மகாராஷ்டிரா மாநிலத்தில் கிராம அபிவிருத்தி துறை அமைச்சரின் மகன் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான பைக் ஸ்டண்ட்களை செய்து அதனை இணையத்தில் பதிவிட்ட சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மகாராஷ்டிரா மாநிலத்தின் கிராம அபிவிருத்தி துறை அமைச்சராக ஜெயக்குமார் கோரே என்பவர் செயல் பட்டு வருகிறார். இவரது மகன் ஆதித்யராஜ் கோரே ஆவார்.
இவர் புனே- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சதாரா-கோலாப்பூர் இடையில் அமைந்துள்ள சாலையில் தனது விலை உயர்ந்த வெளிநாட்டு பைக்கில் உயிருக்கு ஆபத்தான ஸ்டண்டுகளை செய்திருக்கிறார். பின்னர் அதனை வீடியோவாக பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இந்த வீடியோக்களை முதலில் சமூக சேவை செய்து வரும் பையா பாடில் என்பவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.
அந்த வீடியோ வைரலான நிலையில் ஆதித்யராஜ் ஓட்டிய பைக்கில் நம்பர் பிளேட் இல்லாததும், உயிருக்கு ஆபத்தான இது போன்ற ஸ்டண்ட்களை செய்வது மிகவும் தவறு என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அதற்குப் பிறகு ஆதித்யராஜ் கோரே தனது instagram பக்கத்தில் இருந்த வீடியோக்களை நீக்கினார்.
இந்த சம்பவத்தில் காவல்துறையினரும், வாகனத்துறை அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருக்கின்றனர் என பையா பாடில் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் “ஒரு சாதாரண நபர் இந்த செயலை செய்திருந்தால் அவருடைய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும், கூடுதலாக அபராதம் அல்லது 3 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்.