மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் மாணவி ஒருவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மதுரையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் அந்தப் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு பள்ளி சீருடைக்கு அளவெடுப்பதற்காக ஒரு ஆண் டெய்லரும், ஒரு பெண் டெய்லரும் வந்திருந்தனர்.
அவர்கள் ஒவ்வொரு மாணவர்களுக்கும் வகுப்பு வாரியாக அளவெடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆண் டெய்லரான பாரதி மோகன் என்பவர் ஒரு மாணவியிடம் தவறாக நடந்துள்ளார். இதனால் அந்த மாணவி அளவு எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியரிடம் சென்று முறையிட்டார். ஆனால் அதனை சிறிதும் கண்டுகொள்ளாமல் கண்டிப்பாக சீருடைக்கு அளவெடுக்க வேண்டும் என்று ஆசிரியை சாரா அந்த மாணவியை அளவெடுக்க அனுப்பி வைத்தார்.
இதைத்தொடர்ந்து அந்த மாணவி பள்ளி நிர்வாகத்திடம் சென்று இது தொடர்பாக புகார் கொடுத்த நிலையில் அவர்களும் அது பற்றி நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த மாணவி மதுரை நகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி பள்ளிக்கு வந்த சப் இன்ஸ்பெக்டர் கவிதா விசாரணை நடத்தினார். விசாரணையின் போது மாணவியிடம் பாரதி மோகன் தவறாக நடந்ததும், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து பாரதி மோகன், அவரது சகோதரியான டெய்லர் கலாதேவி மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஆசிரியை சாரா ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.