மியான்மர் நிலநடுக்கத்தில் பலி 1,000-ஐத் தாண்டியது - ஆங் சாங் சூச்சி என்ன ஆனார்?
BBC Tamil March 29, 2025 08:48 PM
Getty Images

மார்ச் 28 அன்று மியான்மர் நாட்டின் மையப் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 1007 பேர் உயிரிழந்ததாகவும், 2,376 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் ராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மாண்டலே நகரில் மட்டும் 1500 வீடுகள் சேதமடைந்ததாக மியான்மரின் ராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்சாரம் தடைபட்டதால் மியான்மரின் பெருநகரங்கள் பலவும் இருளில் மூழ்கின. மியான்மர் நாட்டின் ராணுவம் மற்றும் இதர துறைகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

தாய்லாந்திலும் நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நிலடுக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியா மற்றும் உலக நாடுகள் பலவும் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளன.

மியான்மரை உலுக்கிய நிலநடுக்கம்

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றின்படி, நிலநடுக்கத்தின் மையப்புள்ளி மியான்மர் நகரான சர்காயிங்-ன் வடமேற்கில் 16 கிலோமீட்டரில், அமைந்திருந்தது. இந்த பகுதி தலைநகர் நேபிடோவிற்கு வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

மியான்மரில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டு 12 நிமிடங்களே ஆன நிலையில், மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரண்டாவது ஏற்பட்ட நிலநடுக்கம் 6.4 ஆக பதிவானது. இதன் மையம், சர்காயிங்கிற்கு தெற்கே 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

நேபிடோவில் சாலைகள் சிதைந்திருப்பதை படங்கள் காட்டுகின்றன. நாட்டின் ராணுவ அரசு 6 பகுதிகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Reuters தாய்லாந்தில் முழுமையாக கட்டி முடிக்கப்படாத 30 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது மியான்மருக்கு இந்தியா உதவி

நிலநடுக்கம் மியான்மரை புரட்டிப் போட்டுள்ள நிலையில், அதன் ராணுவ ஆட்சியாளர் மின் ஆங் ஹிலெய்ங் உலக நாடுகளிடம் உதவி கேட்டுள்ளார். "எந்தவொரு நாடோ, அமைப்போ அல்லது தனி நபரோ மியான்மருக்கு வந்து உதவ விரும்பினால் வரவேற்கிறோம்." என்று அவர் தனது தொலைக்காட் உரையில் கூறியுள்ளார்.

அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏஷியான் ஆகியவை மியான்மருக்கு உதவ உறுதியளித்துள்ளன.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர் மக்களுக்கு உதவுவதற்காக முதல் தொகுதி நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

INDIAN GOVERNMENT ஆங் சாங் சூச்சி என்ன ஆனார்?

மியான்மரில் ராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆங் சாங் சூச்சி இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்படவில்லை என்று பிபிசியின் பர்மியன் சேவைக்கு சிறைத்துறை அதிகாரிகளுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். தலைநகரில் உள்ள சிறைச்சாலையில் சூச்சி பாதுகாப்பாக உள்ளார் என்று அந்த தகவல்கள் கூறுகின்றன.

2021-ஆம் ஆண்டு ராணுவப் புரட்சியால் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட சூச்சி, அது முதல் அங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 2023-ம் ஆண்டு வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்ட அவர் பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Getty Images தாய்லாந்தில் 6 பேர் பலி

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அண்டை நாடுகளான தாய்லாந்து மற்றும் சீனாவிலும் உணரப்பட்டது. தாய்லாந்தில் முழுமையாக கட்டி முடிக்கப்படாத 30 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது.

இதில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளதாக தாய்லாந்தில் உள்ள தேசிய அவசர கால மருத்துவ சேவை மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக 43 பேரை காணவில்லை என தெரிவித்திருந்தது.

கட்டடம் இடிந்து விழுந்தபோது சுமார் 320 தொழிலாளர்கள் அந்த இடத்தில் இருந்ததாகவும், மின் தூக்கியில் 20 பேர் சிக்கிக்கொண்டிருப்பதாகவும் முகநூல் பதிவொன்றில் தெரிவித்திருந்தது.

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறித்து தெளிவில்லாத நிலையில், சம்பவ இடத்திலேயே ஒரு கள மருத்துவமனை அமைக்கப்பட்டு மீட்புப் பணியாளர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில் பாங்காக்கில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். இரண்டாம் நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்ற சூழலில், தாய்லாந்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் ஒரு கட்டடத்தின் கூரை மீது இருந்த தண்ணீர் தெறித்து பல தளங்களை தாக்கி இறுதியாக கீழே தெருக்களில் ஊற்றியது.

பிபிசி குழுவினர் பாங்காங்கில் கட்டடங்கள் அசைந்ததாக தெரிவிக்கின்றனர். மேலும், மக்கள் தெருக்களில் தஞ்சமடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

நில அதிர்வு தலை சுற்றலை தருமளவு இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

AFP மியான்மர் தலைநகரில் இடிந்து விழுந்த கட்டடம் 'நூற்றுக்கணக்கானவர்கள் இறந்திருக்கலாம்'

மியான்மரின் மாண்டலேவில் இருக்கும் மீட்புக் குழுவைச் சேர்ந்த ஒருவர் சேதம் மிகப் பெரியது என பிபிசியிடம் தெரிவித்தார்.

''உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் மிகவும் அதிகம். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்துகொண்டிருப்பதால் இப்போதைக்கு எங்களால் இவ்வளவுதான் சொல்லமுடியும்," என்று அவர்கள் கூறுகின்றனர்.

''உயிரிழந்தவர்கள் எவ்வளவு பேர் என்பது சரியாக இன்னமும் தெரியவில்லை ,ஆனால் பல நூறு பேர் இறந்திருப்பார்கள்" என்று அவர்கள் தெரிவித்தனர்.

Getty Images 'நிலநடுக்கத்தை நீண்ட நேரம் உணர்ந்தேன்'

மியான்மரின் மிகப்பெரிய நகரான யாங்கானில் வசிக்கும் சோ லிவின் நிலநடுக்கத்தை நீண்ட நேரம் உணர்ந்ததாக தெரிவித்தார்.

நாட்டின் முன்னாள் தலைநகரான இந்த நகரில் பரவலாக சேதம் ஏற்பட்டதாக தெரியவில்லை என அவர் தெரிவித்தார். எதிர்வரும் நாட்களில் இதைவிட பெரிய நிலநடுக்கம் ஏற்படுமோ என மக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

AFP மியான்மரில் சிகிச்சைக்காக காத்திருக்கும் மக்கள் விமான நிலையத்தில் பதற்றம்

சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர் மியான்மரின் மண்டலே விமானநிலையத்தில் எடுக்கப்பட்டதாக தோன்றும் உறுதிசெய்யப்படாத காணொளி வெளியாகியுள்ளது.

அதில் மக்கள் கூச்சலிட்டுக்கொண்டு தார்சாலையில் அமர்ந்திருக்கின்றனர். பின்புலத்தில் ஜெட்விமானம் ஒன்று காணப்படுகிறது.

''அமருங்கள், ஓடாதீர்கள்'' என்ற குரல்கள் எழுவதை கேட்கமுடிகிறது.

ஆன்லைனில் வெளியாகும் வீடியோக்களின் நம்பக்கத்தன்மையை உறுதி செய்ய பிபிசி முயற்சி செய்துகொண்டிருக்கிறது.

Myanmar's military regime மியான்மர் தலைநகர் நேபிடோவில் சாலைகள் சிதைந்துள்ளன மியான்மரிலிருந்து தகவல்களை பெறுவது ஏன் கடினம்?

மியான்மரில் 2021ஆம் ஆண்டு முதலே ராணுவம் ஆட்சி செய்து வருவதால், தகவல் பெறுவது கடினமாக இருக்கிறது. உள்ளூர் வானொலி, தொலைக்காட்சி, அச்சு மற்றும் ஆன்லைன் ஊடகங்களை அரசு கட்டுப்படுத்துகிறது.

இணைய சேவை பயன்பாடும் கட்டுபாட்டுக்கு உட்பட்டது.

தொலைத்தொடர்பு வசதிகளும் துண்டிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. பிபிசியால் அடிமட்டத்தில் இயங்கும் உதவி முகமைகளை அணுகமுடியவில்லை.

Reuters

தாய்லாந்து நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் இல்லை என்பதுடன் அங்கு அபூர்வமாக உணரப்படும் அனைத்து நிலநடுக்கங்களும் அண்டை நாடான மியன்மாரில் ஏற்படுகின்றன.

பாங்காங்கில் உள்ள கட்டடங்கள் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களை தாங்ககூடியவகையில் வடிவமைக்கப்பட்டவை அல்ல என்பதால், கட்டமைப்புக்கு ஏற்படும் பாதிப்பு தீவிரமானதாக இருக்கலாம்.

நிலநடுக்கம் ஏற்பட்ட போதுதான் வீட்டில் சமைத்துக்கொண்டிந்ததாக பாங்காங்கில் வசிக்கும் பிபிசி செய்தியாளர் புய் து பிபிசி உலக சேவையின் நியூஸ்டே நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

"நான் மிகவும் பதற்றத்தில் இருந்தேன், நான் அச்சமடைந்திருந்தேன்," என்கிறார் அவர். "அது என்னவென்றே எனக்கு தெரியவில்லை, ஏனென்றால், பாங்காங்கில் இது போன்ற ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு பத்தாண்டுகளுக்கு மேல் இருக்கும் என நினைக்கிறேன்."

"எனது அபார்ட்மெண்டில் சுவர்களில் சில வெடிப்புகளை மட்டும் பார்த்தேன், நீச்சல் குளங்களிலிருந்து தண்ணீர் வெளியே தெளித்தது, மற்றும் மக்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.

பின்னதிர்வு ஏற்பட்டவுடன் அவர் மேலும் பலருடன் சேர்ந்து தெருவுக்கு ஓடினர். "என்ன நடந்தது என புரிந்துகொள்ள நாங்கள் முயன்றுகொண்டிருந்தோம்," என்கிறார் அவர்.

"பாங்காங்கில் உள்ள கட்டடங்கள் நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும்வகையில் கட்டமைக்கபடவில்லை, எனவே பெரிய அளவு சேதம் இருக்கப் போகிறது என நான் நினைக்கிறேன்,"

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.