"இந்த தவறு எப்படி நடந்திருக்கும் எனக் கண்டறிய முடியவில்லை. ஆனால், எதையோ செய்து எங்கள் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டார்கள் என்று மட்டும் புரிகிறது. நான் இப்போது உயிருடன் இருப்பதே பெரிய விஷயம்..." எனக் கூறி கண்கலங்கினார் சிவநேசன்.
தேனி மாவட்டம் தேவாரத்தில் மளிகைக்கடை நடத்தி வரும் சிவநேசன், சைபர் குற்றங்களில் ஈடுபடும் கும்பலிடம் 24 லட்ச ரூபாயை இழந்திருக்கிறார்.
குழந்தைகளிடம் செல்போனை கொடுத்ததன் விளைவாக இந்த மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார், தேனி சைபர் குற்றப் பிரிவு ஆய்வாளர்.
மளிகைக் கடைக்காரரிடம் மோசடி நடந்தது எப்படி? மோசடிக் கும்பலிடம் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?
தேனி மாவட்டம் தேவாரத்தில் பலசரக்கு கடை நடத்தி வரும் சிவநேசன், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தனது வங்கிக் கணக்கு விவரங்களை சரிபார்ப்பது வழக்கம்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஸ்டேட் வங்கிக் கிளையில் உள்ள வங்கிக் கணக்கை அவர் சரிபார்த்தபோது அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
2024 பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் மார்ச் 15 வரையிலான காலகட்டத்தில் அவரின் வங்கிக் கணக்கில் இருந்து 24,69,600 ரூபாய் திருடு போனதை அறிந்தார். சுமார் பத்துக்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் மூலம் இந்த மோசடி நடந்துள்ளது.
"தேவாரம் ஸ்டேட் வங்கி கிளையின் மேலாளரிடம் முறையிட்டேன். அவர் உடனே எனது வங்கிக் கணக்கை ஆய்வு செய்தார். அப்போது, மனோஜ்குமார், அனில்குமார் என பலரின் கணக்குகளுக்கு பணம் சென்றிருப்பது தெரியவந்தது" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் சிவநேசன்.
வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை தானும் தனது மனைவியும் செல்போனில் வைத்திருந்ததாகக் கூறும் சிவநேசன், "இரவு 11 மணிக்கு மேல் தான் பணத்தைத் திருடியுள்ளனர்" என்கிறார்.
"மார்ச் மாதம் என்பதால் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்காக இந்தப் பணத்தை வங்கிக் கணக்கில் வைத்திருந்தேன். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இப்படியொரு வழக்கத்தைக் கையாண்டு வருகிறேன்" எனக் கூறுகிறார் சிவநேசன்.
தனது பணம் திருடப்பட்டதை அறிந்ததும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தேனி மாவட்ட சைபர் குற்றப் பிரிவில் சிவநேசன் புகார் அளித்துள்ளார்.
"புகார் கொடுத்த சில மாதங்களுக்குள் சைபர் குற்றப் பிரிவு ஆய்வாளர்கள் மாறிக் கொண்டே இருந்தனர். தற்போதைய ஆய்வாளர் வெங்கடாசலம்தான் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து கொடுத்தார்" எனக் கூறுகிறார் சிவநேசன்.
பணம் கொள்ளை போன பின்னணி குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சிவநேசன், " எனக்கு திருமணம் நடந்து 18 ஆண்டுகள் கழித்து இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இருவருக்கும் மூன்று வயது தான் ஆகின்றது. வீட்டில் உள்ள இரண்டு செல்போனிலும் பொம்மை படங்களை குழந்தைகள் பார்ப்பார்கள்" என்கிறார்.
"கடந்த ஆண்டு பிப்ரவரியில் செல்போனில் எந்த பட்டனை குழந்தைகள் அழுத்தினார்கள் எனத் தெரியவில்லை. ஆனால், அதன்பிறகு செல்போன் பயன்படுத்த முடியாத அளவுக்கு ஹேங் ஆகிவிட்டது" எனக் கூறுகிறார் சிவநேசன்.
இதன்பிறகே தனது வங்கிக் கணக்கில் இருந்து 24 லட்ச ரூபாய்க்கும் மேல் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்தப் பணத்தில் வீடு கட்டுவதற்காக பெறப்பட்ட ஒன்பது லட்ச ரூபாய் வங்கிக் கடனும் அடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
"வீட்டு கடனுக்கு டாப்அப் லோன் என்ற பெயரில் 10 லட்ச ரூபாயை கொடுத்தனர். பணம் பறிபோவதற்கு 1 மாதம் முன்பு இந்தப் பணம் வந்தது. இதில் இருந்து ஒரு லட்ச ரூபாயை மட்டுமே எடுத்தேன். இதற்கு மாத தவணையாக 15 ஆயிரம் செலுத்தி வருகிறேன்" எனவும் அவர் தெரிவித்தார்.
காவல்துறையில் புகார் கொடுத்து கிட்டதட்ட ஓராண்டு கடந்த பின்னரும் புகார் மனு கிடப்பில் இருந்துள்ளது. தேனி சைபர் குற்றப்பிரிவு ஆய்வாளராக பொறுப்பேற்ற வெங்கடாசலம், சிவநேசனை அழைத்து விசாரித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக பிகார் தலைநகர் பாட்னாவை சேர்ந்த அர்ஜூன்குமார் என்ற நபரை சில வாரத்துக்கு முன்பு தேனி சைபர் குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
"சிவநேசனின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்த கும்பலின் வங்கிக் கணக்கு விவரங்களை சரிபார்த்தபோது ஒரு கணக்கு மட்டும் செயலில் இருந்துள்ளதை அறிந்தோம்," எனக் கூறுகிறார் தேனி சைபர் குற்றப் பிரிவு ஆய்வாளர் வெங்கடாசலம்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அந்தக் கணக்கு பிகாரை சேர்ந்த நீரஜ் குமார் என்பவர் பெயரில் இருந்தது. அந்தக் கணக்கில் ஒரு செல்போன் எண் இணைக்கப்பட்டிருந்தது" என்கிறார்.
அந்த செல்போன் எண்ணைப் பின்தொடர்ந்து சென்றபோது பாட்னாவில் உள்ள பண்டாரக் என்ற பகுதியில் அர்ஜூன் குமார் என்ற நபரை சைபர் கிரைம் போலீஸார் நேரில் சென்று கைது செய்துள்ளனர். இவர் கட்டட கொத்தனார் ஒருவருக்கு உதவியாளராக வேலை செய்து வருவது தெரியவந்துள்ளது.
"அவர் வேறொரு நபர் கேட்டதற்காக நான்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்கி கொடுத்துள்ளார். கூடவே சில சிம்கார்டுகளை வாங்கிக் கொடுத்துள்ளார். இதற்காக, கமிஷன் தொகையை பெற்றுள்ளார்" எனக் கூறுகிறார் வெங்கடாச்சலம்.
இந்த வழக்கில் அர்ஜூன் குமாரின் செல்போனை பறிமுதல் செய்துள்ளதாகக் கூறும் வெங்கடாச்சலம், "சிவநேசனின் வங்கிக் கணக்கில் 10 பரிவர்த்தனைகள் மூலம் பணம் எடுத்துள்ளனர். விசாரணையில் இந்தக் கும்பலின் நெட்வொர்க் நீண்டுகொண்டே செல்கிறது" எனவும் அவர் குறிப்பிட்டார். அர்ஜூன் குமாரிடம் இதுவரை எந்தப் பணமும் மீட்கப்படவில்லை.
குழந்தைகள் விளையாட்டுத்தனமாக செல்போனை கையாண்டபோது இந்த தவறு நடந்துள்ளதாகவும் ஆய்வாளர் வெங்கடாசலம் தெரிவித்தார்.
எவ்வாறு தற்காத்துக் கொள்வது?"இதுபோன்ற மோசடிகளில் இருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது?" என, சைபர் தொழில்நுட்ப வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயனிடம் பிபிசி தமிழ் கேட்டது.
"தங்களின் வங்கிக் கணக்கு விவரங்களை பலரும் செல்போனில் தான் வைத்திருப்பார்கள். இணைய பரிவர்த்தனை என்பது திறந்தநிலையில் இருக்கும். புதிதாக எந்த செயலியை பதிவிறக்கம் செய்தாலும், செல்போனின் கட்டுப்பாடு வேறு நபரிடம் செல்வதை நாம் அறிவதில்லை" எனக் கூறுகிறார்.
"குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் சில செயலிகளை பயன்படுத்துகின்றனர். இது பார்ப்பதற்கு விளையாட்டு, லோன் என ஈர்க்கக் கூடியதாக இருக்கும். அதன் நோக்கத்துக்கு மாறானதாக இது இருக்கும். இதை பதிவிறக்கம் செய்தாலே மூன்றாம் நபரின் கட்டுப்பாட்டுக்கு செல்போன் சென்றுவிடும்" எனக் கூறுகிறார்.
செல்போனில் ஓடிபி எண் முதல் எஸ்எம்எஸ் வரை மோசடி கும்பலால் அறிந்து கொள்ள முடியும் எனவும் இதன்மூலம் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தைத் திருடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனை தவிர்ப்பதற்கு சில வழிமுறைகளையும் அவர் பட்டியலிட்டார்.
* ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யும்போது அதன் கவர்ச்சிகரமான பெயர்களை கவனிக்காமல் அதன் தயாரிப்பு நிறுவனத்தைக் கவனிக்க வேண்டும்.
* குழந்தைகளிடம் செல்போன் கொடுக்கும்போது அவர்கள் சில புதுமையான செயலிகளை ஆராய்வது வழக்கம். அவர்களிடம் செல்போன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
* வங்கி கணக்கு விவரங்கள், இணைய பரிவர்த்தனை தொடர்பான தரவுகளை செல்போனில் வைத்திருப்பது சரியானதல்ல.
புதுப்புது செயலிகளை நம்பி பலரும் ஏமாறுவதாகக் கூறும் கார்த்திகேயன், "திருடப்படும் பணம் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மடைமாற்றப்படுவதால் அவ்வளவு எளிதில் மீட்க முடிவதில்லை" எனக் கூறினார்.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு