றில் 2020இல் இனம் காணப்பட்ட SO J0309+27 என்கிற வான்பொருள்தான் இதுவரை ஆகலின்மையான பிளேசர் வகைக் கருந்துளையாக அறியப்பட்டது. இது பிரபஞ்சம் தோன்றி 800-900 பத்து லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு உருவானது.
பிரபஞ்சம் தோன்றி 800-900 பத்து லட்சம் ஆண்டுக்காலத்தில் மீ நிறை கொண்ட ராட்சச கருந்துளை வளரமுடியும், ஆனால் வெறும் 700 பத்து லட்சம் ஆண்டுகளில் இப்படிப்பட்ட ராட்சத கருந்துளை வளர்ந்தது மர்மமே. கருந்துளைகள் குறித்தும் அவை எப்படி சடசடவென உருவாக்கி வளர்கின்றன என்பது குறித்தும் ஏற்கனவே நமக்கு இருந்த கருதுகோள்களை நீக்கி புத்தாக்கம் செய்யவேண்டும் என்கின்றார் சிலர்.
ராட்சத கருந்துளையின் ஜெட் திசை எதுவாகவும் இருக்கலாம். எனவே நம்மை நோக்கி நேராக ஜெட் திசை அமைவது என்பது பரிசுச்சீட்டு பரிசு போல. பல கோடி பேர் பரிசுச்சீட்டு சீட்டு வாங்கி இருந்தால் தானே பத்து கோடி பரிசுச்சீட்டு பரிசு ஒருவருக்குக் கிடைக்கும். எனவே பிரபஞ்சத்தின் குழந்தை நிலையில் நம்மை நோக்கி ஜெட் உள்ள பிளேசர் இருந்தால் வேறு திசை நோக்கி ஜெட் கொண்ட பல லட்சம் ராட்சத கருந்துளைகள் இருக்கவேண்டும்.
எனவே குழந்தைப் பருவப் பிரபஞ்சத்தின் தற்போதைய புரிதலை இந்தக் கண்டுபிடிப்பு கேள்விக்குள்ளாக்குகிறது. குறிப்பாகக் கருந்துளைகளின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சி; அவை எவ்வளவு பெரியதாக இருக்கும், எவ்வளவு விரைவாக வளர்ச்சியடையும், எத்தனை இருந்திருக்கலாம் முதலிய குறித்த நம்முடைய அனுமானங்கள் அனைத்தும் சவால் செய்யப்பட்டுள்ளன.
(த வி வெங்கடேஸ்வரன், முன்னாள் முதுநிலை விஞ்ஞானி, அறிவியல் எழுத்தாளர், தற்போது மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வருகை பேராசிரியராகப் பணியாற்றுகிறார்)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு