ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே சலூரு மண்டலத்தில் உள்ள மர்ரி வாணி வலசா கிராமத்தை சேர்ந்த 20 வயதான ஐஸ்வர்யா, அங்குள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்தார். அதன்பிறகு அருகிலுள்ள தத்தி வலசை கிராமத்தைச் சேர்ந்த ராம்பாபு என்ற நபர், ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை வாகனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். ஏற்கனவே திருமணமாகி இருந்தும் அதை மறைத்து, ஐஸ்வர்யாவிடம் காதலிப்பதாக கூறி நெருக்கம் வளர்த்தார். இதை உண்மை என நம்பி ஐஸ்வர்யாவும் அவருடன் பழகினார். அதோடு தன்னை திருமணம் செய்யுமாறு ஐஸ்வர்யா கேட்டபோது வாலிபர் மறுத்துவிட்டார்.
கடந்த மார்ச் 27ஆம் தேதி, இருவரும் விசாகப்பட்டினம் அரிலோவா பகுதியில் சந்தித்து பேசினர். அப்போது மீண்டும் திருமண விசயத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த ராம்பாபு, ஐஸ்வர்யாவின் கழுத்தை கயிறால் இறுக்கி கொலை செய்தார். பின்னர் இது தற்கொலை என பொய்யான சதியை நடத்தத் திட்டமிட்டார். தனது நண்பர் ஒருவரை அழைத்து, உடலை துணியில் போர்த்து பைக்கில் வைத்துக்கொண்டு கிராமப்புற வழியாக கொண்டு சென்றார். ஏதேனும் சந்தேகம் எழாமல் இருக்க, தேசிய நெடுஞ்சாலை வழியை தவிர்த்து பயணித்தனர்.
வழியிலே பெட்ரோல் தீர, மற்றொரு நண்பரின் உதவியுடன் பெட்ரோல் வாங்கி பைக்கை இயக்கினர். மூவரும் இணைந்து ஐஸ்வர்யாவின் உடலை சுமார் 105 கிலோமீட்டர் தூரம் கொண்டு சென்று, ஒரு முந்திரி தோட்டத்தில் தூக்கில் தொங்க விட்டனர். இந்தக் கொடூர சம்பவம் குறித்து தெரிந்த அப்பகுதி மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் வழங்கினர். போலீசார் நடத்திய விசாரணையில், ராம்பாபுவின் காதல், கொலை மற்றும் சதித் திட்டம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரை கைது செய்தனர். மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த மற்ற இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.