ஆந்திர மாநிலத்தில் சத்ய சாய் மாவட்டத்தில் ஒரு பொற்கொல்லரின் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று மார்ச் 30ம் தேதி 55 வயதான கிருஷ்ணமா சாரி , அவரது மனைவி சரலம்மா, அவர்களது மகன்கள் சந்தோஷ் மற்றும் புவனேஷ் ஆகியோர் மடகாசிரா நகரில் உள்ள அவர்களது வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.ஞாயிற்றுக்கிழமை காலை கிருஷ்ணமா சாரியின் தந்தை வீட்டிற்குச் சென்றபோது, அவரது மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் இறந்து கிடப்பதைக் கண்டபோது தற்கொலைகள் வெளிச்சத்துக்கு வந்ததாக தெரிகிறது. அவர் உறவினர்களுக்குத் தகவல் அளித்து, காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.
தங்க நகைகளை சுத்திகரிக்கவும் வண்ணம் தீட்டவும் பயன்படுத்தப்படும் சயனைடை நால்வரும் உட்கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் வீட்டில் ஒரு சயனைடு பாட்டிலைக் கண்டுபிடித்ததாக ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
கிருஷ்ணமா சாரி மற்றும் சரலம்மா ஆகியோர் தங்கள் மகன்களைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டார்களா என்பதைக் கண்டறிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு போலீஸ் அதிகாரிஇது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரணங்களைக் கண்டறிய குடும்பத்தினரின் உறவினர்களின் வாக்குமூலங்களை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
நிதி மற்றும் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக தம்பதியினர் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.