தோனியின் சிக்சர்களாலும் தடுக்க முடியாத சிஎஸ்கேயின் வரலாற்றுத் தோல்வி
BBC Tamil March 29, 2025 08:48 AM
Getty Images ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது முறையாக 9-ஆவது இடத்தில் களமிறங்கினார் தோனி

சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

தோனி களமிறங்கி சிக்சர்களையும், பவுண்டரிகளையும் அடித்த போதும் சிஎஸ்கே அணியை தோல்வியில் இருந்து காப்பாற்ற முடியவில்லை.

சேப்பாக்கம் மைதானத்தில் 2008-க்குப் பிறகு முதன் முறையாக ஆர்சிபி அணியிடம் சிஎஸ்கே அணி தோல்வியடைந்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி அடைந்த மிகப்பெரிய தோல்வியும் இதுதான்.

டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதிரடி ஆட்டத்தைப் பெங்களூரு அணி தொடங்கியது. 16 பந்துகளில் நான்கு ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்து 32 ரன்களை சேர்ந்த பில் சால்ட் தோனியின் ஸ்டம்பிங்கில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய தேவ்தட் படிக்கலும் 27 ரன்களின் அவுட் ஆனார்.

Getty Images

நிதானமாக ஆடிவந்த விராத் கோலி, 30 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இறுதியாக பெங்களூரு அணி,7 விக்கெட் இழப்புக்கு 196 ரன்களை குவித்தது.

கேப்டன் ரஜத் படிதார் 51 ரன்களை எடுத்தார். நூர் முகமது 3 விக்கெட்களை வீழ்த்தினார்

197 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணியின் துவக்க ஆட்டகாரர் ரச்சின் ரவீந்தரா 41 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கேப்டன் ரித்துராஜ் கெய்க்வாட் டக் அவுட் ஆன நிலையில், அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ரவீந்திர ஜடேஜா 25 ரன்களும், தோனி ஆட்டமிழக்காமல் 30 ரன்களும் சேர்த்தனர்.

சென்னை பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் 8 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Getty Images கோப்புப் படம்

இந்த ஐபிஎல் தொடரில், இரு அணிகளுமே வெற்றியுடன் தங்களது கணக்கைத் தொடங்கின. மார்ச் 23ஆம் தேதி தனது முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

அதேபோல, ஐபிஎல் டி20 தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதுவரை மொத்தமாக 33 ஐபிஎல் போட்டிகளில், இரு அணிகளும் மோதியுள்ளன. அதில் 21 போட்டிகளில் வென்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கையே ஓங்கியுள்ளது. ஆர்சிபி அணி, 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

குறிப்பாக சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் 2008, மே 20ஆம் தேதி கடைசியாகவும், முதல்முறையாகவும் சிஎஸ்கே அணியை 14 ரன்களில் ஆர்சிபி அணி வென்றது. அதன் பிறகு கடந்த 16 ஆண்டுகளாக 8 முறையும் சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியை ஆர்சிபியால் வெல்ல முடியாமல் இருந்தது.

Getty Images நூர் அகமது சிஎஸ்கே அணி விவரம்

ருதுராஜ் கெய்க்வாட்(கேப்டன்), மகேந்திர சிங் தோனி, மதீஷா பதிரணா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, டேவன் கான்வே, ராகுல் திரிபாதி, ரச்சின் ரவீந்திரா, ரவிச்சந்திரன் அஸ்வின், கலீல் அகமது, நூர் அகமது, விஜய் சங்கர், சாம் கரன், ஷேக் ரசீத், அன்சுல் கம்போஜ், முகேஷ் சௌத்ரி, தீபக் ஹூடா, குர்ஜப்நீத் சிங், நேதன் எல்லீஸ், ஜேமி ஓவர்டன், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ணா கோஷ், ஸ்ரேயாஸ் கோபால், வன்ஷ் பேடி, அந்த்ரே சித்தார்த்.

Getty Images கோப்புப் படம்
ஆர்சிபி வீரர்கள் விவரம்

விராட் கோலி, ரஜத் பட்டிதார், யஷ் தயால், ஜோஷ் ஹேசல்வுட், பில் சால்ட், ஜிதேஷ் ஷர்மா, புவனேஷ்வர் குமார், லியாம் லிவிங்ஸ்டோன், ராசிக் தார், குர்னல் பாண்டியா, சூயஷ் ஷர்மா, ஜேக்கப் பெத்தல், ரோமாரியோ ஷெப்பார்ட், டிம் டேவிட், தேவ்தத் படிக்கல், நுவான் துஷாரா, இங்கிடி, ஸ்வப்னில் சிங், மனோஜ் பந்தகே, ஸ்வஸ்திக் சிகாரா, அபிநந்தன் சிங், மோகித் ரதே.

Getty Images கோப்புப் படம் சிஎஸ்கே Vs ஆர்சிபி

களத்திலும் சரி, இணையத்திலும் சரி இரு அணிகளுக்கும் இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தைப் பற்றி தனியாக விவரிக்கத் தேவையில்லை. எனவே இரு அணிகள் மோதும் இந்தப் போட்டி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் 2024 சீசனில், ஆர்சிபி அணி 14 போட்டிகளில் 7 வெற்றிகள், 8 தோல்விகளுடன் 46% வெற்றி சதவீதத்தைப் பெற்றது. அதேநேரத்தில் சிஎஸ்கே அணி 14 போட்டிகளில் 7 வெற்றி, 7 தோல்விகளுடன் 50 சதவீத வெற்றிகளைப் பெற்றது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.